Saturday, August 10, 2013

• இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இலங்கை தமிழ் அகதி எழுதும் மடல்

• இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
இலங்கை தமிழ் அகதி எழுதும் மடல்

அறிவிப்பு- லைக்கா மற்றும் ஜய்ங்கரன் முதலாளிகளின் எற்பாட்டில் எதிர்வரும் 24.08.2013 யன்று லண்டனில் இளையராசா கச்சேரி நடைபெற உள்ளது. டீக்கட் விலை- 20000ரூபா, 30000ரூபா, 50000 ரூபா.

அய்யா!

கடந்த வாரம்தான் கலைஞர் டிவியின் மானாட மயிலாட ஆட்டம் நடந்து முடிந்தது. அதற்குள் அடுத்த மாதம் உங்கள் கச்சேரி நடக்க இருக்கிறது என்று அறிவிப்பு வந்துள்ளது. இதனால் எமது நிலையை விளக்க வேறு வழியின்றி இந்த மடலை எழுதுகிறேன்.

நீங்கள் திரையிசைப் பாடல்களை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர். அதுமட்மல்ல எமது சநதோசம,; துக்கம் அனைத்திலும் இசையாக இருப்பவரும் நீங்களே. அதனால்தான் உங்களை இசைஞானி என்கிறோம். எனவே முதலில்; உங்களுக்கு இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் இலங்கை தமிழர்களின் துன்பங்களை அறிந்தவர் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் ஆதரவையும் வழங்கிவருபவர் . அதுகுறித்து நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம். மேலும் நீங்களும் வறிய நிலையில் இருந்து வந்தது மட்டுமல்ல அதை மறவாது இருப்பவர் என்றும் அறிந்துள்ளேன். ஆரம்பத்தில் நீங்கள் கம்யுனிஸ்ட் கட்சி கூட்டங்களில் பாடியிருப்பதாகவும் கூறியிருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு எமது கஸ்டத்தை விளக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன்.

உங்களுக்கு தேவையான இன்னும் சொல்லப்போனால் தேவைக்கு அதிகமான பணத்தை நீங்கள் நம்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அப்படியிருக்க அகதிகளின் பணத்தைப் பறித்துதான் வாழ வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என நம்புகிறேன். உங்களுடைய இசையை நாம் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே கடல் கடந்து வந்து கச்சேரி செய்கிறீர்கள் என நம்புகிறேன்.

லைக்கா மொபைல் மற்றும் அய்ங்கரன் போன்ற எம் இனத்து முதலாளிகள் தமிழ் இனம் எக் கேடு கெட்டாலும் பரவாயில்லை. தாங்கள் அட்டைகள் போல் உறிஞ்சி கொழுக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள். ஆனால் மிகுந்த கடவுள் நம்பிக்கையும் வறிய மக்கள் மற்றும் அகதிகள் மீது உண்மையாக அன்பு கொண்டவர் என்று அறியப்படும் நீங்கள் எப்படி அவர்கள் செய்யும் இந்த அநியாயத்திற்கு சம்மதித்தீர்கள்.

வன்னியில் எமது மக்கள் கஸ்டப்படும்போது, பட்டினியால் எமது குழந்தைகள் சாகும்போது இங்கிலாந்தில் நம்மவர்கள் ஆயிரக்கணக்கான ரூபா டிக்கட் எடுத்து கச்சேரி பார்த்தால் அதை சரித்திரம் எப்படி பதிவு செய்து கொள்ளும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா?

உங்களை கச்சேரி செய்ய வேண்டாம் என நான் கேட்கவில்லை. தாராளமாக செய்யுங்கள். ஆனால் இதில் சேரும் பணம் யாவும் தாயகத்தில் கஸ்டப்படும் மக்களுக்கு வழங்கப்படும் என கூறுங்கள். இப்படி அறிவிப்பு செய்தால் அகதிகள் மட்டுமல்ல அனைத்து மக்களும் மகிழ்வார்கள். அதுமட்டுமல்ல இனிவருபவர்களுக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் அமையும் அல்லவா?

உங்களுடைய கச்சேரியை குழப்புவது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஆனால் இங்கிலாந்தில் இசைஞானியின் கச்சேரியை இலங்கை தமிழ் அகதிகள் குழப்பினார்கள் என்ற அவச் சொல் உங்களுக்கு வந்தவிடக்கூடாது என்றே கவலைப் படுகிறேன். எனவே எமது உணர்வுகளை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லாம் மகிழ்வுறும் வண்ணம் அறிவித்தல் கொடுங்கள். உங்கள் இனிய செய்தியை எதிர்பார்த்து இருக்கும்

ஒரு அப்பாவி தமிழ் அகதி.

No comments:

Post a Comment