Monday, May 25, 2020
•மறக்க முடியாத அட்டப்பாடி
•மறக்க முடியாத அட்டப்பாடி
தோழர் Gajan Gamblerஇன் உதவியால் அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தை பார்க்கும் வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது.
இப் படத்தை நான் பார்க்க விரும்பியதற்கு காரணம் நஞ்சம்மா என்ன ஆதிவாசிப் பெண் பாடிய பாடலும் அவரது அட்டப்பாடி கிராமமும் ஆகும்.
1986ல் அரியலுர் மருதையாற்று பாலத்திற்கு தோழர் தமிழரசன் வெடி குண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கியூ பிரிவு பொலிசார் என்னை தேடினார்கள்.
என்னை கைது செய்வதற்காக சென்னையில் நான் தங்கியிருந்த மடிப்பாக்கம் வீட்டுக்கு வந்த பொலிசார் நான் இல்லை என்றவுடன் அங்கிருந்த என் நண்பர்களை கைது செய்து விட்டனர்.
இதனால் எனக்கும் தங்குவதற்கு இடம் இல்லை. என்னால் என் நண்பர்களுக்கும் நெருக்கடிகள். இந் நிலையில் நண்பர் மோகன் எனக்கு உதவ முன்வந்தார்.
நண்பர் மோகன் எனது ஊரைச் சேர்ந்தவர். அப்போது அவர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி இருந்தார். இயக்கத்தில் இருந்தபோது அவர் அன்டன் பாலசிங்கத்திற்கு சாரதியாக இருந்துள்ளார்.
அவரது தந்தையார் சங்குண்ணி. அவர் கேரளாவில் இருந்து வந்து எனது கிராமமான நெல்லியடியில் ரீ கடை வைத்திருந்தார். தனது தந்தையின் உறவினர்கள் இருக்கும் கேரளாவுக்கு என்னை அவர் அழைத்துச் சென்றார்.
குருவாயூர் கோயிலுக்கு அருகில் அவரது உறவினர்களின் வீடு இருந்தது. இக் கோயில் கேரளாவில் பிரசித்தமானது என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.
இந்நிலையில் இரண்டு விடுதலைப் புலிகள் வந்து இருப்பதாக ஊருக்குள் கதை பரவிவிட்டது. இதனால் எங்களை பார்க்க மக்கள் பலர் வரத்தொடங்கிவிட்டனர்.
இதனால் பொலிசாருக்கு செய்தி போனால் பிரச்சனையாகிவிடுமே என நாம் அஞ்சியபோது மோகனின் சிறிய தகப்பனார் தனக்கு அட்டப்பாடியில் எஸ்டேட் ஒன்று இருப்பதாகவும் அங்கு போனால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று எங்களை கூட்டிச் சென்றார்.
இதுதான் நான் அட்டப்பாடிக்கு வந்த கதை. உண்மையில் அழகான அருமையான ஒரு இடம் இது. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்ற காட்சி.
அங்கு வாழும் மக்களின் மொழி எனக்கு புரியவில்லை. இதுபற்றி மோகனிடம் கேட்டபோது இவர்கள் ஆதிவாசிகள் என்றும் இவர்கள் தங்கள் மொழியை பேசுகிறார்கள் என்றார்.
அப்போது நான் நஞ்சம்மா பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவர் பாடிய பாடல்களை கேட்கும்போது அந்த அழகிய அட்டப்பாடி கிராமம் சேர்ந்து நினைவுக்கு வருகிறது.
குறிப்பு - நஞ்சம்மா பாடிய பாடல் கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன். நீங்களும் கேட்டு அந்த அழகிய அட்டப்பாடியை ஒருமுறை அனுபவியுங்கள்.
Image may contain: 1 person, text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment