Friday, May 31, 2013

ஒரு சிங்கள அரசியல்வாதிக்கு அஞ்சலி செலுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் லண்டனில் ஈஸ்ட்காமில் ஆனந்தபவன் சாப்பாட்டு கடையில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தவேளையில் எனது நண்பர் ஒருவர் ஜெலத் ஜெயவர்த்தனாவை எனக்கு அறிமகப்படுத்தினார். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் குட்டி யாழ்பாணம் என அழைக்கப்படும் இந்த ஈஸ்ட்காம் பகுதியில் சாதாரண சிங்கள மக்களே நடமாட அச்சப்படும் இந்த வேளையில் ஒரு சிங்கள அரசியல்வாதி அதுவும் முன்னாள் அமைச்சரும, பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய ஜெலத் ஜெயவர்த்தனா எவ்வித அச்சமின்றி நடமாடியது அவர் தமிழ் மக்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை எடுத்துக்காட்டியது.

என்னை நண்பர் அறிமுகப்படுத்தியபோது எனது கையைப் பிடித்து குலுக்கியதோடு தனது விசிட்டிங்கார்ட்டை தந்து இலங்கை வரும்போது மறக்காமல் தன்னை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் எளிமையானவர். தமிழ் மக்களுடன் நிறைய நட்புகளும் தொடர்புகளும் கொண்டிருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதற்காக யாழ் தகவல் தொழில் நுட்ப பூங்காவை மூடப்போகிறார் என பரவாலாக வதந்தி பரவியிருந்தது. இதனால் எனது பத்திரிகை நண்பர் ஒருவர் மூலம் அவ்வாறு செய்ய வேண்டாம் என அவரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட போது அமைச்சர் ஜெலத் ஜெயவர்த்தனா “ டக்ளஸ் எனக்கும் நல்ல நண்பர்தான். அதுமட்டுமல்ல இது தமிழ் மக்களுக்கு நன்மை தரும் ஒரு நல்ல விடயம். எனவே அதனை நான் குழப்ப மாட்டேன்” என உறுதியளித்தார். அதன்படி அவர் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்து கொண்டார்.

என்னதான் தனிப்பட்ட முறையில் ஜெலத் ஜெயவர்த்தனா நல்லவராக இருப்பினும் அவர் தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்டிருந்தாலும் அவர் அங்கம் வகித்த ஜ.தே. கட்சியானது ஒரு முதலாளித்துவ கட்சி என்பதுடன் தமிழ் மக்கள் மீது இன ஒடுக்குமுறையை மேற்கொண்ட கட்சி. அக் கட்சியின் ஆட்சிக்காலத்திலேதான் பல கலவரங்களும் கொலைகளும் நடத்தப்பட்டன. சிறைப் படுகொலை மற்றும் யாழ் நூலக எரிப்பு போன்றவை தமிழ் மக்களால் மறக்க முடியாதவை. இவரும் அக் கட்சியில் அமைச்சராக இருந்துள்ளபடியால் அதற்கு இவரும் பொறுப்பானவராகவே கருதப்படவேண்டும். இன்றும்கூட இவரது கட்சி தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்க தயாராக இல்லை என்பதே உண்மையாகும்.

ஜெலத் ஜெயவர்த்தனா நல்லவரா இல்லையா என்பதை விட அவரின் மறைவுக்கு பல தமிழ் தேசியவாளர்கள் என தம்மை கூறிக்கொள்வோர் ஆஞ்சலி செலுத்தி வருவது கவனிக்க தக்கது. தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் குறித்து நாம் பேசியபோது தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்ட ஒரு சிங்களவனைக் காட்ட முடியுமா என சவால் விட்ட இவ் தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஒரு சிங்கள அரசியல்வாதிக்கு அஞ்சலி செலுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment