Thursday, March 30, 2023
பெண் விடுதலை குறித்து
பெண் விடுதலை குறித்து
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை மட்டுமல்ல இன விடுதலையும்கூட இல்லை.
ஆனாலும் இன விடுதலை குறித்து பேசுபவர்கள் எந்தளவு தூரம் பெண் விடுதலை குறித்து பேசுகிறார்கள்?
ஐனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே எண்ணிக்கையில் அதிகம்.
அப்படியென்றால் ஐனநாயக முறைப்படி பெண்கள் கையில்தானே அதிகாரம் இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லையே? ஆனால் வரலாற்றில் பெண்கள் எப்போதும் இப்படி இருந்தில்லை என்றும் இடையில்தான் இவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் பெண் எப்போது அடிமையானாள்? அவள் ஏன் அடிமையாக்கப்பட்டாள்?
வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூக வடிவமே இருந்திருக்கிறது.
இச் சமூக வடிவத்தில் ஆணைவிடவும் பெண்ணிற்கே கூடுதல் அதிகாரம் இருந்துள்ளது.
பெண்ணே குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான பணியைச் செய்ததன் காரணமாக குடும்பத்தின் தலைமை பெண்ணிடமே இருந்தது.
குழந்தைகள் தாயின் வழியிலேயே அடையாளம் காணப்பட்டனர்.
சமுதாயத்தின் அக் கால கட்டத்தில் திருமணமோ அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ சமூக கட்டுப்பாடாக இருக்கவில்லை.
இதன் பொருள் அவர்கள் பாலியற் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தனர் என்பது அல்ல.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் ஆதிக்கம் பெண்ணிடமே இருந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரும்போது ஆணே(தந்தை) சமூக குழும வீட்டை நீங்கிச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகள் தாயுடனேயே இருந்தன.
சமுதாயத்தின் இக் காலகட்டத்தில் உற்பத்திக் கருவிகளான அம்பு, வில், ஈட்டி போன்றன பொதுவானதாக முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருந்தன.
அதாவது உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருக்கவில்லை.
மந்தைகள், காணிகள் போன்ற உற்பத்தி வசதிகளும் இருக்கவில்லை.
தனியார் உடமையாக எதுவும் இல்லாததால் ஒரு தந்தை தன் குழந்தைக்கு விட்டுச் செல்ல எதுவும் இருக்கவில்லை.
உற்பத்தி சக்திகளின் விருத்தியின் விளைவாக உற்பத்திக் கருவிகளின் உடமை தனியார் கைக்கு மாறியது.
அதன்பின் பணத்தின் திரட்சியும் மூலதனமும் உருவாகின.
இந்த நிலையில் ஆண் தனது தனியுடமை தனது மனைவிக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு போவதை விரும்பினான்.
இதுவே ஒருதார மணம் நடைமுறைக்கு வந்த அடிப்படை.
இந்த ஒருதார மணம் என்பது பெண்ணுக்குரியதாக இருந்ததேயொழிய ஆணுக்கு அல்ல.
பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமாக மாறியது. ஆண் ஆதிக்கத்திற்கு வந்தான்.
இந்த ஆண் ஆதிக்க நிலை முடிவுக்கு வருமா? பெண் விடுதலை பெறுவாரா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment