டாக்டர் அம்பேத்கார் அவர்கள் மக்களை நேசித்த ஒரு அற்புதமான தலைவர். அவர் சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று கூறுகின்றார் எனில் அந்த சாதீய சமூகம் எந்தளவு கொடுமையாக இருந்திருக்கும்? அந்த தலைவர் இந்த வரிகளை எந்தளவு விரக்தியுடன்; கூறியிருப்பார்? அண்மையில் வேலூரில் டாக்டர் அம்பேத்காரின் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும்கூட சாதி வெறி பிடித்தவாகள்; டாக்டர் அம்பேத்காரின் சிலையைக்கூட விட்டுவைக்க மனம் இன்றி இருக்கின்றார்கள் எனில் இந்த சமூகம் எந்தளவு கொடுமையானது என்பது மட்டுமல்ல அது எள்ளவும் மாறவில்லை என்பதையும் உணர முடிகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த சாதீய கொடுமைகள் தொடருகின்றன என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் காட்டுகின்றன. கடந்தவருடம் உடுப்பிட்டி மகளிர் பாடசாலைக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டபொழுது உயர்சாதியினர் அதை தடுத்து நிறுத்தினார்கள். கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் ஏழாலை என்னும் இடத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் சிறீ முருகன் வித்தியாலயத்தில் தண்ணீர் தாங்கியில் விசம் கலக்கப்பட்டமையினால் 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ட்டனர். இது உயர் சாதியினரின் திட்டமிட்ட நாசகாரச் செயல் என்பதை பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள். இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றார்கள். ஆனால் பொலிஸ் இதுவரை குற்றவாளிகள் எவரையும் கைது செய்யவில்லை. தமிழ் தலைவர்களும்கூட வழக்கம்போல் இதனை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.
சில ஊடகங்கள் இது ஈபிடிபி கட்சியினரின் சதி என்றார்கள். இன்னும் சிலர் இது இராணு புலனாய்வு பிரிவின் வேலை என்றார்கள். ஆனால் யாருமே இப்பவும் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு என தனி பாடசாலை இருப்பது குறித்தோ அல்லது அந்த பாடசாலை குடிநீரில் சாதி வெறியர்களால் விசம் கலக்கப்பட்டமை குறித்தோ வெட்கப்படவோ அன்றி ஒரு கண்டனத்தையோ தெரிவிக்க முன்வரவில்லை. சுப்பர் சிங்கர் பாடகி ஜெசிக்காவின் வெற்றிக்காக தமிழ் இன உணர்வோடு இரவிரவாக இணைய மூலம் வாக்கு போட்ட புலம்பெயர் தமிழ் உறவுகள்கூட இந்த விடயம் குறித்து தமது முகநூலில் பேச விரும்பவில்லை. அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை தமிழ் மக்களாக இவர்கள் கருதவில்லையா? அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தமிழ் இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்று உணரவில்லையா? இத்தனை அழிவிற்கும் பிறகுகூட தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் இந்த சாதி வேறுபாடுகள் நீங்கவில்லையாயின் எப்பதான் இது நீங்கும்? அனைவரின் மத்தியில் தமிழர் என்ற உணர்வு ஏற்படாதா?
புலிகளின் காலத்தில் சாதி இல்லை என்றும் இப்போது புலிகள் இல்லாததால் அது மீண்டும் உருவெடுக்கிறது என்றும் சில புலி ஆதரவு ஆய்வாளர்கள் சொல்ல முற்படுகின்றனர். இது தவறு. புலிகள் சாதி பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சாதீயத்தை ஒழிக்க ஒருபோதும் முயன்றதில்லை என்பதே உண்மையாகும். புலிகளுக்கு முன்னரும் சாதிகளும் அதன் தீண்டாமைக் கொடுமைகளும் இருந்தன. அவை புலிகளின் காலத்திலும் இருந்தன. புலிகளுக்கு பின்னர் இப்போதும் அவை இருக்கின்றன. புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஆலையம் வல்வெட்டித்துறையில் இருக்கிறது. அதில் இன்றும்கூட தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் நுழைய அனுமதி இல்லை என்பது புலிகளின் சாதி ஒழிப்பு பற்றி விளங்கிக்கொள்வதற்கு போதுமான உதாரணமாகும்.
1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் போது தென்னிலங்கைப் பகுதியில் இருந்த தமிழர்கள் சிங்களக் காடையினரால் தாக்கப்பட்டு காயம்பட்ட நிலையில் , உடைமைகளைப் பறிகொடுத்த நிலையில் பரிதாபகரமான நிலையில் பஸ்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் நெல்லியடி என்னும் பகுதியில் இவ்வாறு பாதிக்கப் பட்டவர்கள் வந்து இறங்கியபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்த கன்பொல்லை கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் இதனை வெள்ளாளர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சண்டையாம் என்று கூறினார்கள். அவர்கள் இதனை தமிழ் மக்கள் மீதான இனக் கலவரம் என்று கருதவில்லை. இதைக் கேட்ட நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அன்றைய நிலை அதுதான். தாழ்த்தப்பட்ட சாதி மக்களையும் தமிழர்களாக உயர் சாதியினர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவர்களும் கலவரத்தில் பாதிக்கப்பட்டது தமிழர்கள் என்று கருதவில்லை.
1970களில் இதே கன்பொல்லை கிராமத்து தாழத்தப்பட்ட சாதி மக்களை உயர்சாதியினர் தாக்கியபோது அவர்கள் திருப்பி தாக்கினார்கள். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் துப்பாக்கி வெடிகுண்டுகள் எல்லாம் பயன்படுத்தினார்கள். அப்போது தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தார்கள். அவர்கள் நினைவாக நிறுவப்பட்ட நினைவுச் சின்னத்தை இன்றும்கூட கன்பொல்லை கிராம நுழைவாயில் காணலாம். மூன்று பேரில் இருவரின் சிலைகள் உடைக்கப்பட்டு ஒருவரின் சிலையுடன் இந்த நினைவுச்சின்னம் இன்று இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சாதி வெறியர்கள் தாழ்த்ப்பட்ட மக்களின் சிலைகளைக்கூட அனுமதிக்கவில்லை என்பதற்கு இந்த உடைந்த கன்பொல்லை தியாகிகளின் சிலையே சாட்சியாகும்.
கன்பொல்லை கிராமத்தை சேர்ந்த அந்த தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் உயர் சாதியினரின் சாதீயக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெற தங்கள் கிராமத்திற்கு “கனப்பொல”என சிங்களப் பெயர் சூட்டி புத்த பிக்கு ஒருவரை வரவழைத்து புத்த ஆலயம் ஒன்றையும் உருவாக்கினார்கள். அந்த புத்த ஆலையத்திற்காக ஒரு அரச மரத்தையும் நட்டிருந்தார்கள். ஆனால் நல்ல வேளையாக சிங்கள இராணுவம் சாதி வேறுபாடு இன்றி , பிரதேச வேறுபாடு இன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தாக்கியதால் அதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் திரட்டுவது விடுதலை இயக்கங்களுக்கு இலகுவாக அமைந்தது. பின்னர் அதன் மேல் தமிழ்த் தேசியம் கட்ட முனைந்தனர். ஆனால் அதன் அடித் தளத்தில் உள்ள சாதீயப் பிரச்சனை தீர்க்கப்படாமல் அவ்வாறே உள்ளது என்ற உண்மையை இந்த தமிழ் தேசியவாதிகள் காண மறுக்கின்றனர்.
1989ம் ஆண்டுப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் இயக்கம் போராடிக் கொண்டிருந்தபோது கரவெட்டிப் பகுதியில் அதன் ஒரு பிரிவுக்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த செங்கதிர் என்பவர் பொறுப்பு வகித்தார். அவருடன் அவருடைய சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களே பெரும்பாலும் இருந்தனர். அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடினாலும்கூட அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் அவருடைய சக போராளிகளுக்கும் உயர் சாதியினர் உணவு வழங்க மறுத்தனர். தங்குமிடம் கொடுக்க மறுத்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க தயங்கினர். இதனால் அவர் பல தடவை இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளானார். தனது போராளிகள் பலரை இழந்தார். அப்போது அவரிடம் “தமிழ் ஈழம் கிடைத்தால் என்னவாகும்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் எவ்வித தயக்கமும் இன்றி “என் சாதி மக்கள் அனைவரும் அகதிகளாக சிங்களப் பகுதியான அநுராதபுரம் செல்ல நேரிடும்” என்று கூறினார். இவ்வாறு அவர் கூறியதில் நான் எதுவும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அந்தளவுக்கு சாதியக் கொடுமைகளை அவர் அனுபவித்திருந்தார். அன்று மட்டுமல்ல இன்றும் கூட இந்த நிலைமைதான் உள்ளது. மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாகும்.
இந்த சாதீய கொடுமை நிலை குறித்து 2006ல் லண்டனுக்கு வருகை தந்திருந்த மதிப்புக்குரிய காலம்சென்ற தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களிடம் கேட்டேன். அவர் இந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தோழர் சண்முகதாசன் தலைமையில் போராடியவர். அவர் புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்திலும் வாழ்ந்தவர். அவர் “ சாதீயம் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. அது என்றாவது ஒருநாள் மீண்டும் பற்றி எரியும்” என்றார். அதுமட்டுமல்ல “சாதீயம் புலிகளின் துப்பாக்கி நிழலில் தூங்குகிறது. அது ஒருநாள் விழித்தக் கொள்ளும் என்றார். இவருடைய இக் கூற்று மறுக்க முடியாத உண்மையாகும். இன்று அதன் கொடுமைகளை காணும்போது அன்று தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பது புரிந்து கொள்ள முடிகிறது.
உண்மையாகவே தமிழ் தேசியத்தை விரும்புவோர் முதலில் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து சாதீயத்தை ஒழிப்பதற்கு முன் வரவேண்டும். அவ் வழியிலேயே தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப முயலவேண்டும். மாறாக தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அடக்கி யொடுக்கி பல வந்தமாக அவர்கள் கூறும் தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்பினால் அது என்றாவது ஒருநாள் பீறிட்டு வெடித்துக் கிளம்பி போலியாக கட்டியெழுப்பிய தமிழ் தேசியத்தையே சுக்கு நூறாக்கும். புலிகள் இயக்கத்தில் உப தளபதியாக இருந்த ராகவன் அவர்களும் “வடக்கில் நிகழும் இச் சாதிப்பிரச்சனை தீர்க்கப்படாவிடின் தமிழ் மக்கள் ஒருபோதும் விடுதலை பெறமுடியாது” என்று கூறியுள்ளார் என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதுமட்டுமல்ல இவர் இச் சாதீயப் பிரச்சனை குறித்து ஒரு சிறந்த ஆய்வு ஒன்றையும் செய்துள்ளார்.
இலங்கையில் குறிப்பாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் சாதி முறையும் தீண்டாமையும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. சாதி அமைப்பு என்பது இலங்கை முழுவதிலும் சிங்களவர் தமிழர் இருசாரார் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால் வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீண்டாமை என்ற நாசமும் சேர்ந்து இருக்கின்றது. நளவர், பள்ளர், பறையர் போன்ற சில சாதிகள் தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட சாதிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களாக மட்டுமன்றி மனிதர்களாகவும் கருதப்படவில்லை. தீண்டாமை என்பது மனிதன் மனிதனுக்குச் செய்யும் மிக மோசமான கொடுமை என்றே கூறவேண்டும்.
சாதி அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் ஒரு மிச்ச சொச்சமாகும். இலங்கையில் முதலாளித்துவம் ஒழுங்காக இல்லாமல் ஏற்ற இறக்கமாக வளர்ந்துள்ள படியால்தான் சாதி அமைப்பு இன்னமும் நின்று பிடிக்கிறது. சாதி அமைப்பு இன்று ஆளும் வர்க்கத்திற்கு துணைபுரிவதால் ஆளும் வர்க்கத்தின் அரசு இயந்திரம் அது அழியாமல் இருப்பதற்கு உதவி புரிகிறது. எனவே சாதீயத்திற்கு எதிரான போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தங்களைத் தாங்களே முற்போக்கு சக்திகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இதனைப் பார்க்கவோ புரிந்து கொள்ளவோ மறுக்கின்றனர். சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க தயங்குகின்றனர். இதுவே இன்றைய துரதிருஸ்டமான நிலையாகும்.
இந்தியாவில் உயர்சாதியினரான பிராமணர் வெறும் மூன்று வீதமே சனத்தொகையில் உள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால் பாராளுமன்ற அரசியலில் சில சலுகைகளை பெறமுடிகிறது. ஆனால் இலங்கையில் வடக்குப் பகுதியில் உயர் சாதியினர் பெரும்பான்மையினராகவும் தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக சிறுபான்மையினராக இருப்பதனால் எந்தப் பாராளுமன்றக் கட்சியும் உயர் சாதியினரைப் பகைத்துக் கொள்ளவோ , புண்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக இருந்தும் கூட அவர்கள் எந்தத் தேர்தல் தொகுதியிலும் பெரும்பான்மையைப் பெறமுடியாத விதத்தில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் கமிஸன் மற்றும் அதிகார வர்க்கம் அனைத்திலும் உயர் சாதியினர் இருப்பதால் அவர்களால் இவ்வாறு தந்திரமாக செய்ய முடிந்தது. ஆனால் இந்த நிலைமை தோழர்.சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன் மாறியது. ஏனெனில் அவருடைய கட்சியானது பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்வைத்தது. அது தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சலான தலைமையைக் கொடுத்தது.
1966ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் சுன்னாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு படுத்தியது. பொலிசாரும் உயர் சாதியினரும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடுத்த நிறுத்த எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் தடைகளை உடைத்தெறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் முற்றவெளியில் திரண்டார்கள். அங்கு அவ் மக்கள் மத்தியில் உரையாற்றிய தோழர்.சண்முகதாசன் அமெரிக்க நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு அவருடைய சகோதரர் கூறிய புத்திமதியை மேற்கோள் காட்டினார். “ஒரு போதும் அடி பணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்” என்றார்.
இதன்பின் நிலைமை மாறியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தோன்றினார்கள். புதிய உணர்வு கொண்ட இப் போராளிகள் அடிக்கு அடி கொடுத்தார்கள். இவர்களுடைய போராட்டம் ஆலயப்பிரவேசம், தேனீர் கடைப் பிரவேசம், பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல் ஆகியவற்றைச் சுற்றி நடைபெற்றது. ஆனால் இன்னும் வேறு வடிவங்களில் இப் போராட்டம் நடைபெற்றது. சில போராட்டங்கள் வன்முறையான வடிவத்தில் நடைபெற்றன.
தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான இப் போராட்டத்தில் பொலிசார், நீதிமன்றங்கள் ,அதிகாரிகள் ஆகிய முழு அரசு இயந்திரமும் உயர் சாதியினருக்கு ஆதரவாக செயற்பட்டன. மாஜி மந்திரியாகிய சுந்தரலிங்கம் போன்றவர்கள் வெளிப்படையாக உயர் சாதியினருக்கு ஆலோசகர்களாக செயற்பட்டனர். இவ் வேளையில் சங்கானை என்னும் கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் சவ ஊர்வலத்தின் பாதையை மறித்து அவ் ஊர்வலத்தின் மீது சுட்டார். இத் துப்பாக்கிச் சூட்டிற்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கண்துடைப்பிற்காக சுட்டவரைக் கைது செய்த பொலிஸ் அவரை வெறும் 250 ரூபா பிணையில் விடுவித்தது. பின்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது. போலிஸ், நீதிபதி எல்லாம் உயர் சாதியினருக்கு ஆதரவாக இருந்தமையினால் இவ்வாறு நடந்தது. எனவே இவ் அமைப்பில் தமக்கு நீதி கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போராளிகள் அன்று மாலை சங்கானைச் சந்தையில் வைத்து அக் குற்றவாளியைச் சுட்டுக்கொன்றனர். தோழர் சண்முகதாசன் சுட்டிக்காட்டியதுபோல் “அடிக்கு அடி” கொடுத்தனர்.
இதே போன்று இந்தியாவில் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி என்னும் இடத்தில் கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட சாதிக் கூலித் தொழிலாளர்களை குடிசைக்குள் பூட்டி வைத்து எரித்துக் கொன்றனர் உயர் சாதியினர். இதற்கு காரணமான பண்ணையாரை “அப்பாவி” என்று கூறி இந்திய நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் அவரை கம்யுனிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொன்றனர். இது தான் சாதிப் போராட்டத்தின் இயல்பு. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தம் கன்னத்தில் அறை விழுந்த போது மறு கன்னத்தைக்காட்டாமல் அடிக்கு அடி கொடுக்கக் கற்றுக்கொண்டார்கள். இந்த மாற்றத்திற்கு காரணம் கம்யுனிஸ்ட் கட்சிகள் இப் போராட்டத்திற்கு தலைமை அளித்ததாகும்.
இலங்கையில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியானது இப் போராட்டத்தை ஆதரிக்கக்கூடிய உயர்சாதி மக்களின் முற்போக்கான பகுதிகளை அணிதிரட்டியது. இக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் தலைமைத் தோழர்களில் சிலர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அளித்த தலைமையினால் இந்தப் போராட்டத்தின் நோக்கங்கள் சகல பகுதி மக்கள் மத்தியிலும் பரவலாயின. சிங்கள மக்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அறிமுகம் செய்ய கட்சி பெரும் நடவடிக்கை எடுத்தது. பல தேசிய தின நாளிதழ்கள் இப் போராட்டத்தைப் பற்றிய பல செய்திகளை வெளியிட்டன. சீனாவின் பீக்கிங் வானொலி அதன் ஆதரவை இதற்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல வடிவக் கலாச்சார நிகழ்ச்சிகளும் அப்போது இடம்பெற்றன என்பதைக் குறிப்பிடவேண்டும். அற்புதமான பல கவிதைகள் பாடல்கள் தோன்றின. நூற்றுக்கு மேலான தடவை அரங்கேற்றப்பட்ட “கந்தன் கருணை” என்னும் சிறப்பான நாடகமும் தயாரித்தளித்தார்கள்.
இந்து மதத்தின்படி கந்தபெருமானுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி வள்ளி “குறவர்” என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இதனால் நாரதர் கந்தபெருமானிடம் சென்று இலங்கையில் வடக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் உயர் சாதியினரால் இம்சிக்கப்படுவதாக முறையிடுவதுடன் இவ் நாடகம் ஆரம்பிக்கின்றது. இதைக் கேட்ட கந்தபெருமான் கோபம் கொண்டு இதற்கு தண்டனை வழங்க பூமிக்கு வருகிறார். அவரின் பெயர் கந்தன் என்பதால் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொண்ட உயர்சாதியினர் அவரை முருகன் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட கந்தபெருமான் உயர் சாதியினர் மீது எறிவதற்காக தனது ஆயுதமாகிய “வேல்” ஜ உயர்த்தினார். அப்போது நாரதர் இடைமறித்து “இந்த ஆயுதத்தை மக்களிடம் கொடுங்கள். அவர்கள் பாவிக்கட்டும்” என்று கூறுகின்றார். இந்த மாவோயிச அரசியல் தத்துவத்துடன் அவ் நாடகம் முடிவடைகின்றது.
புரட்சிகர கலை எப்படி புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளிவிடமுடியும் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும். புரட்சிகர நடைமுறையின்றி புரட்சிகர கலை பிறக்காது என்பதையும் அது தெளிவாக்கிறது. நடைமுறைதான் பிரதானமானது. ஆனால் புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும் புரட்சிகரக் கலை புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்தள்ளி விட உதவுகின்றது. சூன்யத்தில் நாம் புரட்சிகரக் கலையை உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின் அங்கமாக அது உருவாகின்றது.
தமிழகத்தில் தாழத்தப்பட்ட மக்களுக்காக பாடும்படும் தலைவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் மற்றும் டாக்டர் கிருஸ்ணசாமி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அவர்களது தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தையும் உறுதியாக ஆதரித்தவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் சாதி விடுதலை அடையாமல் தமிழ் தேசிய விடுதலை அடைய முடியாது என்கிறார்கள். அதாவது தமிழ் தேசிய விடுதலைக்கு சாதி விடுதலை முக்கியமான முன் நிபந்தனை என்கிறார்கள். இது சரியான நிலைப்பாடுதான். ஆனால் இவர்கள் ஈழப்பிரச்சனையில் தமது இந்த நிலைக்கு மாறாக தமிழீழ விடுதலை அடைந்தால் சாதீய விடுதலை அடையலாம் என்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் யாழ்ப்பாணம் வன்னி வந்து விடுதலைப்புலிகள் அமைப்பு தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து புலிகளிடம் வலியுறுத்துவார் என தாழத்தப்பட்ட சாதி மக்கள் நம்பினார்கள். எதிர்பார்த்தார்கள். ஆனால் திருமாவளவனோ தமிழீழ விடுதலை அடைந்த பின் சாதீய விடுதலை அடையலாம் எனக்கூறியது அந்த மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
திருமாவளவன் யாழ்ப்பாண தாழ்த்தப்பட்ட சாதி மக்களை ஏமாற்றியது அச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் தனது சொந்த தமிழ்நாட்டு மக்களையும் தேர்தல் பாதை மூலம் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றார். அவரும் டாக்டர் கிருஸ்ணசாமியும் தங்களை நம்பிய தாழ்த்தப்பட்ட சாதி மக்களை வைத்து பேரம்பேசி ஒரு சில தொகுதிகளைப் பெற்று ஓட்டு அரசியல் செய்கின்றனரேயொழிய அந்த மக்களின் விடுதலைக்காக உண்மையாக உழைக்க வில்லை.
தமிழ்நாடு விடுதலையை ஆயுதப் போராட்ட பாதையில் முன்னெடுத்த தோழர் தமிழரசன் இந்திய சாதீய கொடுமைகளை நன்கு உணர்ந்திருந்தார். அவர் இந்த சாதீயம் குறித்து ஆராய்ந்து “மீன்சுருட்டி அறிக்கை” என்னும் சிறப்பான அறிக்கையை முன்வைத்திருக்கிறார். அதில் அவர் சாதியை ஒழிப்பது தமிழ்தேசிய விடுதலைக்கும் நிலப்பிரபுத்தவ அதிக்கத்தை வீழ்த்தவும் உடனடி அவசியம் என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
அருமையான கட்டுரை .
ReplyDeleteசமூக உணர்வுள்ளவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டியது
மிக்க நன்றிகள்.
Deleteஅருமையான கட்டுரை தோழர். சாதி ஒழிப்பில் மார்க்சிய சிந்தனையாளர்கள் என்றே தலைப்புக் கொடுக்கலாம்.
ReplyDeleteதங்கள் கருத்து பகிர்விற்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.
Deleteசாதிகளும் மதங்களும் அழியும் நாள் தூரத்தில் இல்லை. அன்றய மனிதன் சாதி, மதங்களின் பின்னால் அலைந்தான். இன்றைய மனிதன் எதிர்ப்பதே வளர்ச்சி தானே.
ReplyDeleteNo politician can really work for the welfare of the oppressed and downtrodden downcast people of any country. Until and unless these people think and realize and work for their freedom they can't be redeemed from all such social atrocities Balan.Enlightening article. Thanks for sending the link.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDelete