Monday, June 29, 2020
• நானும் தோசையும்!
• நானும் தோசையும்!
உனக்கு பிடித்த மூன்று உணவு கூறு என்று யாராவது என்னிடம் கேட்டால் தயங்காமல் உடனே
(1) தோசை
(2) தோசை
(3) தோசை என்று கூறுவேன். அந்தளவுக்கு எனக்கு தோசை பிடிக்கும்.
அதனால் சில நண்பர்கள் “ ஈஸ்ட்காம் தோசைக்கடை வாசலில் நின்றால் பாலன் தோழரை பிடிக்கலாம்” என கிண்டலாக கூறுவார்கள்.
படிக்கிற காலத்தில் பருத்தித்துறை வட்டப்பாறை கடலில் குளித்துவிட்டு அப்படியே வந்து சிவன் கோவிலடி தோசைக்கடையில் தோசை சாப்பிடுவது வழக்கம்.
அந்தக்கடையில் தோசை மட்டுமல்ல அதற்கு சிவப்பு வெள்ளை பச்சை கலர்களில் தரும் சம்பல்களும் ருசியாக இருக்கும்.
நான் 1981ல் முதன்முதலாக இந்தியா சென்றபோது திருச்சி பஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள அருணா லாட்ஜில் தங்கினேன்.
அதன்கீழ் தளத்தில் உணவகம் இருந்தது. எனவே காலை உணவுக்கு சென்றபோது சர்வரிடம் எனக்கு முதலில ஐந்து தோசை கொண்டு வாருங்கள். அப்புறம் அடுத்து இன்னொரு ஐந்து தோசை வேண்டும் என்றேன்.
அந்த சர்வர் இளைஞன் என்னை ஒருமாதிரி பார்த்தார். ஒரு பத்து பதினைந்து தோசைப் பெயர்களை கூறி அதில் எது வேண்டும் எனக் கேட்டார்.
எனக்கு புரியவில்லை. நான் மீண்டும் “முதலில் ஐந்து தோசை கொண்டு வாருங்கள்” என்றேன். உடனே அந்த சர்வர் “ சார் நீங்கள் மலையாளியா?” என்று கேட்டார்.
அதற்கு நான் “ இல்லை. நான் ஈழத் தமிழன். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறேன் “ என்றேன். அவருக்கு என் நிலைமை புரிந்து விட்டது.
முதலில் ஒருதோசை கொண்டு வந்து தருகிறேன். அப்புறம் அதை சாப்பிட்ட பிறகு தேவையானால் கூறுங்கள் தருகிறேன் என்றார்.
அதன்படி ஒரு தோசை கொண்டு வந்தார். மிகப் பெரிதாக இருந்து. சுருட்டி கொண்டு வந்து தந்தார். அதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியம் அவர் தோசைக்கு சம்பல் தரவில்லை.
வெள்ளையாக தண்ணியாக ஒன்றை தந்தார். அது உறைக்கவும் இல்லை. காரமாகவும் இல்லை. இது என்னவென்று கேட்டேன். சட்னி என்றார்.
அந்தமுறை சுமார் 15 நாட்கள் நான் தமிழ்நாட்டில் இருந்தேன். ஆனால் அந்த 15 நாட்களில் அதன்பின் ஒருமுறைகூட தோசை சாப்பிடவில்லை. அந்தளவுக்கு தோசை மீது வெறுப்பே வந்துவிட்டது.
அதன்பின்னர் பலமுறை தமிழகம் சென்றேன். ஒருவழியாக தமிழ்நாட்டு தோசை சாப்பிட பழகிவிட்டேன். ஆச்சரியம் என்னவெனில் இப்போது எனக்கு ஈழத்து தோசையைவிட தமிழக தோசையே நன்கு பிடிக்கும்.
குறிப்பு - சத்தியமாக இது அரசியல் பதிவு இல்லை. தொடர்ந்து சுமந்திரன் பற்றி எழுதியதால் சில சுமந்திரன் விசுவாசிகள் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். அவர்களை கூல் பண்ணுவதற்கான ஒரு ரிலாக்ஸ் பதிவு இது.
கீழே உள்ள எனது படம் எப்போது எங்கே எடுத்தது என்று எனக்கே நினைவு இல்லை. ஆனால் ஒரு முகநூல் நண்பர் இதை எனக்கு அனுப்பி ஆச்சரியப்பட வைத்துள்ளார். முகநூல் அற்புதம் இது.
Image may contain: Balan Chandran, suit
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment