Thursday, November 30, 2017

•ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?

•ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?
ரவிராஜ் கொலைக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை?
( இப் பதிவு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம்)
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடியவரா?
இல்லை
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாரா?
இல்லை
ரவிராஜ் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தவராக குற்றம்சாட்டப்பட்டாரா?
இல்லை
ரவிராஜ் ஒரு தேடப்பட்ட சந்தேக நபரா? அல்லது குற்றவாளியா?
இல்லை
அப்படியாயின் ரவிராஜ் ஏன் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்?
கொல்லப்படும் அளவிற்கு ரவிராஜ் செய்த தவறுதான் என்ன?
ரவிராஜ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் புலிகள் அமைப்பை ஆதரித்தார்
புலிகள் அமைப்பை ஆதரித்தது தவறு என்றால் ஏன் மற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படவில்லை?
எல்லா தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளின் ஆதரவுடன்தானே பதவியைப் பெற்றவர்கள்.
புலிகள்தான் தமிழ் மக்களின் எக பிரதிநிதி என்று சொன்ன சம்பந்தர் அய்யாவையல்லவா இலங்கை அரசு முதலில் சுட்டிருக்க வேண்டும்
ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே.
ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் பரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார்.
இனவாதம் மூலம் ஆட்சி செய்யும் இலங்கை அரசு அந்த இனவாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்காது.
இனங்களுக்கடையே நல்லிணக்கம் ஏற்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும்கூட அனுமதிக்காது.
முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் பௌத்த இனவாதிகளுடன் சிங்கள மொழியில் விவாதம் செய்து அவர்களை அம்பலப்படுத்தினார். அதனாலேயே அஸ்ரப் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
தன்னை சந்தித்த சிங்கள மக்களிடம் சிங்கள மொழியில் தமிழர் நியாயங்களை தான் கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் சிங்களப் பகுதிகளில் வந்து அவற்றை கூறும்படி தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அண்மையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார்.
அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் கொல்ல வேண்டும் என்றும் இனவாதிகள் கத்துகிறார்கள்.
தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழர் பிரச்சனையை காலம் காலமாக இந்தியாவுக்கு கூறியிருக்கிறார்கள். அமெரிக்கா பிரிட்டனுக்கு எல்லாம் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை கூற அவர்கள் முயற்சி செய்யவில்லை.
ஆனால் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஒருவேளை தமிழ் மக்களுக்கு ஏதும் தீர்வைப் பெற்றுத்தர முன்வந்தாலும் சிங்கள மக்களின் அதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
ஏனவே இனியாவது காலம் சென்ற ரவிராஜ் காட்டிய பாதையில் சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுவோம். அவர்களை இனவாத ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து வென்றெடுப்போம்.
குறிப்பு-
ரவிராஜ் கொல்லப்பட்ட தினம் இன்று. ரவிராஜ்க்கு சிலை வைத்த தமிழ்தேசியகூட்டமைப்பால் அவரின் கொலைக்குரிய நீதியை இன்னும் பெறவில்லை.
தமது பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு நீதி பெற முடியாதவர்கள் தமிழ் மக்களின் முள்ளிவாயக்கால் படுகொலைகளுக்கு நீதி பெற்று தருவார்கள் என எப்படி நம்புவது?

•ஓ! மரணித்த வீரனே எங்களை மன்னித்துவிடு!

•ஓ! மரணித்த வீரனே
எங்களை மன்னித்துவிடு!
பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு
நீ ஈழம் வந்து போராடிய போது
நாங்கள் புலம் பெயர்ந்து லண்டன் வந்தோம்
நீ கரும்புலியாகி எமக்காக காவியமானாய்
நாங்கள் சுப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருந்தோம்.
நீ மரணித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது
நாங்கள் 25 அடியில் நடிகருக்கு கட்அவுட் வைக்கிறோம்
நீ பலாலி படைத்தளத்தில் ஊடுருவி வீர மரணம் அடைந்தாய்.
நாங்கள் நடிகை சன்னி லியோனுடன் டின்னர் சாப்பிடுகிறோம்
நீ எமக்காக போராடினாய். எமக்காக உன் உயிரை அர்ப்பணித்தாய்.
நாங்கள் அதை மறந்து “தமிழ்நாடு எங்களுக்கு என்ன கிழித்தது?” என்று முகநூலில் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
சிவகாசியில் பிறந்து ஈழம் வந்து போராடிய உன் பெருமை எமக்கு தெரியவில்லை.
நாங்கள் இன்னொரு நாட்டில் போராடி மறைந்த சேகுவாராவின் படம் பொறித்த ரீ சேர்ட்டை பெருமையாக போட்டு திரிகிறோம்.

கௌரி பரா ( Gowry Para ) “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருக்கும் கௌரி பரா ( Gowry Para ) “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கௌரி பரா அவர்கள் ஓர் சிறந்த இலக்கிய விமர்சகராக விளங்கி வருகிறார். அவர் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் காத்திரமான வாசிப்பாளராகவும் இருக்கிறார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள கௌரி பரா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
ஆயிரமாயிரம் சமூக போராளிகள், பகுத்தறிவாளர்கள் எல்லா சமூகங்களிலும் காலாகாலமாகத் தோன்றி மறைந்திருக்கிறார்கள்.
சிலரை தலைவர்களாக மகுடம் சூட்டி சமூகம் கொண்டாடியது, பல்லாயிரம் போராளிகள் மடிந்து மண்ணோடு மண்ணாக கலந்தனர்,
அவர்களுடைய கல்வெட்டுக்கள் எங்கும் இல்லை, அதற்கான அனுமதியும் அதிகார சக்திகளினால் சம்பந்தப்பட்வர்களுக்கு வழங்கப்படவில்லை,
சமூக சீர்திருத்தத்தை நீதி நியாயத்தை உயிரினும் மேலாக கருதி உயிரைப்பணயம் வைத்து போராடிய இந்த (unsung heroes) என்ற வகைக்குள் அடங்கக்கூடிய, கொண்டாடப்படவேண்டிய இன்னும் கொண்டாடபடாமல் இருக்கும் தோழர் தமிழரசன் போன்றோரை குறைந்த பட்சம் தெரிந்தாவது கொள்ளுங்கள் என்கிறது இந்த "ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் " என்ற நூல் .
தமிழ் சமூகத்தில் அன்றும் இன்றும் விரல் விட்டு எண்ணி விடக்கூடிய சில எழுத்தாளர்களே வறுமைக்கோட்டின் கீழ் வாழாதவர்கள்.
ஒரு சினிமா படம் வெளியாகிய உடனே பார்க்கிற துடிப்பும் ஆர்வமுள்ள நாம் ஒரு எழுத்தாளரின் நாவலோ புத்தகமோ வெளிவந்தவுடன் அதை அடித்து பிடித்து வாசிப்பதில்லை,
இன்று நம் மத்தியில் ஈழத்தமிழ் நாவலாசிரியர்கள் பல Hollywood படங்களை படைக்கவல்ல விடயங்களை அவர்கள் நாவல்களில் ஆவணப்படுத்தியது மட்டுமல்லாது விறுவிறுப்பாக வாசிப்பை தூண்டும் வகையிலும் எந்த பரதிபலனும் இல்லாமல் தம் ஆன்ம திருப்திக்காக மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
எழுதிக் கொண்டிருப்பவர்கள் பலர் விடுதலைப்போராளிகள் மற்றும் சமூகப்போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் அவர்கள் கதாபாத்திரங்கள் பல நலிவுற்ற
சமூகத்தை சார்ந்தவர்களின் பாடுகளை பிரதிபலிக்கின்றது / பிரதிநிதிப்படுத்துகின்றது.
சில விடுதலைப்போராளிகள் தங்கள் வாழ்கை குறிப்பை தாங்களே ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்
இதில் முன்னோடியாக ஈழத்தின் தொடக்க காலப்போராளியான புஷ்பராணி சிதம்பரியின் டைரிக்குறிப்பைச்சொல்லலாம்,
நடிகர்களுக்கு உள்ளது போல் எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றும் வேண்டாம் குறைந்த பட்சம் அவர்கள் சிந்தனைகளைப்பகிர அல்லது தெரிந்து கொள்ளவாவது செய்யலாம்.
சட்டம், ஒழுங்கு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பு என்ற பேரில் எந்த ஒரு அரசும் இன்று மேற்குலக முதலாளித்துவ ஐனநாயக வழிமுறையில் தனிமனித சுதந்திரத்திற்கான கதவுகளை அடித்து சாத்தலாம்;
அநேகமான மேற்குலக ஐனநாயக அரசியல் சாசனங்களில் இனியொரு தேசத்தில் ஒரு ஹிட்லர் உருவாகுவதற்கு தடையாக எந்தவொரு வழிமுறையும் இல்லை;
அது போல் நடக்காமல் தடுப்பதற்கு இருக்கும் ஒரே வழி மக்கள் எழுச்சி மற்றும் புரட்சி மட்டும் தான்.
மக்கள் புரட்சியை கொண்டு செல்ல அந்த பாதையை ஒருங்கிணைக்கவும் வழி நடத்தவும் சில தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது.
அழகான ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் இருந்து கொண்டு அவ்வாறான காரியங்களைச்செய்ய முடியாது.
அந்த வகை மனிதர்கள் அவர்கள் அர்பணிப்புக்கள், தியாகங்கள், வேதனைகள் மற்றும் துயரங்கள் அனைத்துமே சம கால, எதிர்கால மனிதர்கள் மனச்சாட்ச்சிக்குள் நிச்சயமாக உறுத்திக்கொண்டிருக்கப்படவேண்டியவை.
தோழர் தமிழரசன் போன்ற அரிய மனிதர்களின் போராட்ட கோட்பாடுகள், தத்துவங்கள், யுக்திகள், கொள்கைகள் என்பவற்றை அருகில் இருந்து அவதானித்த மனிதர்கள் அதிகம் பேர் இருந்தாலும் அதில் அதிகாரத்தின் துப்பாக்கிகளுக்கு இரையாகாமல் வாழும் சக போராளிகள் சிலர்,
அதிலும் சிலரே கொண்ட கொள்கையை தம் வாழ்வில் தொடர்ந்தும் ஒரு அங்கமாக ஏதோ ஒரு வகையில் செயற்படுத்தி வருவார்கள், அந்த வகை மனிதரில் ஒருவர் தான் தோழர் பாலன்.
தோழர் பாலனின் " சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் மற்றும் "இலங்கை மீதான இந்தியாவின் ஆக்கிரப்பு " போன்ற புத்தகங்களும் இந்தியாவின் அமைதியான ஆன்மீக முகத்தில் கறையாக படிந்திருக்கும் ஒடுக்குமுறை மற்றும் முதலாளித்துவத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.

காந்திமதி (Kanthi Mathi ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசிக்கும் காந்திமதி (Kanthi Mathi ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ள காந்திமதி அவர்களுக்கு எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் ஏற்கனவே எனது “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” மற்றும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல்கள்; குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
மதிப்பிற்குரிய நண்பர் பாலன் அவர்களுக்கு ,
வணக்கம் .
தங்களின் " ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலின் பிரதியை பற்றிய கருத்துகள் என்னுடைய கோணத்தில் ..
தமிழரசன் அவர்களுடன் நெருங்கி பழகிய தோழர் என்ற முறையில் அவரின் மார்க்ஸ்சிய சிந்தனை , மார்க்சியத்தை உள்வாங்கி அதை அவர் நடைமுறைப்படுத்திய விதம் மற்றும் மக்கள் மீதான அவரின் அக்கறை அனைத்தையும் உங்களின் நேரிடை அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் .
உங்கள் நூலின் சாராம்சம் .... தோழர் தமிழரசன் ஒரு மார்க்சியவாதி . மக்கள் நலனுக்காக படிப்பை துறந்து தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் . இலங்கை தமிழரின் தனித்தமிழ் கோரிக்கையை தீவிரமாக ஆதரித்தவர் . அதே போல் இந்தியாவிலும் தனி தழ்நாடு தான் தீர்வு என்று இலங்கை விடுதலை இயக்கங்கள் பாணியில் இங்கும் "தமிழர் விடுதலை படை " இயக்கம் மூலமாக பல போராட்ட முயற்சிகளை மேற்கொண்டவர் . போராட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுதே தனது உயிரை தியாகம் செய்தவர் . இலங்கை இந்திய உறவை பொறுத்த வரை இந்தியா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநிறுத்தி கொண்டது .
என் பார்வையில் ..
எந்த வகையிலும் இந்தியாவின் மற்றோரு நாட்டின் மீதான அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது . ஆனால் முதலாளித்துவ உலகில் தனக்கு கீழ் உள்ள நாடுகளின் மீது தங்களின் ஆதிக்க வெளிப்பாட்டை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தவே ஒவ்வொரு நாடுகளும் தங்கள் சுயலாப நோக்கில் முனைகின்றன . அதற்காக சாம , தான , பேத , தண்ட என அனைத்து அடக்குமுறைகளையும் கையாளுவது கண்கூடு . அதே போல் இந்தியாவின் வளங்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களாலும் , பன்னாட்டு அரசுகளாலும் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றது .
தமிழரசன் அவர்கள் மார்க்சியவாதியாக இருந்தாலும் மண்ணுக்கேத்த மார்க்சியம் என்ற அணுகுமுறை அவரிடம் இல்லை என்பதே என் கருத்து
இலங்கை மண்ணில் அன்று இருந்த சூழலில் உருவான போராட்ட அணுகுமுறையை இங்குள்ள இந்திய சூழலுக்கு பொறுத்த நினைத்தது சரியான பார்வை கோணமாக இல்லை .
மக்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை தக்க வைக்க எளியவனை ஏய்த்து தன்னை வலியவனாக்க அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என வாழ பழகி கொண்டுள்ளனர் உலகம் முழுக்கவே . வாழவே வழியில்லை , அடிப்படையே கேள்வி என்ற நிலை வரும் பொழுது மட்டுமே போராட்ட மனநிலையும் , போராட முனைபவர்களுக்கு துணை நிற்கவும் முனைகின்றனர் .
உணர்வுகள் தூண்டப்படும் பொழுது தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமையும் , போராட்ட மனநிலையும் ஈழ தமிழர் பிரச்சனையிலும் , ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் அறிந்ததே
ஆனால் அதுவே அடிப்படை ஆதாரத்தையே பாதிக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அமுங்கியும் போகும் .
இலங்கை போராட்டத்தில் போராட்டத்துக்கான கரு அங்கு இருந்தது .அங்குள்ள மக்களே தேவையிலிருந்து இனத்துவேசத்துக்கு எதிராக இணக்கமாக இனி வாழவே முடியாது என்ற சூழலில் போராட்டத்திற்கு துணிந்தனர் .
இங்கு தமிழ்நாட்டில் இந்தியாவில் அப்படிப்பட்ட ஒரு சூழலே இன்று கிடையாது . இலங்கையின் புரட்சியை இலங்கை மக்களே முடிவு செய்ய வேண்டும் , அது போலவே தனி தமிழ்நாடு வேண்டுமா இல்லையா என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் .
புரட்சி என்பது மாலை விருந்தல்ல - மாவோ .
எளிமையான இலகுவான வழிமுறைகள் மூலமாக மக்கள் மனமாக தில் இடம் பெற முடியாது . தனி தமிழ்நாடு என்ற கோஷமும் இங்கு கிடையாது , விருப்பமும் கிடையாது இன்றுள்ள சூழலில் .
ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழரசன் அவர்கள் நல்ல மார்க்சியவாதியாக மிளிர வேண்டிய நிலையிலிருந்து தவறி உணர்வு ரீதியாக கொடுத்த பார்வையின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வழிவிலகளால் தவறான முடிவை தேடி கொண்டார் .
கருத்தை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி பாலன் சார் .

தமிழ்மகன் புருசோத்தமன் ( Tamilson purusothaman ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருக்கும் தமிழ்மகன் புருசோத்தமன் ( Tamilson purusothaman ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கரவெட்டியைப் பிறப்பிடமாக கொண்ட தமிழ்மகன் புருசோத்தமன் அவர்கள் தற்போது லண்டனில் மருத்துவராக கடமையாற்றி வருகிறார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தமிழ்மகன் புருசோத்தமன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் ஆசிரியர் - தோழர் பாலன் முதற்பதிப்பு 1 செப்டம்பர் 2017
இது ஒரு காலத்தின் தேவையான புத்தகம்.
தோழர் தமிழரசன் போன்றோரை இந்த உலகம் மறந்து விடாதிருக்க , புதிய தலைமுறைக்கு போராளிகள் வரலாற்றை எடுத்துச்சொல்ல அவர்களுடன் கூடவே இருந்தோர் கடமைப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு என்னும் பிரதேசம் இந்தியா என்ற தேசியத்தின் கீழ் அடிபட்டு இருப்பதும் , அதனால் தமிழர்கள் அடைந்து வரும் பாதிப்புகள் உச்சத்தை அடைந்த வேளையிலும் , தமிநாடு விடுதலைக்காக போராடிய போராளிகளை நினைவூட்டுவது சிறந்த விடயம்.
இந்த புத்தகம் தமிழரசனை மையமாக பேசினாலும் , மார்க்சிசம், லெனினிசம் , மாஓ , ஈழ விடுதலை போராட்டம் , இந்தியவல்லாதிக்கம் என கடந்த கால , நிகழ் கால அரசியல் நிலைமைகளையும் விளக்குகின்றது.
சாதி என்பது பொருளாதாரம் சார்ந்த கட்டமைப்பு , சாதியம் என்பதில் பொருளாதார வர்க்க வேறுபாடே பிரதானமாக வருகின்றது. கம்யூனிசம் சாதியை எதிர்க்க வேண்டிய தாற்பரியத்தை அழகாக கூறியுள்ளார்.
போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் தந்திரத்தை பல உவமான உவமேயங்கள் கொண்டு தனக்கே உரிய பாணியில் மிக சுவாரசியமாக எழுதியுள்ளார் தோழர் பாலன்.
தோழர் பலனுக்கும் எனக்கும் பொதுவாகவே நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. அதே போல் இங்கும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு.
சில கருத்துக்களை எதிர்த்து வாதிட முடியாத வகையில் பல கோணங்களிலும் சிந்தித்து வரைவது இவரின் கைவந்த கலை.
வன்முறையே சிறந்த ஆயுதம் எனறு ஆணித்தரமாக நிறுவி உள்ள தோழர் , தனித்த தந்திரம் இல்லாத வன்முறை வேலைக்கு ஆகாது என்பதை குறிப்பிடவில்லை.
வன்முறையின் பால் சென்ற புலிகளை ஆதரிப்பதாகா நேரடியாக கூற ரொம்பவே தயங்குகின்றார்
புலிகள் சாதியத்தை ஒழிக்க ஒன்றுமே செய்யவில்லை என்பது அபத்தம் , தங்களால் முடிந்ததை செய்தனர் என்பதே உண்மை.
தான் இலங்கையில் உள்ள தோழர்களுக்கு எழுதிய கடிதத்தையும் , அது எவ்வாறு புலிகளை சென்றடைந்தது என்பதையும் , கடிதத்தில் பேர் வந்ததற்காகவே செய்த கொலைகள் என பல ஆவலாக எதிர்பார்த்த விடயங்கள் இல்லை.
இதை வேண்டும் என்றே தவிர்த்தாரா , அல்லது தேவை இல்லை என்று தவிர்த்தாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.
இந்திய அரசாங்கத்தின் செயல்களை ரொம்பவே அவதானித்து , தரவுகளுடன் சேகரித்து வருகின்றார் என்பது வெளிச்சம். சில தரவுகள் வியப்பை தருவதாக உள்ளது.
நானும் அவர் ஊரை சேந்தவன் என்பதால் சில சம்பவங்கள் வாசிக்க சுவாரஸ்யமாகவே உள்ளன.
யாழ்பாணத்து சாதியை நன்கே வரிந்து கட்டியுள்ளார். ஆனால் நிகழ்கால நிலைமையை இவர் சரியாக விளங்கி கொள்ளவாய்ப்பில்லை. பழைய நிலைமையின் அடிப்படையில் வரிந்து கட்டியுள்ளார்.
சாதியில் தான் சர்ச்சை , சர்ச்சையில் தான் பிரபலம் , பிரபலத்தில் தான் விற்பனை என்ற சூத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லை.

-தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லை.
அதனாலேயே இந்திய அரசு அவர்கள்மீது சூடு நடத்துகிறது!
ராமேஸ்வரம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவற்படை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு அவர்கள் என்ன பயங்கரவாதிகளா அல்லது அவர்கள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்தார்களா?
எல்லைதாண்டி வரும் எதிரி நாடான பாகிஸ்தான் மீனவர்கள் மீதுகூட இந்திய கடற்படை துப்பாக்கிசூடு நடத்துவதில்லை.
ஆனால் தனது சொந்த நாட்டு தமிழக மீனவர்கள் மீது என் இந்திய கடலோரக் காவற்படை துப்பாக்கிசூடு நடத்துகிறது?
தமிழக மீனவர்களை இந்தியர்களாக அரசு கருதவில்லையா? அவர்களுடைய இழப்பு குறித்து அதற்கு அக்கறை இல்லையா?
இதுவரை 600க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும் என பா.ஜ.க கட்சியினர் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஆனால் கடந்த வாரம் இந்திய கடற்படை இலங்கைக்கு விஜயம் செய்து தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளித்துள்ளது.
அதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான கோடி ரூபா பெறுமதியான யுத்தக் கப்பல் ஒன்றையும் இந்திய அரசு கடந்த மாதம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
தமிழக மக்கள் ஆண்டுதோறும் 86 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக இந்திய அரசுக்கு செலுத்துகிறார்கள்.
ஆனால் தமிழக மக்களின் வெள்ளநிவாரணத்திற்கு பணம் இல்லை என்று மத்திய அரசு கைவிரிக்கிறது.
அதேநேரத்தில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பலை வழங்குகிறது.
தமிழக மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
இந்திய அரசு தமிழர்களை ஒருபோதும் இந்தியர்களாக கருதுவதில்லை என்பதையே தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிசூடு காட்டுகிறது.

தோழர் தமிழ்நெறியன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழர் தமிழ்நெறியன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் தமிழ்நெறியன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தமிழ்த்தேசத்தின் புரட்சிகர வரலாற்றில் இலங்கையின் "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" அமைப்பிற்கு முக்கிய இடம் உண்டு.குறிப்பாக தோழர் பாலன் (எ) பாலச்சந்திரன் அதில் முக்கியமானவர்.
தமிழ்நாட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவியதால் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் இருந்தார்.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) விற்கும் அதன் தலைவர் தோழர் தமிழரசனுக்கும் தோளோடு தோள் நின்றவர்.
தமிழ்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட தோழர் பாலன் "ஓர் ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" எனும் நூலை தற்போது எழுதியுள்ளார்.
அது தோழர் தமிழரசனின் வரலாறு மட்டுமல்ல மார்க்சிய-லெனினிய சித்தாந்த வழியில் போராடிய தமிழ்த்தேசிய புரட்சிகர முன்னோடிகளின் வரலாறும் கூட.
"ஓர் ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" எனும் இந்நூல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திசைகாட்டும் கையேடு ஆகும்.
மார்க்சிய-லெனினிய -மாவோ சிந்தனையை தனது தத்துவமாக வரித்துக் கொண்டவர் தான் தோழர் தமிழரசன்.
"தோழர் தமிழரசனும் அவர் பின்பற்றிய தத்துவங்களும்" எனும் தலைப்பில் அமைந்த பகுதியானது.அவர் பின்பற்றிய தத்துவத்தை கூறியதோடு நிற்காமல் "மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை"யின் சுருக்க அறிமுகமாகவும் அமைந்து விட்டது.எதிர் புரட்சியாளர்களை-திரிபுவாதிகளை அம்பலப்படுத்தியும் விரிகின்றன அப்பக்கங்கள்.
"தோழர் தமிழரசனும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்" தலைப்பு தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பை போராட்டங்கள் மூலம் கம்யூனிஸ்டுகள் நடைமுறைப்படுத்தியதையும் கூறியுள்ளார் தோழர் பாலன்.
குறிப்பாக தலைவர் தமிழரசன் அவர்களின் சாதி ஒழிப்புக்கான தத்துவ பங்களிப்பையும்,நடைமுறைகளையும் விளக்கப்படுத்துகிறார்.
இந்நூலில் உள்ள அனைத்து தலைப்புகளும் மிகவும் முக்கியமானதாகும்.
தலைவர் தமிழரசனைப் பற்றி எழுதுவதை விடவும் அதை சரியாக தலைப்பிட்டு ஒரு சட்டகத்தில் அடைப்பது முக்கியமான விடயம்.
அதை தோழர் பாலன் திறம்பட செய்துள்ளார்.அது அவருக்கு ஒன்றும் கடினமான பணியும் அல்ல.
தமிழ்நாட்டில் தற்போது எழுந்து வரும் சாதி-மத ஆதிக்கங்களை முறியடித்து பொதுமைச் சமூகத்தை கட்டி எழுப்பப் பாடுபடும் ஒவ்வொருவரும்,சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகம் இப்புத்தகம்.