Saturday, November 30, 2013

அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணன்

• அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணன் பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்!

ராமதாஸ் அய்யா அவர்கள் தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதில் விழுப்புரம் தனித் தொகுதியில் பா.ம.க வேட்பாளராக அதன் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் அவர்களை அறிவித்துள்ளார். காட்டிக் கொடுத்த துரோகிக்கு வாய்ப்பா? அதுவும் தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் பா.ம. க வில்? நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது.

கொடைக்கானல் வெடி குண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தனது வானொலி அறிவிப்பாளர் வேலையை தக்க வைப்பதற்காக அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர் வடிவேல் ராவணன். இவரது சாட்சியம் மூலமே தமிழின போராளிகளான பொழிலன் , முகிலன், இளங்கோ, அறிவழகன் போன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அத்தகைய துரோகியை வேட்பாளராக அறிவித்ததன் மூலம் ராமதாஸ் அய்யா அவர்கள் மிகப் பெரும் தவறை புரிந்துள்ளார்.

மதுரை சிறையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது தனது கட்சியை சேர்ந்த பசுபதி பாண்டியனுக்காக போராட்டம் நடத்திய ராமதாஸ் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டார். அவர் மதுரை சிறையில் எனக்கு அருகில் வைக்கப்பட்டார். அப்போது அவரிடம் “வடிவேல் ராவணன் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். அவரை எப்படி உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அய்யா அவர்கள் “கைது செய்யப்பட்ட போது அவர் எங்கள் கட்சியில் இருக்கவில்லை. மேலும் தற்போது அவரிடம் இது பற்றி பேசியுள்ளோம். வழக்கு விசாரணை வரும்போது நிச்சயம் அவர் அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மாட்டார்” என உறுதியளித்தார்.

ராமதாஸ் அய்யா அவர்கள் உறுதியளித்ததால் வடிவேல் ராவணன் அப்ரூவராக சாட்சி சொல்ல மாட்டார் என நம்பினேன். அதுபோல் மறியல் போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறை வந்த வடிவேல் ராவணன் என்னை சிறையினுள்ளே சந்தித்து தான் தவறு செய்து விட்டதாகவும் ஆனால் விசாரணை வரும்போது நிச்சயம் அரசுக்கு சார்பாக சாட்சி சொல்லமாட்டேன் என உறுதியளித்தார்.

ஆனால் வழக்கு விசாரணை வந்தபோது அவர் எனக்கு உறுதியளித்தமைக்கு மாறாக , அய்யா ராமதாஸ் எனக்கு கூறியதற்கு மாறாக, அரசு தரப்பு ஆதரவாக சாட்சி கூறினார். அவரது சாட்சியம் மூலம் தமிழின உணர்வாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

அன்று தனது சுய நலனுக்காக தமிழின போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர் நாளை தனக்கு வோட்டு போடும் விழுப்புரம் மக்களைக் காட்டிக் கொடுக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே அய்யா ராமதாஸ் அவர்கள் உடனடியாக வேட்பாளரை மாற்ற வேண்டும். இல்லையேல் பா.ம.க விழுப்புரம் தொகுதியில் கட்டுக்காசு கூட சிடைக்காத அளவிற்கு மாபெரும் தோல்வி பெறும். பெற வேண்டும்.

தமிழின உணர்வாளர்களே ஒன்றாக குரல் கொடுங்கள்!
காட்டிக் கொடுத்த துரோகிகளை தூக்கியெறிவோம்!!
விழுப்புரம் மக்களவே விழிப்போடு தயாராகுங்கள்!!!

No comments:

Post a Comment