Wednesday, August 31, 2016

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்! • மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்! • மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!
தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்!
1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார்.
அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.
அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார்.
உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள்.
மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார்.
எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது.
அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார்.
மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.
பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை.
இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர்.
இம்முறை தோழர் தமிழரசன் கூறுமன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.
என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள்.
உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார்.
குறிப்பு- எதிர்வரும் செப்-1 திகதி தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள் பதிவு ஆகும்

•ஆகஸ்டு-30 இன்று உலக காணாமல் போனோர் தினமாம்.

•ஆகஸ்டு-30
இன்று உலக காணாமல் போனோர் தினமாம்.
ஒவ்வொரு வருடமும் காணாமல் போனோர் தினம் வருகிறது. ஆனால் இலங்கையில் காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்டவில்லை.
பான்கி மூன் வரகிறார். அமெரிக்க செயலர் வருகிறார். இந்திய அமைச்ர் வருகிறார். ஆனால் காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
காணாமல் போனோரை கண்டு பிடிப்பதாக ஓட்டுப் பெற்ற சம்பந்தர் அய்யா, ஒருபடியாய் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கண்டு பிடித்துவிட்டார்.
வடமாகாண சபையாவது காணாமல் போணோரை கண்டு பிடிப்பார்கள் என்று பார்த்தால் அவர்கள் கவிஞர் வைரமுத்துவை கண்டு பிடித்து வந்து கச்சேரி நடத்துகிறார்கள்.
காணாமல் போனோரைக் கண்டு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் வார்த்தையாவது எமது தலைவர்கள் கூறியிருக்கலாம்.
ஆனால் அவர்களோ தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதிலும் தமக்கு குடை பிடிக்க ஆள் தேடுவதிலும் மும்முரமாய் இருக்கிறார்கள்.
எமது தலைவர் சம்பந்தர் அய்யா மாத்தறைக்கு ஓடிச்சென்று “நாடு பிரிவடைய விடமாட்டடேன்” என்று உறுதிமொழி வழங்கிறார்.
என்னே கொடுமை இது?
காணாமல் போனோர் விடயத்திற்கு யார் நியாயம் வழங்குவது?
இவர்களுக்கு நியாயம் வழங்காதவரை “காணாமல் போனோர் தினம்” என்ன அர்த்தம் பெற்றுவிடப் போகிறது?

•ஓ! புத்தரே எமது அறியாமையை மன்னித்து விடுங்கள்!

•ஓ! புத்தரே
எமது அறியாமையை மன்னித்து விடுங்கள்!
2500 வருடங்களுக்கு முன்னரே “கடவுள் இல்லை” என்று சொன்ன முதல் பகுத்தறிவுவாதி நீ.
“கடவுள் இல்லை” என்று சொன்ன உன்னையே கடவுளாக்கிய முட்டாள்கள் .
அன்பு தான் கடவுள் என்றாய் நீ. அன்பையே நீ உலகிற்கு போதித்தாய்.
ஆனால் அடாவடித்தனமே எமது மதம் என்று உன் சிலையை உடைத்துக் காட்டியிருக்கிறோம் நாம்.
மன்னித்தவிடு. உன் சிலையை வைத்தவர்களை எங்களால் உதைக்க முடியவில்லை.
எனவேதான் இரவில் இரகசியமாய் வந்து உன்னை உடைத்து போட்டிருக்கிறோம்.
எமது கடவுள் சிலைகளை உடைத்த ராணுவத்திற்கும் உமது சிலையை உடைத்த எமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று காட்டியிருக்கிறோம்.
உனது சிலையை எம் மண்ணில் வைத்தவர்களும் , உமது சிலையை உடைத்த நாங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நிரூபித்தள்ளோம்.
உன் சிலையை வைத்து அவர்கள் சிங்கள மக்களை ஏமாற்றினார்கள். உனது சிலையை உடைத்து நாம் தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கிறோம்.
இனி தீர்வு வராவிட்டாலும் பரவாயில்லை. எமது தலைவர்களுக்கு அடுத்த தேர்தலில் வெல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது.
அவதானிப்பு- வர்க்க அரசியலை மறைக்க சிலை அரசியல் முன் வைக்கப்பட்டுள்ளது.

Thursday, August 18, 2016

•நாய்க்கு செத்தவீடு நடத்திய கனடா தமிழர்!

•நாய்க்கு செத்தவீடு நடத்திய கனடா தமிழர்!
இது
பையித்தியக்காரத்தனம் என்பதா?
அல்லது பணத் திமிர் என்பதா?
இதை என்னவென்று அழைப்பது?
நாம் எந்த மாதிரி உலகத்தில் வாழுகிறோம்?
வெளிநாடுகளில் நாய் வளர்ப்பதற்கு அதிகம் செலவாகும். ஒரு நாய் வளர்க்கும் காசில் தாயகத்தில் 5 அனாதைச் சிறுவர்களை வளர்க்க முடியும்.
கனடாவில் ஒரு தமிழர் நாய் வளர்த்தது மட்டுமன்றி அந்த நாய் இறந்தவுடன் ஆடம்பரமாக செத்த வீடு நடத்தியுள்ளார்.
ஜயர் பிடித்து மந்திரம் எல்லாம் ஓதி நடத்திய இந்த செத்தவீட்டிற்கு பல பிரபலங்களும் சென்று துக்கம் விசாரித்தார்களாம்.
இது அவரின் தனிப்பட்ட விடயம். அவர் தனது மனத் திருப்திக்கு செய்யும் இந்த விடயம் குறித்து முகநூலில் விமர்சிப்பது அழகு அல்ல என்று சில ஜனநாயகவாதிகள் அவருக்காக குரல் கொடுக்க வரலாம்.
அவர்களிடம் நான் கேட்க விரும்புவது என்ன வென்றால்,
வறுமை காரணமாக வன்னியில் தன் 3 குழந்தைகளையும் கொன்ற தாய்க்கு இந்த பணத்தை கொடுத்திருந்தால் அக் குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாம் அல்லவா?
கிளிநொச்சியில் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மாணவனுக்கு இந்த பணத்தை கொடுத்து உதவியிருக்கலாம் அல்லவா?
நாட்டில் போராடியவர்கள் வறுமையில் வாடும்போது அந்த போராட்டத்தை வைத்து அகதி அந்தஸ்து பெற்றவர்கள் இவ்வாறு ஆடம்பர செலவுகள் செய்வது நியாயமா?
முட்டாள்தனத்தில் அல்லது பையித்திக்காரத்தனத்தில் சிறந்து விளங்குபவர்கள் கனடா தமிழரா? அல்லது லண்டன் தமிழரா? என பட்டிமன்றமே நடத்தலாம்.
அந்தளவுக்கு லண்டன் தமிழர் சிலரும் தாங்கள் கனடா தமிழருக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கின்றார்கள்.
கனடா தமிழர் நாய்க்கு செத்தவீடு நடத்தினார் என்றால் லண்டன் தமிழர் எலிக்கு செத்தவீடு நடத்தியுள்ளார்.
லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தன் மகளின் ஆசைப்படி வளர்ப்பதற்கு வெள்ளை எலி வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு பல செலவுகள். 35 பவுண்ட்ற்கு ஊசி போட வேண்டும். இருந்தும் சில நாட்களில் அந்த எலி செத்துவிட்டது.
பின்னர் மகளின் விருப்பப்படி மனிதர்களுக்கு செய்வது போல் ஒரு நிறுவனம் மூலம் மரியாதையுடன் அந்த எலி அடக்கம் செய்யப்பட்டது. எலி வாங்கிய காசைவிட அதன் செத்தவீடு செலவு அதிகமானது.
இப்போது கூறுங்கள்!
நாம் என்னமாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்?
குறிப்பு- ஒரு சந்தேகம்!
கனடாவில் நாயக்கு செத்தவீடு செய்யவென தனியாக ஜயர்மார் இருக்கிறார்களா? அல்லது நாய்க்கு செத்தவீடு நடத்திய ஜயரை இனி மனிதருக்கு செத்தவீடு நடத்த பிடிப்பார்களா?

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் பிரதிநிதி சசிகலா புஸ்பா இரு நாட்களுக்கு முன்னர் தன் தலைவியை தரக்குறைவாக பேசியதால் இன்னொரு மக்கள் பிரதிநிதி சிவா அவர்களை கன்னத்தில் அறைந்ததாக பேசினார்.
ஒரு பிரதிநிதி இன்னொரு பிரதிநிதியின் கன்னத்தில் மக்கள் முன் அறைந்த நாகரீகமற்ற செயலை யாரும் கண்டிக்கவில்லை. மாறாக அவர் ஒரு முறை கன்னத்தில் அடித்தாரா அல்லது நாலு முறை அடித்தாரா என பட்டிமன்றம் நடத்தினார்கள்.
இன்று தன் தலைவி ஜெயா அம்மையார் தன் கன்னத்தில் அறைந்ததாகவும் தனக்கு பாதுகாப்பு தரும்படியும் சசிகலா புஸ்பா பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.
ஒரு மக்கள் பிரதிநிதி தன் தலைவியால் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பு கோரும் அவலம் பாராளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது.
ஆனால் தமிழக ஊடகங்கள் சசிகலா புஸ்பாவுக்கே கன்னத்தில் அடியென்றால் ஓ.பி .பன்னீர்செல்வத்திற்கு எத்தனை அடி எங்கெல்லாம் விழுந்திருக்கும் என ஆராய்கிறார்கள்.
கடந்தவாரம் ஒரு தமிழக விவசாயி தண்ணீருக்காக பாலாற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
அது குறித்து எந்தவொரு தமிழக பிரதிநிதியும் பாராளுமன்றதில் பேசவில்லை. ஏன் பாராளுமன்றத்திற்கே மக்கள் பிரச்சனை குறித்து அக்கறை இல்லை.
குடிப்பது. குடித்துவிட்டு கூத்தடிப்பது. தமது தலைவர் தலைவிகளை புகழ் பாடுவது. மிகுதி நேரங்களில் தூங்குவது. இதைத்தானே பிரதிநிதிகள் பாராளுமன்றில் செய்கிறார்கள்.
இதற்காக மக்கள் வரிப் பணத்தில் வெட்டியாக பாராளுமன்றம் நடத்ததான் வேண்டுமா?

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்போர் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்போர்
இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?
பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்கிய இந்திய அரசு
பங்களாதேஸ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கிய இந்திய அரசு
ஈழ அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது.
தமக்கு குடியுரிமை வழங்குமாறு கோரி ஈழ அகதிகள் சென்னையில் பேரணி நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்ல திரும்பிப் போவோருக்கான தண்டப் பணத்தையும் நீக்குமாறு கோரியுள்ளனர்.
இலங்கைக்கு திரும்பி செல்ல விரும்பும் ஒவ்வொரு அகதியும் வருடமொன்றுக்கு தண்டப்பணம் 3600ரூபாவும் நுழைவிசைவுக் கட்டணம் 13500 ரூபாவும் செலுத்த வேண்டும்.
பல வருடங்கள் அகதியாக இருந்தவர்கள் திரும்பிச் செல்வதாயின் லட்சக் கணக்கான ரூபாயை கட்ட வேண்டியுள்ளனர்.
இந்த பணத்தை கட்ட வசதி இல்லாதபடியால் பலர் இலங்கை திரும்ப முடியாமல் இருக்கின்றனர்.
அவுஸ்ரேலியா திரும்பிப் போகும் அகதிகளுக்கு விமான டிக்கட் மட்டுமன்றி 25லட்சம் ரூபா பணம் வழங்கவும் முன்வந்துள்ளது.
ஆனால் இந்தியா பணம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தண்டப் பணத்தையாவது நீக்க முன்வர வேண்டும்.
ENDLF கட்சியின் செயலர் ஞானராஜ் அவர்களும் பேரணியில் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
இவருடைய கட்சி கடந்த வருடம் பாத யாத்திரையாக டில்லி சென்று இந்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்தக் கட்சி இந்திய விசுவாசக் கட்சியாகும். இந்தியா தமிழீழம் பெற்று தரும் இன்றும் கூறிக்கொண்டிருக்கும் கட்சி.
இவர்களால் அகதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப் பணத்தையெ நீக்க முடியவில்லை. ஆனால் இந்தியா மூலம் தமிழீழம் எடுக்கப்போவதாக கூறுகிறார்கள்.
இந்தியா இலங்கை ரயில்வே அபிவிருத்திக்கு 2000கோடி ரூபா கொடுத்திருப்தாக கூறுகிறார்கள்.
தன்னுடைய நாட்டில் ரயிலில் குண்டி கழுவக்கூட ஒரு கோப்பையை வைக்காத இந்திய அரசு இலங்கை ரயில்வேக்கு ஏன் உதவி செய்கிறது?
தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையினாலேயே இப்படி இந்திய அரசு உதவி செய்வதாக கூறுவோரிடம் நாம் கேட்க விரும்புவது “ அகதியின் தண்டப் பணத்தைக்கூட நீக்க விரும்பாத அரசு இலங்கையில் தமிழர் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதை எப்படி நம்புவது? “
இந்திய அரசு விசுவாசிகள் இதற்கு பதில் தருவார்களா?

•இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவுகிறதாம். இன்னும் எத்தனை நாளைக்கடா இந்த கதையை சொல்லப்போறியள்?

•இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவுகிறதாம்.
இன்னும் எத்தனை நாளைக்கடா இந்த கதையை சொல்லப்போறியள்?
இங்கிலாந்து சென்ற ஈழ அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது
உயர் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு தமிழர் 12 வருடங்களுக்கு மேலாக கவுன்சிலராக உள்ளார்.
நோர்வே சென்ற ஈழ அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்படுகிறது.
உயர் கல்வி கற்ற வாயப்பு வழங்கப்படுகிறது
தமிழ் பெண் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டென்மார்க் சென்ற ஈழ அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்படுகிறது.
உயர் கல்வி கற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு தமிழ் பெண் விமான ஓட்டுனராகியுள்ளார்.
கனடா சென்ற ஈழ அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்படுகிறது
உயர் கல்வி கற்க வாயப்பு வழங்கப்படுகிறது.
தமிழர் ஒருவர் எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தியா சென்ற ஈழ அகதிகளுக்கு
33 வருடமாகியும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
அகதி என்பதால் உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
நந்தினி என்ற அகதி மாணவி மருத்துவ படிப்பிற்கு தேவையான புள்ளிகள் எடுத்திருந்தும் அகதி என்பதால் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனா அரசு அந்த மாணவிக்கு புலமைப் பரிசிலுடன் மருத்துவ கல்வி கற்க வாய்ப்பு வழங்கியுள்ளது.
தொப்புள்கொடி உறவுகள் என்றும்
வந்தாரை வாழவைக்கும் நாடு என்றும்
நம்பிச் சென்ற ஈழ அகதிகளை
சிறப்புமுகாமில் அடைக்கிறது தமிழக அரசு.
இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புவோருக்கு
குடியுரிமை வழங்க மறுக்கிறது இந்திய அரசு.
இலங்கைக்கு திரும்ப விரும்புவோருக்கு பல்லாயிரம் ரூபா தண்டப் பணம் கட்டினால்தான் அனுமதிக்க முடியும் என்கிறது இந்திய அரசு.
ஈழ அகதிகளை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் தொடர்ந்து துன்புறுத்தும் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்கிறார்களே.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கதையை அவர்கள் எமக்கு கூறப் போகிறார்கள்?