Monday, June 29, 2020
•பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை
•பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை
என்றும் நினைவில் கொள்வோம்!
இன்று(11.06.2020) ஜயா பெரும்சித்திரனார் அவர்களின் 25வது நினைவு தினமாகும்.
1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் ஈழப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் ஜயா பெருஞ்சித்திரனார் அவர்கள்.
அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் ஈழத்தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை.
நான் ஜயா அவர்களுடன் அதிகம் பழகவில்லை. அவருடைய மகன் தோழர் பொழிலன் அவர்களுடனே அதிகம் பழகியிருக்கிறேன்.
பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் ஜயா அவர்களுடன் பேசியிருக்கிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன். அவ்வேளைகளில் ஈழப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார்.
அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர்.
ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்போது கண்டு கொண்டேன். ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார்.
தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார். அப்போது அவர் ஜயா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு விடுதலையில் ஜயா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
இன்றும்கூட சிலர் சட்டத்திற்கும் சிறைக்கும் பயந்து தமிழ்நாடு விடுதலை பற்றியோ அல்லது தோழர் தமிழரசன் பற்றியோ பேச தயங்கும் நிலையில் அன்று உறுதியாக ஆதரித்து குரல் கொடுத்தவர் ஜயா பெருஞ்சித்திரனார்.
அவரிடம் சென்று பழகாத ஈழப்போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர்.
அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள்.
முதல் பெண் போராளி ஊர்மிளாவுக்கு நெருக்கடியான நேரத்தில் ஜயா அவர்களே தனது வீட்டில் நீண்ட நாட்கள் வைத்து பாதுகாத்து அனுப்பினார்.
ஜயா அவர்கள் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை.
ஈழத் தமிழர்கள் ஜயா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள்.
Image may contain: 1 person, text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment