Tuesday, October 31, 2023
சம்பந்தன் தமிழரின் அடையாளம்.
சம்பந்தன் தமிழரின் அடையாளம். அவர் பதவி விலக தேவையில்லை – விக்கினேஸ்வரன்.
முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை ஈழத்து தலைலாமாவாக பயன்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் அரசியல் அறிவியலாளர் திருநாவுக்கரசு கூறினார்.
ஒறிஜினல் தலைலாமாவையே இந்தியா கைவிட்டுவிட்டது. அப்படியிருக்க ஈழத்து தலைலாமாவிற்கு இந்தியா உதவும் என்று எப்படி இந்த அரசியல் அறிவியாளர் நம்புகின்றார் என்று தெரியவில்லை.
இந்த ஈழத்து தலைலாமாவை அரசியலுக்கு அழைத்து வந்து மாகாண முதலமைச்சர் பதவியை கொடுத்தவர்கள் சம்பந்தரும் சுமந்திரனுமே.
பின்னர் இவருக்கு எதிராக ஆளுநரிடம் மனுக் கொடுத்தவர்களும் இந்த சம்பந்தரும் சுமந்திரனுமே.
அதனால் தமிழரசுக்கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி கண்டுள்ளார் இந்த ஈழத்து தலைலாமா
அதையெல்லாம் மறந்து எப்படி இவர் சம்பந்தருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் என்று பலருக்கு தோன்றும்.
அதொன்றுமில்லை. வயது மூப்பு காரணமாக சம்பந்தர் பதவி விலகினால் அடுத்து தன்னையும் பதவி விலகுமாறு கோரிவிடுவார்களோ என்ற அச்சம்தான்.
ஒருவர் தமிழகத்தை பலமுறை ஆண்டவர்
ஒருவர் தமிழகத்தை பலமுறை ஆண்டவர்
இன்னொருவர் தன்னையே “ஆண்டவர்” என்றவர்
இருவருமே தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைத்தவர்கள்.
கீழே உள்ள படம்,
சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று
சாய்பாபாவுக்கு கலைஞர் விளக்கிய போது
😂😂
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்த பைரவி என்ற அரசு பள்ளி மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஆழ்ந்த இரங்கல்கள்.
Monday, October 30, 2023
காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்திற்கு
காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்திற்கு இடையில் பெரும் ஆராவாரத்தோடு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு தானே காரணம் என்று ஈழத்து சிவசேனைத்தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அறிக்கை விட்டார்.
சேவை தொடங்கிய அடுத்த நாள் போதுமான பயணிகள் இல்லை என நிறுத்தப்பட்டது.
அடுத்து காலநிலை காரணம் என்று தற்போது ஓரேயடியாக நிறுத்தப்பட்டுவிட்டது.
கப்பற்சேவை ஆரம்பித்தமைக்கு தானே காரணம் என்று அறிக்கைவிட்ட சச்சிதானந்தம் அவர்கள் கப்பற்சேவை நிறுத்தப்பட்டது குறித்து கருத்து எதுவும் கூறவில்லை.
இப்போது தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரத்திற்கு இடையில் கப்பற் சேவை ஆரம்பிக்கப்போவதாக கதை கூறுகின்றனர்.
ஆனால் இவர்கள் எல்லாம் மறைக்கும் ஒரு செய்தி என்னவெனில் 1984ம் ஆண்டுவரை தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இருந்தது என்பதை.
அதுவும் இந்த கப்பற்சேவை ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருந்தது.
அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைவரை ரயில் நிலையத்திலேயே டிக்கட் பெற்றுக் கொள்ளலாம்.
நான் இவ்வாறு டிக்கட் பெற்று மதுரையில் எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த உலக தமிழாராய்ச்சி மாநாட்டை சென்று பார்த்து வந்தேன்.
கப்பற் சேவை மட்டுமல்ல அப்போது பலாலி மற்றும் திருச்சிக்கு இடையில் விமான சேவையும் இருந்தது.
இவ்வாறு ஏற்கனவே இருந்த சேவைகளை மீண்டும் இப்போது ஆரம்பித்துவிட்டு ஏதோ பிரதமர் மோடி ஈழத் தமிழர் மீது இரக்கம் கொண்டு புதிதாக ஆரம்பித்திருப்பதாக கதை விடுகின்றனர்.
தாய் பாதுசாம்மாள் 3வது நினைவு தினம்
•தாய் பாதுசாம்மாள் 3வது நினைவு தினம்
1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார்.
தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட.
மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்?
ஆம். அந்த கொடும் துயரை 33 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே.
தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய்.
தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை.
மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை.
நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை.
அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருப்பார்?
இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். முடியவில்லை.
ஆனாலும் அவர் மகன் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது அவரிடம் சேர்ப்பிக்க முடிந்ததையிட்டு ஆறுதல் அடைகிறேன்.
அந்த தாயாரின் 3வது நினைவு தினம் இன்று ஆகும். அவருக்கு என் அஞ்சலிகள்.
Sunday, October 29, 2023
1998ம் ஆண்டு நான் மேலூர் சிறப்புமுகாமில்
1998ம் ஆண்டு நான் மேலூர் சிறப்புமுகாமில் இருந்து விடுதலையான போது என்னை பொலிஸ் காவலுடன் சென்னை விமான நிலையம் அழைத்துச் சென்றனர்.
பொதுவாக சிறப்புமுகாமில் இருந்து இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களை சென்னை விமான நிலையத்தின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு விமானம் புறம்படும் நேரம் விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்வார்கள்.
ஆனால் என்னை வழக்கத்திற்கு மாறாக மேல்மருத்துவத்தூர் பொலிஸ் நிலையத்தில் தங்க வைத்தார்கள்.
புதிதாக கட்டப்பட்ட கட்டிடம். நன்றாக இருந்தது. பங்காரு அடிகளார் கட்டிக் கொடுத்தது என்றார்கள். அடுத்த வாரம் அமைச்சர் வந்து திறப்பு விழா செய்ய விருப்பதாக கூறினார்கள்.
கழிப்பறை குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருந்தது. பைப்பில் தண்ணீர் நன்றாக வந்தது. அறை எல்லாம் ரியூப் லைற் மின்விசிறி என ஏதோ ஓட்டல் போல் இருந்தது.
காலையில் என்னை அருகில் உள்ள பங்காரு அடிகளாரின் கோயிலுக்கு பொலிசார் அழைத்துச் சென்றனர்.
கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தனர். ஆண் பெண் எல்லோரும் செவ்வாடை உடுத்திருந்தனர்.
எல்லோரும் முதலில் பங்காரு அடிகளாரை வணங்கினார்கள். அப்புறம்தான் உள்ளே சென்று கடவுளை வணங்கினார்கள்.
கடவுள் இருக்கு என்று கூறுபவனைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் தான் கடவுள் என்று கூறும் மனிதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். சாதாரண சயிக்கிளில் சென்றவர். இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
மக்களின் அறியாமையை பயன்படுத்தியே அவர் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
பின்னர் அவர்கள் என்னை அப்படியே அங்கிருந்து விமானம் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விமானம் புறப்பட பல மணி நேரம் இருந்தும் விமான நிலையத்திற்குள் நேராக அழைத்துச் சென்று உள்ளே ஒரு அறையில் இருத்திவிட்டனர்.
என்னை யாரும் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே மேல்மருத்துவத்தூர் பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டேன் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன்.
தோழர் பொழிலன் உட்பட பல நண்பர்கள் என்னை வழியனுப்ப வந்து என்னை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
குறிப்பு – என்னை விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்லும்போது வாசலில் காத்திருந்த சில நண்பர்கள் எடுத்துக் கொண்ட படம் கீழே உள்ளது.
விமர்சனமற்ற சமூகம் ஒருபோதும்
விமர்சனமற்ற சமூகம் ஒருபோதும் தன்னை திருத்திக்கொள்ளவோ அல்லது முன்நோக்கி பயணிக்கவோ முடியாது.
எனவே வீழ்ந்து கிடக்கும் ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் அதற்கு மிகவும் அவசியமானது ஆக்கபூர்வமான விமர்சனமே.
இப்போது எம்முன் உள்ள கேள்வி ஆக்கபூர்வமான விமர்சனத்தை செய்வது எப்படி என்பது பற்றியே.
இதற்கு மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் அவர்கள் எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார்.
அவர் கூறுகிறார் 'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது.
ஏனெனில் நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்..
எமது உரையாடல்கள் பொறுப்புணர்வுடன் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.
மாறாக எம் மத்தியில் உருவாகிவரும் ஜக்கியத்தை குழப்புவதற்கு முயலும் நம் எதிரிகளுக்கு உதவிடக்கூடாது.
Subscribe to:
Posts (Atom)