Wednesday, October 30, 2013

சமூக நோக்கு

• “சமூக நோக்கு” இதழ் -2 வெளிவந்துள்ளது.

ஆசிரியர- பௌசர்

இதழ் பெற்றுக் கொள்ள அல்லது மேலதிக விபரங்களுக்கு

தொலைபேசி- 00447817262980
மின்னஞ்சல்- samukanookku@gmail.com
இணைய முகவரி- www.samukanookku.net

இன்று இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்கிற அக புற நெருக்கடிகள் பற்றிய எழுத்துக்களையும், கருத்துகளையும,; அவற்றை எதிர்கொள்வதற்கு அவசியமான சில முன்மொழிவுகளையும் தொகுத்து தரப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் 14 வது நிகழ்வு

லண்டனில் ஈஸ்ட்காமில் நேற்று (26.10.2013) தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் 14 வது நிகழ்வு மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

முதலாவது அமர்வாக ஜெய்சன் அவர்களின் கவிதைத் தொகுதி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் சபேஸ் சுகுணசபேசன் தலைமையில் கவுன்சிலர் போல் சத்தியநேசன், அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் கிரகாம் வில்லியம்சன் ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியில் நூல் ஆசிரியர் ஜெய்சன் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினார்.

சிறிய இடைவேளையின் பின்னர் இரண்டாவது அமர்வாக காலம் சென்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுனிலா அபேசேகர அவர்களின் நினைவும் பங்களிப்பும் குறித்து சார்ல்ஸ் அந்தனிதாஸ் தலைமையில் சரிநிகர் ஆசிரியர் சிவகுமார் உரையாற்றினார்.

மாலை 9.00 மணியளவில் நிகழ்வுகள் முடிவுற்றன. அண்மைய காலங்களில் இடம்பெற்ற புத்தக வெளியீடுகளில் மிகவும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட நிகழ்வாக இது இடம்பெற்றது பாராட்டுக்குரிய அம்சமாகும். ஆனால் பங்கு பற்றிய மக்களில் பெரும்பாலானோர் அதுவும் குறிப்பாக மனித உரிமைக்காக அதிகம் குரல் கொடுக்கும் வரதகுமார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுனில் அபேசேகரவின் நிகழ்வில் கலந்து கொள்ள அக்கறை காட்டாமையானது மிகவும் துரதிருஸ்டவசமானது.

எமக்காக சிங்கள மக்கள் குரல் கொடுப்பதில்லை என ஒருபுறம் கூறிக்கொள்கிறோம். மறுபுறம் அவ்வாறு குரல் கொடுக்கும் சுனில் அபேசேகர போன்றவர்களை நினைவு கூர தயங்குகிறோம். இனியாவது இந்த நிலை மாற வேண்டும்.

• தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

• தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கு, கிண்டி கத்திபாரா நேரு சிலை வெடிகுண்டு வழக்கு, ஊட்டி பூங்கா வெடி குண்டு வழக்கு என பல்வேறு வழக்குகள் நிமித்தம் கைது செய்யப்பட்ட தோழர்பொழிலனுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.சென்னை உயர்நீதிமன்றம் இதனை உறுதி செய்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் 10 வருடங்களாக தண்டனையை குறைத்தது.

பல வருடங்களாக சென்னை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மகனான தோழர் பொழிலன் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். அவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதன் மூலம் அவரது விடுதலைப் போராட்டத்தை நசுக்கலாம் என இந்திய மத்திய மாநில அரசுகள் கனவு காண்கின்றன.

இதே கொடைக்கானல் வழக்கில்தான் நானும் கைது செய்யப்பட்டேன். எட்டு வருட சிறைவாழ்க்கையின் பின்னர் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். என்னை நீதிமன்றம் விடுதலை செய்த போதும் தமிழ்நாடு அரசு என்னை விடுலை செய்யாமல் சிறையை விடக் கொடிய சிறப்புமுகாமில் அடைத்தது. நான் எனது சொந்த செலவில் இலங்கை திரும்பிச் செல்ல அனுமதிக்குமாறு கோரியும் விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் என்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது தமிழக அரசு.

தோழர் பொழிலன் மற்றும் பல தோழர்களின் உதவியாலும் ஆதரவினாலும் நான் சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இந்தியாவை விட்டு நாடு கடத்தப்பட்டேன். அவர்கள் செய்த உதவிகளை நன்றியுடன் நினைவு கூருகிறேன். தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்க அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

• ஜெயலலிதாவும் ஈழப் போராளி மகேஸ்வரனும்

• ஜெயலலிதாவும் ஈழப் போராளி மகேஸ்வரனும்

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் தமது பதவி நலன்களுக்காகவே ஈழப்பிரச்சனையைப் பயன்படுத்திவந்தனர். எம்.ஜி.ஆர் , கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதாவும் கூட இவ்வாறே செயற்பட்டார். இவர்கள் ஒருபோதும் ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அனுதாபமும் கொள்ளவில்லை. தமது பதவி நலன்களுக்காகவே பேசி வருகின்றனர்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் எனச் சிலர் கூறினார்கள். இலை மலர்ந்தது. அவர் பதவிக்கு வந்தார். ஆனால் இன்னும் ஈழம் மலரவில்லை. ஈழம் மலராவிட்டாலும் பரவாயில்லை தமிழ்நாட்டில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்து சிறப்புமுகாம்களையாவது மூடியிருக்கலாம். ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை. ஆனால் அவரோ கச்சதீவை மீட்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவதும் என்று நாடகம் போடுகிறார்.

இன்னொரு சாரார் ஜெயலிலதா ஒரு பாப்பாத்தி என்றும் அவர் ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என்றும் விமர்சனம் செய்கின்றனர். துக்ளக் சோ போன்றவரகள்; ஜெயலலிதா ஈழப்போராளிகளை தனக்கு அருகில் சேர்த்துக்கொள்வதில்லை என்றும் ஈழப்போராளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பவர் என்றும் புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஜெயலலிதாவும் மற்ற அரசியல்வாதிகள் போல் தேவை யேற்பட்டால் ஈழப்போராளிகளை அரவனைப்பதும் தேர்தலில் மக்கள் ஆதரவு பெற தான் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதாக கூறுவதும் வென்றபின் அனைத்தையும் கைவிட்டு மறந்து செயற்படுவதும் வாடிக்கையாக கொண்டிருப்பவர்.

மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது இயக்க சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. அதில் முக்கியமானது ஒன்ரை கோடி ருபா பெறுமதியான தங்க கட்டிகள் ஆகும். இவை இலங்கையில் காத்தானகுடி வங்கியில் கொள்ளையிடப்பட்ட நகைகள் ஆகும். அவற்றை உருக்கி தங்க கட்டிகளாக அவர் மதுரையில் வைத்திருந்தார். இவற்றையும் பொலிசார் கைப்பற்றி வழக்கில் சேர்த்திருந்தனர்.

மகேஸ்வரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரும் அவரது இயக்க உறுப்பினர்களும் செலவுக்கு பணம் இன்றி மிகவும் கஸ்டப்பட்டனர். சாப்பிடக்கூட காசு இன்றி தவித்தனர். முக்கிய நபர்கள் மூலம் மத்திய உளவுப்படையை நெருங்கி உதவி கோரியபோது அவர்கள் இது மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால் எம்.ஜி.ஆரிடம் கேட்குமாறு கூறியிருந்தனர். ஒரு முக்கிய அமைச்சர் மூலம் எம்.ஜி.ஆரிம் கேட்டபோது இது வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதால், இது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விடயமாகையால் இதை தன்னால் தர முடியாது எனக் கைவிரித்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் மற்றும் மத்திய அரசு போன்றவையே தங்களால் உதவ முடியாது என்று கைவிரித்துவிட்டதால் இனி இந்த தங்கக் கட்டிகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்று மகேஸ்வரன் கருதியிருந்த வேளையில் “இந்து” பத்திரிகையில் பணி புரியும் ஒரு முக்கிய நபர் மகேஸ்வரனைத் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவிடம் கேட்கும்படி ஆலோசனை கூறினார். எம்.ஜி.ஆராலேயே முடியாத விடயம் அப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கும் ஜெயலலிதாவால் முடியுமா என நினைத்து மகேஸ்வரன் அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்தார். ஆனால் அந்த முக்கிய நபர் மீண்டும் மகேஸ்வரனை அணுகி ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன் என்றார்.

“ஜெயலலிதா ஒரு நடிகை. அவர் எம்.ஜி.ஆரின் வைப்பாட்டி. அதனால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்” எனபதே அவரைப்பற்றிய பொதுவான அபிப்பிராயமாக அப்போது ஈழப்போராளிகளுக்கு இருந்தது. எனவே ஒருவித அவ நம்பிக்கையுடன் வேண்டா வெறுப்பாக ஜெயலலிதாவுடன் மகேஸ்வரன் தொடர்பு கொண்டார். உடனடியாக ஜெயலலிதாவுடன் சந்திப்பதற்கு நேரம் தரப்பட்டது. மகேஸ்வரன் சென்றார். அவருக்கு தன்கையாலே பழரசம் கொடுத்து வரவேற்ற ஜெயலலிதா ஈழப்பிரச்சனை குறித்து மிகவும் அக்கறையுடனும் அனுதாபத்துடனும் பேசினார். நீங்கள் எல்லாம் அடிக்கடி தன்னுடன் சந்திக்க வேண்டும் என்றும் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்கலாம். நான் நிச்சயம் செய்து தருவேன் என்றெல்லாம் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவத்தில் கைப்பற்ற பட்ட தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ள உதவுவது குறித்து அப்போது எதுவும் பேசாதது மகேஸ்வரனுக்கு ஏமாற்றமாக இருந்தது. எனவே அவர் விரக்தியுடன் திரும்பி வந்தார்.

அவர் திரும்பி வந்த அரை மணி நேரத்தில் பொலிஸ் கமிஸனரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் உடனடியாக வந்து தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ளும்படி கேட்கப்பட்டது. மகேஸ்வரனைப் பொறுத்தவரையில் தன்னையே நம்பமுடியாத அளவிற்கு சந்தோசம் அடைந்தார். அவர் மட்டுமல்ல நாங்கள் அனைவரும் ஜெயலலிதா இந்த உதவியை செய்வார் என்றோ அல்லது அதையும் இவ்வளவு விரைவாக செய்வார் என்றோ கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆர் மற்றும் மத்திய அரசால் செய்ய முடியாத ஒரு காரியத்தை அதுவும் வழக்கில் நீதிமன்ற அதிகாரத்தில் இருந்த ஒன்ரைக் கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் திருப்பி கிடைக்க செய்தவர் ஜெயலிலதா. அன்று தனது அரசியல் பிரவேசத்தின்போது இவ்வாறு உதவி செய்தவர் பின்னர் ஆட்சியில் அமர்ந்ததும் ஈழப் போராளிகளை மறந்தார். அதுமட்டுமல்ல அப்பாவி அகதிகளை பிடித்து சிறப்பு முகாமில் அடைத்தார். அதே மகேஸ்வரன் மீது அந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு வழக்கை நடத்தினார். அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருந்தார்.

நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது எமக்கு படிப்பதற்கு பத்திரிகைகள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த சட்ட விரோதத்தைச் சுட்டிக்காட்டி அனுமதிகோரி 14 நாட்கள் உண்ணா விரதம் இருந்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு “இப்படி தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ள உதவி செய்த நீங்கள் இப்போது அகதிகளை இப்படி துன்புறுத்தலாமா?” எனக் கேட்டு கடிதம் அனுப்பினேன். உடனே அப்போது திருச்சி கியூ பிரிவு உதவி கண்காணிப்பாளராக இருந்த சண்முகம் என்பவர் துறையூர் முகாமில் என்னைச் சந்தித்து இனிமேல் இப்படிப்பட்ட உண்மை விபரங்களை வெளிப்படுத்தும் கடிதங்களை எழுதத்கூடாது என எச்சரித்தார்.

இங்கு நான் இதை வெளிப்படுத்துவதன் நோக்கம் ஜெயலலிதாவும் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் பதவியைப் பிடிப்பதற்கு எல்லாவித உதவிகளையும் செய்வதும் பதவியை பெற்றபின் மறந்து செயற்படுவதும் வழக்கமாக கொண்டவர்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே.

• மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம். நடந்தது என்ன?

• மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம். நடந்தது என்ன?

“துக்ளக்” சோ போன்றவர்கள் ஈழப்போராளிகள் தமிழகத்தில் அராஜகம் செய்தனர் என்பதற்கு குறிப்பிடும் சம்பவங்களில் இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவமும் ஒன்றாகும். இது பற்றிய உண்மைகள் முழுவதும் இந்த சோ, ராம் போன்ற பார்ப்பண கும்பல்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியாது என்பதால் இவர்கள் தொடர்ந்தும் எழுதியும் ஏமாற்றியும் வருகின்றனர். எனவே இந்த சம்பவம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவது எனது கடமை என கருதுகிறேன்.

1984 ல் சென்னை விமான நிலையத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 40ற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் சிங்கள பயணிகளாயினும் தமிழகத்தில் நடந்த முதல் பாரிய வெடிகுண்டு சம்பவம் என்பதால் இது மக்கள் மத்தியில் கடும் அதிர்வை எற்படுத்தியிருந்தது.

அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். இதனை செய்தது ஈழ விடுதலை இயக்கம் என்பதை தெரிந்தும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான “தமிழீழ தேசிய இராணுவம்” ஆகும். எமது “பேரவை” இயக்கமும் தமிழீழ தேசிய ராணுவமும் ஜக்கியமாக சேர்ந்து இயங்கினோம். இந்தியாவில் எமது பாதுகாப்பு கருதி நாம் அவர்களது பெயரிலேயே செயற்பட்டோம்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து முதன் முதலாக வேதாரணியத்தில் கரைப்பொறுப்பாக இருந்த எமது தோழரும் ஈழத்திற்கு அனுப்ப வைத்திருந்த 100 பெட்டி வெடி மருந்தும் பொலிசாரால் கைப்பற்றப்ட்டது. அடுத்து ஒரு வாரத்தில் வெடிகுண்டு சம்பவத்தின் சூத்திரதாரியான தம்பாபிள்ளை மகேஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.

அவரை விசாரணை செய்யும்போது முழு உண்மைகளையும் பொலிசார் தெரிந்து கொண்டனர். அதாவது சென்னையில் இருந்து செல்லும் இலங்கை விமானத்தில் அந்த வெடி குண்டு அனுப்ப இருந்தது என்றும் கொழும்பில் அது இறங்கி சுமார் அரை மணி நேரத்தின் பின்பே குண்டு வெடிக்க இருந்தது என்றும் அதற்கு ஏற்ப நேர குண்டாக அது செய்யப்பட்டது என்பதையும் அறிந்து கொண்டனர். இங்கு மகேஸ்வரன் அவர்களின் நோக்கம் இலங்கையில் குண்டு வெடித்து இலங்கை அரசுக்கு பொருளாதார இழப்பு வரவேண்டும் என்பதேயொழிய சென்னை விமான நிலையத்தில் வெடிக்கவைப்பதோ அல்லது பயணிகளைக் கொல்வதோ நோக்கமாக இருக்கவில்லை.

மகேஸ்வரன் சென்னை விமான நிலையத்தில் பணி புரியும் ஒரு உயர் அதிகாரியிடம் இது பற்றி பேசி அவரும் தான் குண்டை கொழும்பிற்கு அனுப்ப உதவி செய்வதாக கூறி லஞ்சமாக பெரிய தொகை பணமும் பெற்றுக்கொண்டார். அந்த உயர் அதிகாரி கூறியபடி மகேஸ்வரனே விமான பயண ரிக்கட்டுடன் குண்டு அடங்கிய பயண சூட்கேசையும் கொண்டு சென்றார். ஆனால் அங்கு வாக்குறுதியளித்தபடி அந்த உயர் அதிகாரி நிற்காமல் ஏமாற்றிவிட்டார். இதனால் வேறுவழியின்றி சூட்கேசை அப்படியே விமான நிலையத்தில் வைத்துவிட்டு மகேஸ்வரன் திரும்பி வரவேண்டியேற்பட்டுவிட்டது.

வெளியே வந்த மகேஸ்வரன் உடனடியாக தொலைபேசி மூலம் சுங்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் விடயத்தை கூறியுள்ளார். அவர்களும் சென்று பெட்டியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வேறு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சென்றுவிட்டனர். அவர்கள் அஜாக்கிரதையாக இருப்பதை கண்ட மகேஸ்வரன் உடனே விமான நிலைய சுங்க துறையினருக்கு தொலை பேசி மூலம் குண்டு வெடிக்கப்போகிறது என்ற விடயத்தை கூறினார். சுங்க அதிகாரிகள் சென்று பெட்டியை தூக்கி பார்த்து “நல்ல கனமாக இருக்கிறது. அவ்வளவும் தங்க கட்டிகளாக இருக்கும,; ஆட்கள் எல்லாம் போன பின்பு எடுத்து நைசாக தமக்குள் பங்கு போட்டுக் கொள்ளலாம்” என்று ஒரு ஓரத்தில் பெட்டியை மறைத்துவைத்துவிட்டார்கள்.

இவ்வாறு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையாலும், தவறாலுமே சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடித்தது. இலங்கை விமானத்திற்கு ஏறவந்த சிங்கள பயணிகளும் கொல்லப்பட்டனர். இந்த உண்மைகள் யாவும் பொலிசார் மூலம் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே அதிகாரிகளை ஏசிவிட்டு மகேஸ்வரனை ஜாமீனில் விடுதலை செய்யும்படி அறிவுறுத்தினார்.

ஜாமீனில் வெளிவந்த மகேஸ்வரன் தொடர்ந்தும் இயங்கினார். ஆனால் அவரது இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டு அவரும் இயங்காமல் இருந்தவேளை 1997ம் ஆண்டு சென்னையில் அவர் கைது செய்யப்பட்டு இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கில் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இருந்தும் ஜெயலலிதா அரசு வேண்டுமென்றே உச்ச நீதிமன்த்தில் அப்பீல் செய்தது. அதிலும் அவர் விடுதலை செய்யப்படார். இறுதியாக அவர் 2010ம் ஆண்டவில் சிறையில் இருந்து விடுவிக்கபப்ட்டு ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டார்.

• மீரா பாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு

• மீரா பாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு

இன்று (20.10.13) லண்டனில் ஈஸ்ட்காமில் மீராபாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

பாலசிங்கம் சுகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. யமுனா ராஜேந்திரன் “மரணம் இன அழிப்பும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அடுத்து மு. நித்தியானந்தன் “மரணம் அஞ்சலியும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதையடுத்து மாதவி சிவலீலன் “மரணம் இழப்பும் பாதிப்புகளும் பெண்களும் குழந்தைகளும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக நூல் ஆசிரியர் மீராபாரதி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

மீராபாரதி உரையாற்றும்போது தனது தந்தையின் இழப்பும் அதனை தான் ஆற்றுப்படுத்த தான் எதிர் கொண்ட அனுபவங்களுமே இந்த நூலை எழுத தூண்டியது என்றார். எனவே இங்கு அவரின் தந்தை பற்றி சில வரிகள் கூறவேண்டும் என விரும்புகிறேன். அவரது தந்தையார் “கரவை கந்தாமி” என அறியப்பட்டவர். அவர் தோழர் சண்முகதாசனின் கம்யுனிஸ்ட் கட்சியில் முன்னனி தோழராக செயற்பட்டவர். மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்து முழுநேர ஊழியராக செயற்பட்டவர். அவர் எனது ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தாலும்கூட அவரை நான் ஒருபோதும் ஊரில் காணவில்லை. 1988ல் கொழும்பில் தோழர் சண்முகதாசனின் இல்லத்திலே அவரைக் கண்டிருக்கிறேன். தோழர் சண்முகதாசனை நான் வீடீயோ பேட்டி கண்டபோது அவரும் அங்கு நின்றிருந்தார். மிகவும் ஆர்வமுடன் அவற்றை பார்த்துக்கொண்டு நின்றார். இறுதியாக தனக்கும் அதில் ஒரு பிரதி தாருங்கள் என்று கேட்டார்.

தோழர் கரவைக் கந்தசாமி தனது இறுதிக்காலங்களில் புளட் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் உண்மையில் புரட்சிகர தோழர்கள் மத்தியில் அதிர்சியையும் கடும் துயரத்தையும் கொடுத்திருந்தது.

அதேவேளை மகனாக அவரது அந்த கொடிய மரணத்தை மீராபாரதி எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக்கியுள்ளார். அது மட்டுமல்ல மீராபாரதி புளட் இயக்கத்தில் செயற்பட்டதாலும் மேலும் யுத்த பூமியில் வாழ்ந்ததாலும் அவர் பல மரணங்களை தன் வாழ்நாளில் சந்திருக்கிறார். அத்தோடு 2009ல் தமிழ் மக்களுக்கு எற்பட்ட பாரிய இழப்புகளும் அவரை இந்த நூலை எழுத தூண்டியிருக்கிறது.

• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே?

• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே?

• ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா?

• அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா?

1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன.

ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து எந்த தகவலும் கலைஞர் குடும்பத்திலிருந்து வெளிவருவதில்லை. கலைஞருக்கு பல மனைவிகள். பல பிள்ளைகள். பல பேரப்பிள்ளைகள் என அவரின் குடும்பம் மிகப் பெரியது. இருந்தும் அவர் ஒரு ஏழை அகதி சிறுவனை தத்தெடுத்து தனது கருணை மனதை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மீது தான் கொண்டிருக்கும் அபரிதமான அன்பை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தினார் என்றே நாம் நம்பினோம்.

எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி. அதனால் அவருக்கு இலங்கை தமிழர்கள் மீது உண்மையான அன்பு,இரக்கம் இல்லை. ஆனால் கலைஞர் உலகத் தமிழின தலைவர் என்பதால் இவ்வாறு ஒரு அகதி சிறுவனை தத்தெடுத்து தனது தமிழ் உணர்வை நிரூபித்துள்ளார் என அப்போது ஒவ்வொரு தி.மு.க தொண்டனும் பெருமைப்பட்டான்.

இன்று கலைஞரின் பெரிய குடும்ப படங்கள் அடிக்கடி பத்திரிகையில் வெளிவருகின்றன. ஆனால் அதில் ஒன்றில்கூட இந்த ஏழை அகதி சிறுவனைக் காண முடியவில்லை. எதிர்காலத்தில் தங்கள் சொத்தில் பங்கிற்கு அந்த சிறுவன் வந்துவிடுவான் என்ற அச்சத்தில் கலைஞர் குடும்பத்தினர் அந்த சிறுவனை விரட்டிவிட்டார்கள் என அறியவருகிறது.

இது உண்மையாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அந்த சிறுவன் கலைஞர் குடும்பத்தால் கொல்லப்பட்டுவிட்டான் என சிலர் தெரிவிப்பது எமக்கு மிகவும் கவலைக் கொடுக்கிறது. இது உண்மைதானோ என நினைக்கும் வகையில் இவ்வளவு காலமும் கலைஞர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பரிதி இளம்பரிதியும் அந்த சிறுவன் எங்கே என்று கேட்டிருக்கிறார். இது கலைஞர் குடும்பத்தின் மீது சந்தேகத்தை அதிகரிக்கின்றது.

கலைஞர் தன் தமிழ் உணர்வைக் காட்டுவதற்காக அநியாயமாக ஒரு அகதி சிறுவனைப் பலி கொடுத்துவிட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது. எனவே கலைஞரோ அல்லது தி.மு.க வினர் யாராவது அந்த சிறுவன் உயிரோடு இருப்பதையும் அவன் குறித்த விபரத்தையும் உடன் மக்களுக்கு அறியத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் அறிய தராவிடின் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக போராடும் பலரை நாம் அறிவோம். அவர்கள் இந்த அகதி சிறுவனுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை தமிழ் மக்களுக்கு அறிய தருமாறு அனைவரையும் மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.