•தோழர் பிவிஆர் மறைவு!
ஆழ்ந்த அஞ்சலிகள் !!
ஆழ்ந்த அஞ்சலிகள் !!
பிவிஆர் என அழைக்கப்பட்ட தோழர் பொ.வே.ராமானுஜம் இன்று காலை மரணமடைந்துள்ளார்
மார்க்சிய லெனிய மாவோ சிந்தனைகளை இறுதி வரை உறுதியாக பின்பற்றிய தோழரின் மறைவு புரட்சிகர இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
தமிழ்நாடு மார்க்சிய லெனிய கட்சியின் மூத்த தோழராக செயற்பட்டு வந்துள்ளார்.
நக்சல்பாரி இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த தோழர் பிவிஆர் தமிழ்நாடு அமைப்பு கமிட்டியில் செயற்பட்டபோது அவரை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது.
TNOC தோழர் வசந்தனின் புரட்சித் திருமணத்தில் (1986) முதன் முதலில் பிவிஆர் அவர்களை சந்தித்தேன்.
அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற TNOCயின் சில கூட்டங்களில் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து TNOCயினால் ஈரோட்டில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டபோதும் அவருடன் பல விடயங்கள் குறித்து உரையாட முடிந்தது.
பின்னர் 1991ல் ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்று பிவிஆரும் அவருடன் சேர்த்து 6 தோழர்கள் தேசியபாதுகாப்பு சட்டத்தில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
நானும் அப்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு தோழர் பிவிஆர் உடன் அதிகம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
தோழர் சிறைக்கு வந்தவுடன் காலையில் ரீ போட்டு குடிப்பதற்காக ஒரு அடுப்பை இரகசியமாக கொடுத்திருந்தேன். அவர் விபரம் தெரியாமல் ஜெயிலர் ரவுண்ட் வரும்போது அடுப்பை பற்றவைத்து ரீ போட்டிருக்கிறார். இவர் அறையில் இருந்து புகை வருவதைக் கண்ட ஜெயிலர் ஏசியுள்ளார். சிறைக்கு வந்து ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள் எப்படி உங்களுக்கு அடுப்பு கிடைத்தது என்று கேட்டிருக்கிறார். ஆனால் பிவிஆர் தனக்கு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. ஆனால் எனக்கு ஏதும் பிரச்சனை வரக்கூடாது என்று எண்ணி என் பெயரைக் கூறாமல் இருந்துவிட்டார்.
ஜெயிலர் அடுப்பை பறித்து சென்றுவிட்டார் என்ற விபரம் அறிந்ததும் நான் ஜெயிலரை சென்று சந்தித்து நான்தான் அடுப்பைக் கொடுத்தேன் என்று கூறினேன்.
அச்சரியமடைந்த ஜெயிலர் “ அப்படியா? நீ ஈழத் தமிழன். இவர்களோ இந்திய தமிழர்கள். நீ எதற்காக இவர்களுக்கு உதவி செய்தாய்?” என்று கேட்டார்.
“ அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காகத்தானே அவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எனவே ஈழத் தமிழரான நான் அவர்களுக்கு உதவ வேண்டியது கடமை அல்லவா?” என்றேன்.
அதைக் கேட்ட ஜெயிலர் சிரித்துவிட்டு “ அடுப்பை கொடுத்தது சரி. நான் வரும்போது அதனை எரிக்கக்கூடாது என்றதையாவது சொல்லிக் கொடுத்திருக்கலாம் அல்லவா” என்று கேட்டார்.
நானும் சிரித்துவிட்டு “சரி இனிமேல் அப்படி நடந்துகொள்ளும்படி அவர்களிடம் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு அடுப்பை பெற்று வந்து பிவிஆர் யிடம் கொடுத்தேன்.
இப்படி பல மறக்க முடியாத சம்பவங்கள் எமது சிறைக்காலத்தில் நடைபெற்றன. அவற்றை மீண்டும் நினைவு படுத்தியுள்ளது தோழரின் மறைவு.
ஈழத் தமிழர்கள் தமது உறுதியான ஆதரவாளர் ஒருவரை இழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மரணத்தையடுத்து ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழரை ஆதரித்தவர்களில் பிவிஆரும் ஒருவர். அவருடைய பங்களிப்பு மறக்க முடியாதது.
தோழர் பிவிஆர் இன் குடும்பத்தவர்கள் மற்றும் தோழர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment