Friday, May 31, 2019

•ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம்

•ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம்
பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை அரசின் நியாயம்?
பத்து வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு. அதைவிட சரணடைந்த சிறுவனைக் கொல்வது மிகப் பெரிய தவறு.
“பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி” என்று சுட்டுக் கொன்றமைக்கான காரணத்தை கோத்தபாய ராஜபக்ச கூறினார்.
1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீராவை பயங்கரவாதி என்று இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது.
அப்போது விஜயவீராவின் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் “ரோகன விஜயவீரா பயங்கரவாதி எனவே அவரது பிள்ளைகளும் பயங்கரவாதி” என்று ஒரு பிள்ளைகூட சுட்டுக் கொல்லப்படவில்லை.
மாறாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உரிய அனைத்து செலவுகளும் அரசே பொறுப்பேற்றது.
விஜயவீராவின் மகன் உபுன்டு விஜயவீரா படித்து பட்டம் பெற்றுவிட்டார். அதுமட்டுமல்ல தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார்.
ரோகண விஜயவீராவின் மகனை படித்து பட்டம் பெற வைத்த இலங்கை அரசு பிரபாகரனின் மகனை சுட்டுக் கொன்றுள்ளது.
விஜயவீராவின் ஆறு பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றிய இலங்கை அரசு பிரபாகரனின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுள்ளது.
இதற்கு என்ன காரணம்?
விஜயவீராவும் அவர் மகனும் சிங்கள இனம். பிரபாகரனும் அவர் மகனும் தமிழர் இனம். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கும்?
இப்படியான இனவாத இலங்கை அரசிடமிருந்து தமிழருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

•அடங்க மறுப்போம்!

•அடங்க மறுப்போம்!
நாம் கேட்க வேண்டியது மாணவர்களை விடுதலை செய்யும்படி அல்ல. மாறாக, பிரபாகரன் படம் வைத்திருந்தால் என்ன தவறு என்றே கேட்க வேண்டும்.
நாம் அடங்கி இருந்து கெஞ்சிக் கொண்டிருந்தால் அவர்கள் பிரபாகரன் படம் வைத்திருந்தாக கைது செய்வார்கள். பிரபாகரன் படத்திற்கு லைக் போட்டதாக கைது செய்வார்கள். இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கைது செய்து கொண்டே இருப்பார்கள்.
ஒருமுறை அடங்க மறுத்து, “பிரபாகரன் படத்தை வைத்திருந்தால் என்ன தவறு?” என்று கேட்டுப் பார். அதிசயம் நிகழும்.
ரோகன விஜயவீரா படம் வைத்திருக்கலாம். அவருக்கு நினைவு அஞ்சலி செய்யலாம். ஆனால் பிரபாகரன் படம் வைத்திருக்க கூடாது. அஞ்சலி செய்யக்கூடாது. இது என்ன நியாயம்?
இதைத்தான் குட்டக் குட்ட குனிபவனும் மடையன். குனிய குனிய குட்டுபவனும் மடையன் என்பது.
அவன் தேவை என்றால் மடையனாக இருந்தவிட்டுப் போகட்டும். ஆனால் எம்மால் இனி மடையனாக இருக்க முடியாது.
ஜேவிபி யை தடை செய்யவில்லை. எனவே ரோகன விஜயவீராவை கொண்டாடலாம். ஆனால் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பிரபாகரனை கொண்டாட முடியாது என்று நம் மத்தியில் உள்ள சில நாய்க்குட்டிகள் அரசுக்காக வாலாட்டுகின்றன.
இந்தியாவிலும் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பிரபாகரன் படம் வைத்திருப்பது குற்றம் இல்லை. ஜரோப்பிய நாடுகளிலும் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் பிரபாகரன் படம் வைத்திருப்பது குற்றம் இல்லை.
இது பற்றி கேட்டால் அரசு வீசி எறியும் இறைச்சித்துண்டிற்கு வாலாட்டும் இந்த நாய்க்குட்டிகள் வாய் திறப்பதில்லை.
இலங்கையிலும்கூட மாணவர்களை கைது செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாத சட்டப்பிரிவில் பிரபாகரன் படம் வைத்திருப்பது குற்றம் என்று கூறப்படவில்லை.
அப்படி குற்றம் என்றால் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரட்னவே. ஏனெனில் அவர் தனது புத்தகத்தில் பிரபாகரன் படத்தை பிரசுரித்துள்ளார்.
அதுமட்டுமல்ல சம்பந்தர் அய்யா உட்பட பல தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் புலித் தளபதிகளின் படத்திற்கு அஞ்சலி செய்வது, புலிப் பாடல்களை தமது தேர்தல் கூட்டங்களில் பயன்படுத்துவது என செய்து வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் எவரையும் கைது செய்யாத இலங்கை அரசு மாணவர்களை கைது செய்தது மட்டுமல்ல அவர்களை பிணையில் விடவும் மறுத்து வருகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அவசரகாலச் சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்த சுமந்திரன் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்த மாணவர்களை விடுவிக்க குரல் கொடுக்கிறாராம்.
அதில் கொடுமை என்னவென்றால் இந்த அரசு தம்மால்தான் காப்பாற்றப்பட்டதாக பெருமை அடிக்கும் சுமந்திரன் அந்த அரசால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க முடியாமல் இருக்கிறாராம்.
அவர் இன்னும் எத்தனை சுத்துமாத்துகளை தமிழ் மக்களுக்கு காட்டப்போகிறாரோ தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நாம் தொடர்ந்து அடங்கிப் போனால் இதுமாதிரித்தான் தொடர்ந்து எமக்கு நிகழப் போகிறது.
எனவே அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று மடிவது மேல்.
ஒரு முறை எழுந்து பார் தமிழா!

•நாய்கள் தமது வாலைக் கடிப்பதில்லை!

•நாய்கள் தமது வாலைக் கடிப்பதில்லை!
சஹ்ரான் போட்டோவை வைத்திருந்தாக ஒருவரைக் கைது செய்யும் அரசு சஹ்ரானுடன் சேர்ந்து போட்டோ எடுத்த ஹிஸ்புல்லாவைக் கைது செய்யவில்லை.
பயங்கரவாதிகள் தங்குவதற்கு வீடு கொடுத்தாக ஒருவரைக் கைது செய்யும் அரசு பயங்கரவாதிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்த ரிசாத்தை கைது செய்யவில்லை.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த ரிசாத்தின் சகோதரர் கூட கைது செய்யப்படவில்லை.
இத்தனை குறுகிய காலத்தில் ரிசாத் எப்படி மிகப் பெரும் கோடீஸ்வரானார் என்பதும் விசாரிக்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல , பிரபாகரன் படம் வைத்திருந்ததாக பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்த அரசு திலீபன் படத்திற்கு அஞ்சலி செலுத்திய சம்பந்தர் அய்யாவை கைது செய்யவில்லை.
தேர்தல் காலத்தில் புலிகளின் பாடல்களை போட்டு பிரச்சாரம் செய்த அஞ்கஜன் ராமநாதனைக்கூட கைது செய்யவில்லை
ஏனெனில் நாய்கள் ஒருபோதும் தமது வாலைக் கடிப்பதில்லை.

•நீ முட்டாளாக இருக்க உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை பரப்ப உனக்கு உரிமை கிடையாது!

•நீ முட்டாளாக இருக்க உரிமை உண்டு. ஆனால்
முட்டாள்தனத்தை பரப்ப உனக்கு உரிமை கிடையாது!
ஆண்டவர் இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார் என்றார்கள்
ஆண்டவர் இயேசு தண்ணீரில் நடந்து காட்டினார் என்றார்கள்
ஆண்டவர் இயேசு செங்கடலை இரண்டாக பிளந்து காட்டினார் என்றார்கள்
ஆண்டவர் இயேசு மரித்து மூன்றாள் நாள் உயிர்த் தெழுந்தார் என்றார்கள்
இத்தகைய அற்புதம் செய்த ஆண்டவர் தன் தேவாலயத்தில் குண்டு வெடித்ததை தடுக்க முடியவில்லை.
அதுமட்டுமல்ல அத்தகைய ஆண்டவரைக்கூட துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையே காக்க வேண்டி வந்து விட்டதே.
இப்போது நம்முன் எழும் கேள்வி என்னவெனில் தன்னையே காக்க முடியாத ஆண்டவர் தன் பக்தனை எப்படி காக்க போகிறார்?
சரி இது அவருடைய பிரச்சனை. அவரை நம்பும் பக்தனின் பிரச்சனை. ஆனால் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மக்களின் வரிப்பணத்தில் எதற்காக கடவுளைக் காக்க வேண்டும்?
பேசாமல் தேவாலயத்தை இழுத்து மூடினால் என்ன? ஆனால் அரசு அப்படி ஒருபோதும் செய்யாது.
ஏனெனில் மதமும் கடவுளும் தற்போது அரசைக் காக்கும் கருவிகளாக இருக்கின்றன.
அதனால்தான் தோழர் லெனின் கூறினார் “ உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்திவைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்”
அதனால்தான் கிருஸ்தவ நாடான லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் கிருத்தவ தேவாலயத்திற்கு அருகில் ஒரே ரோட்டில் நாலு பள்ளிவாசல்களையும் மூன்று இந்துக் கோயில்களையும் அமைக்க அரசு அனுமதித்துள்ளது.
அதுமட்டுமல்ல பஹ்ரன் முஸ்லிம் நாட்டில்கூட மிகப்பெரிய கிருஸ்னர் கோயில் கட்ட அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.
ஒருமுறை தந்தை பெரியாரிடம் ஆஸ்திகம் என்றால் என்ன? நாத்திகம் என்றால் என்ன? என்று கேட்டார்களாம்.
அவர் சிரித்துவிட்டு தனக்கே உரியபாணியில்“ கடவுளுக்கு செலவுக்கு பணம் தேவை என்று கோயில் வாசலில் நம்பிக்கையுடன் உண்டியல் வைப்பது ஆஸ்திகம். அதே உண்டியல் களவு போய்விடும் என்று கடவுளை நம்பாது சங்கிலி போட்டு பூட்டி வைப்பது நாத்திகம்” என்றாராம்.

முப்படை தளபதியும் இப்படி தூங்கினால்

முப்படை தளபதியும் இப்படி தூங்கினால்
குண்டு வெடிக்காமல் என்ன வெடிக்கும்?
எத்தனை பேர் பயிற்சி பெற்று வந்திருக்காங்கள்
எத்தனை கிலோ வெடி மருந்து கொண்டு
வந்திருக்காங்கள்
இந்தியாவில் பயிற்சி பெற்றாங்களா அல்லது
சிரியாவில் பயிற்சி பெற்றாங்களா என்பதும் தெரியவில்லை
அது ஏன் என்று இப்போது விளங்குகிறதா?
பாராளுமன்றத்தில் எம்.பி மார்தானே தூங்க முடியும்?
இவனுகள் எப்படி தூங்கிறாங்கள் என்று பாருங்கள்
இதைக் கேட்டால் பேஸ்புக்கை தடை செய்வாங்க
அல்லது எனக்கு மேலே வழக்கு போடுவாங்கள்
இவனுகளுக்கு வெட்டி சம்பளம்.
நாடு நல்லாய் விளங்கிடும்!

•பிரான்சில் ஒன்றுபட்டு செய்ய முடியுமென்றால்

•பிரான்சில் ஒன்றுபட்டு செய்ய முடியுமென்றால்
லண்டனில் ஏன் ஒன்றுபட்டு செய்ய முடியாது?
பிரான்சில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்றுபட்டு ஒருமித்து முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை செய்வதாக அறிய வருகிறது.
அனைவரும் ஒருமித்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதுவே அனைத்து தமிழ் மக்களின் விருப்பமாகும்.
இனப்படுகொலை நடைபெற்று பத்து வருடங்களாகிவிட்டது. இம்முறை இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலகிற்கும் நாம் உரத்து ஒரு செய்தியை கூறவேண்டும்.
“நீங்கள் எம்மை சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என்ற செய்தியே அது.
இந்த செய்தியை நாம் அனைவரும் ஒருமித்து ஒன்றுபட்டு கூற வேண்டும். லண்டன் அமைப்புகள் இதனை கவனத்தில் கொள்ளுமா?

•மகிந்தா வதந்தி பரப்புகிறாரா?

•மகிந்தா வதந்தி பரப்புகிறாரா?
வெடித்த குண்டும் அவருக்கு தெரிந்திருக்கிறது
இனி வெடிக்கப் போவதும் அவருக்கு தெரிகிறது
ஆனால் வவுணதீவில் பொலிசாரை சுட்டவர்களை மட்டும் இவருக்கு தெரியவில்லை.
இது எப்படி?
ஒன்றில் குண்டு வைப்பவர்கள் இவருடைய ஆட்களாக இருக்க வேண்டும்
அல்லது இவர் வதந்தி பரப்புவராக இருக்க வேண்டும்
எதுவாக இருந்தாலும் இவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்
ஏனெனில் வதந்தி பரப்பினால் தண்டனை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே குண்டு வைத்தவர்களுடன் தொடர்பு என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது வதந்தி பரப்புவதற்காக கைது செய்யப்பட வேண்டும்
எதுவாக இருந்தாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும்
ஆனால் அரசு அவரை கைது செய்யாவிட்டாலும் பரவாயில்;லை குறைந்த பட்சம் அவரிடம்’ விசாரணையாவது செய்திருக்கலாம்
இலங்கை ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள்
ஆனால் மகிந்தா விடயத்தில் அரசு நடந்துகொள்வதைப் பார்த்தால்
“சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் விதிவிலக்கு” என்பது போல் இருக்கிறது.