Monday, April 29, 2019

ஏன் இத்தனை நாள் இதனைக் கேட்கவில்லை என்று

ஏன் இத்தனை நாள் இதனைக் கேட்கவில்லை என்று
சம்பந்தர் அய்யா மீது சினம் கொள்வதா- அல்லது
இப்பவாவது அவருக்கு இதனைக் கேட்க தோன்றியிருக்கிறதே என்று
ஆறுதல் அடைவதா என்றும் தெரியவில்லை
ஆனால் அவர் கேட்கும்போதும் சரி 
அல்லது கேட்காமல் இருக்கும்போதும் சரி
அதனை அய்யாவின் “சாணக்கியம்” என்று
எப்போதும் புகழ்பாட ஒரு கூட்டம் இருக்கிறதே
அதை நினைத்து கவலை கொள்வதா அல்லது
இதெல்லாம் தமிழினத்தின் சாபக்கேடு என்று
எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துவிடுவதா?
கலைஞர் கருணாநிதி ஈழத்தில் பிறந்திருந்தால்
இந்நேரம் பிரபாகரன் மகன் டாக்டருக்கு படித்துக்கொண்டிருப்பான்
என்று ஒரு திமுக தலைவர் அண்மையில் பேசியிருந்தார்.
அதற்கு ஒரு உணர்வாளர் கலைஞர் ஈழத்தில் பிறந்திருந்தால்
புலியில் சேர்ந்து போராடி மாவீரர் ஆகியிருப்பார்
அல்லது முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களில் ஒருவராகியிருப்பார்
அல்லது இந்தியா வந்து அகதிமுகாமில் வாடியிருப்பார் என்றுரைத்தார்.
யாருக்கும் எந்த சநதேகமும் தேவையில்லை.
கலைஞர் ஈழத்தில் பிறந்திருந்தால் சம்பந்தர் அய்யாவாக இருந்திருப்பார்.
ஆனால் வருத்தம் என்னவெனில்
தமிழக மக்கள் மீது இரக்கம் கொண்ட எமன்
இன்னும் ஈழத் தமிழர்கள் மீது இரக்கம் கொள்ளவில்லையே?

அய்யா! சோறு முக்கியமா? தமிழ் இன விடுதலை முக்கியமா?

அய்யா!
சோறு முக்கியமா? தமிழ் இன விடுதலை முக்கியமா?
எனக்கு சோறுதான் முக்கியம். ஏனெனில் எனக்கும் பசிக்கும் இல்லே!
குறிப்பு – சம்பந்தர் அய்யாவுக்கு மிகப்பெரிய சொகுசு பங்களா கொழும்பில் இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ளது.

•யார் இந்த தோழர் தமிழரசன்?

•யார் இந்த தோழர் தமிழரசன்?
14.04.1945 யன்று பிறந்த தோழர் தமிழரசன் 01.09.1987 யன்று தனது 42வது வயதில் தமிழக உளவுப்படையினரால் கொல்லப்பட்டார்.
அவர் உயிரோடு இருந்திருந்தால் 14.04.2019 யன்று தனது 74 பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார்.
பொறியியல் படிப்பை படித்த தமிழரசன் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவரோ மக்களுக்கான போராட்ட வாழ்வை விரும்பி ஏற்றார். அதனாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
தன் உயிர் பிரியும் அந்த இறுதிக் கணத்தில்கூட அவர் மக்களை நேசித்தார். அதனாலேயே அவர் தன் கையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தாமல் மௌனித்தார்.
அவர் விரும்பியிருந்தால் கையில் இருந்த கிரினைட் குண்டை வீசி தப்பிச் சென்றிருக்க முடியும்.
அவர் நினைத்திருந்தால் கையில் இருந்த சப் மிசின்கன் மூலம் பலரை சுட்டுக் கொன்றிருக்க முடியும்.
தன் இறுதிக்கணம்வரை மக்களை நேசித்த அத் தமிழரசனை, சதி செய்து கொன்றவர்கள் அவரை “பயங்கரவாதி” என்றார்கள்.
தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையை நசுக்கிவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால் 30 ஆண்டுக்குள் தமிழக மக்களே தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையையும் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள்.
இன்று இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு தமிழக இளைஞனும் தன்னை தோழர் தமிழரசனாகவே நினைத்துக்கொள்கிறான்.
இன்று யாரும் தோழர் தமிழரசனை மறுத்து விட்டு தமிழ்த் தேசியம் பேசிவிட முடியாது. இதுதான் தோழர் தமிழரசனுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இன்று சிலர் தேர்தல் பாதை மூலம் தமிழ்த் தேசிய விடுதலை அடைய முடியும் என நம்புகிறார்கள்.
இன்னும் சிலர் தமிழன் ஒருவர் முதலமைச்சரானால் தமிழ்த் தேசிய விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள்.
வெகுவிரைவில் இவர்களும் தோழர் தமிழரசன் முன்வைத்த ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதை மட்டுமே தமிழ்த்தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
குறிப்பு-
தோழர் தமிழரசன் பற்றி மேலதிக விபரம் அறிந்துகொள்ள விரும்புவோர் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்ற நூலைப் படியுங்கள்.

தோழர் தமிழரசனை ஏன் நினைவு கூர வேண்டும்?

•தோழர் தமிழரசனை ஏன் நினைவு கூர வேண்டும்?
எதிர்வரும் 14.04.2019 யன்று தோழர் தமிழரசனின் 74வது பிறந்ததினம் ஆகும். இந்த நாளில் நாம் ஏன் அவரை நினைவு கூர வேண்டும்?
தோழர் தமிழரசன் மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைகளை பின்பற்றியதால் நினைவு கூர வேண்டுமா?
இல்லை. அவரைப் போல் வேறு பலரும் இந்த தத்துவங்களை பின்பற்றியிருக்கின்றனர்.
அப்படியென்றால், தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததால் அவரை நினைவு கூர வேண்டுமா?
இல்லை. அவருக்கு முன்னரும் பலர் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்துள்ளனர்.
தேர்தல் பாதையை நிராகரித்ததால் அவரை நினைவு கூர வேண்டுமா?
இல்லை. அவரைப் போல் பலர் தேர்தல் பாதையை நிராகரித்துள்ளனர்.
அப்படியென்றால் எதற்காக அவரை நாம் நினைவு கூர வேண்டும்?
அவர்தான் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தவர்.
அவர்தான் தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டியவர்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என கூறியவர் தோழர் தமிழரசன்.
தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஈழத் தமிழனும் விடுதலை அடைவான் என்று கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்து முழு இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவாது. மாறாக மாபெரும் தமிழ் இன அழிவை மேற்கொள்ளும் என்று முள்ளிவாய்க்கால் அவலத்தை அன்றே எதிர்வு கூறியவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கலக்க வேண்டும் என்று கூறியதோடு தானே அதற்கு முன்மாதிரியாக விளங்க முயற்சி செய்தவர் தோழர் தமிழரசன்.
தோழர் தமிழரசன் தமிழ் மக்களுக்காக உண்மையாகவே போராடினார். அதனால்தான் அவர் உளவுப்படைகளின் மூலம் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான் தோழர் தமிழரசன் நினைவு கூரப்பட வேண்டும் என்கிறோம்.

போதும் ஐயா. பிளீஸ் எங்களை விட்டிடுங்க ஐயா.

செய்தி – நாங்கள் நினைத்தால் இந்த அரசை எந் நேரத்திலும் கவிழ்ப்போம் - சம்பந்தர்
ஐயா!
இந்த அரசு கவிழும்போதெல்லாம் ஓடிச் சென்று காப்பாற்றிவிட்டு இப்ப எதற்காக இந்த எச்சரிக்கை ஐயா?
நீங்க இந்த எச்சரிக்கையை விடும்போது பிரதமர் ரணில் சிரித்துவிட்டு செல்கிறார். இதன் அர்த்தம் என்ன ஐயா?
சிறையில் உள்ளவர்களின் விடுதலையை சுமந்திரன் விரும்பவில்லை என்று பசில்ராஜபக்ச கூறுகிறார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்து சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ் மாணவர்கள் படிக்க வசதி இன்றி கஸ்டப்படுவதாக விமல்வீரவம்ச கூறுகிறார்.
கரடிகளே காறித் துப்பிடுச்சே ஐயா.
எப்படி ஐயா இதை எல்லாம் தாங்கிக்கொண்டு இருக்கிறியள்?
போதும் ஐயா. பிளீஸ் எங்களை விட்டிடுங்க ஐயா.

•தேர்தல் அறிவித்தவுடன்

•தேர்தல் அறிவித்தவுடன்
முதலில் காஸ்மீரில் குண்டு வெடித்தது
அடுத்து சதீஸ்கரில் குண்டு வெடித்துள்ளது.
இனி தமிழகத்தில் குண்டு வெடிக்குமா?
தேர்தல் அறிவித்தவுடன் காஸ்மீரில் குண்டு வெடித்தது. அதில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து பலரும் சந்தேகம் தெரிவித்தனர். தேர்தல் வெற்றிக்காக மோடி மேற்கொண்ட தாக்குதல் என பலரும் கூறினார்கள்.
இப்போது சதீஸ்கரில் இன்னும் இரு தினங்களில் வாக்களிப்பு நடைபெற இருக்கும் நிலையில் குண்டு வெடித்து அதில் பாஜக எம்எல்.ஏ மற்றும் 5 பாதுகாப்பு வீரர்கள் இறந்துள்ளனர்.
காஸ்மீர் போலவே இங்கும் குண்டு வெடித்தவுடன் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் அதன் பழி மாவோயிஸ்ட்டுகள் மீது போடப்பட்டுள்ளது.
இது உண்மையிலே மாவோயிஸ்டுகள் செய்தார்களா இல்லையா என்பதைவிட அடுத்த குண்டு தமிழகத்தில் வெடிக்கப்போகிறதா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.
ஒருவேளை அவ்வாறு தமிழகத்தில் குண்டு வெடித்தால் அதன் பழி யார் மீது போடப்படும்? புலிகளும் இப்போது இல்லை. அப்படியென்றால் யார் மீது சுமத்தப் போகிறார்கள்?
அதைவிட சுவாரசியமானது, அவ்வாறு தமிழகத்தில் குண்டு வெடிக்குமாயின் அக் குண்டு வெடிப்பில் மரணமடையப்போகும் பாஜக பிரமுகர் யார்?
எதற்கும் தமிழிசை அக்கா உஷாராய் இருப்பது நல்லது.

இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898)

இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898)
என்றும் அவரை நினைவில் கொள்வோம்!
தமிழகத்தில் தந்தை பெரியார் போன்று இலங்கையில் டாக்டர் கோவூர் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. என்றும் நினைவில் கொள்ள வேண்டியது.
டாக்டர் கோவூர் அவர்களை நான் 1975களில் நெல்லியடி மத்திய மாகாவித்தியாலய மைதானத்தில் நடந்த “மனோ இரவு” என்னும் நிகழ்வில் கண்டேன்.
மேடையில் நின்ற அவர் ஏதோ சில வார்த்தைகளை கூறினார். அப்போது கீழே நிகழ்வு பார்த்தக்கொண்டிருந்த சிலர் மயங்கினார்கள்.
அவர்களை மேடைக்கு அழைத்து மயக்க நிலையிலேயே அவர்கள் ஆடவும் பாடவும் செய்தார். பின்னர் அவர்களின் மயக்க நிலையை போக்கினார். இதன் மூலம் “கிப்னோடிச” முறையை அவர் எமக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரது இந்த செய்கை அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை எனக்கு கொடுத்தது. அப்போது அவர் இந்தியாவில் சாய்பாபாவின் புட்டபர்த்திக்கே சென்று சவால் விட்டவர் என்று எனது தந்தையார் கூறியது எனக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
சாய்பாபாவின் புட்டபர்த்தி வாசலில் நின்று அங்கு வந்த பக்தர்களுக்கு பாபா போன்று விபூதி எடுத்துக் கொடுத்தாராம் கோவூர் அவர்கள்.
அப்பாவி பக்தர்கள் இவர் இன்னொரு பாபா என்று நினைத்து அவரை வழிபட்டார்களாம். அவர்களிடம் கோவூர் தான் செய்தது மந்திரம் அல்ல, வெறும் தந்திரமே என்றும் பாபாவும் இதையே செய்வதாகக் கூறினாராம்.
பக்தர்களுக்கு தனது மோசடிகள் தெரிந்துவிடுமோ என அஞ்சிய பாபா தனது செல்வாக்கு மூலம் பொலிசாரைக் கொண்டு கோவூரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம்.
மந்திரத்தால் தாலி வரவழைக்கும் பாபா மந்திரத்தால் “கொண்டா” மோட்டார் சைக்கிள் வரவழைத்துக் காட்டுவாரா? என்பதே கோவூர் பாபாவுக்கு விட்ட சவால். அதை பாபா ஒருபோதும் நிறைவேற்றவில்லை.
கோவூர் பற்றி மேலும் அறியும் எனது ஆர்வம் அவரது “மனக் கோலங்கள்”, “கோர இரவுகள்” என்னும் புத்தகங்களைப் படிக்க வைத்தன. இவை வீரகேசரி பிரசுரமாக அன்று வெளியிடப்பட்டவை. அதிக அளவில் விற்கப்பட்டவை.
இதில் அவர் தான் சிகிச்சை அளித்த நோயாளிகளின் கதைகளைக் கூறியிருக்கிறார். பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நோயாளிகளை அவர் தனது கிப்னோடிச சிகிச்சை மூலம் சுகப்படுத்தியிருக்கிறார். இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் அயராது பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இன்றும் இலங்கையில் மட்டுமல்ல எம்மவர்களுக்கு லண்டன், கனடாவிலும் பேய் பிசாசு பிடிக்கிறதாம். இங்கும் பில்லி சூனிய கூத்துகள் அரங்கேறுகின்றன. எனவே இதற்கு எதிராக ஆயிரம் கோவூர்களின் பணி அவசியமாகிறது.