Wednesday, November 5, 2014

மலையக தமிழ் மக்களின் தொடரும் துயரம்

மலையக தமிழ் மக்களின் தொடரும் துயரம்

மலையகத்தில் பதுளை என்னும் இடத்தில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் மண்ணில் புதையுண்டுள்ளனர். சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய இயற்கை அழிவு என முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். வருடம்தோறும் இவ்வாறான அழிவுகள் மலையகத்தில் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கை அரசு அந்த மக்களுக்கு தேவையான அவசியமான அடிப்படை வசதிகளைக்கூட செய்யாமல் புறக்கணித்து வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  மலையத்தில் அமைக்கப்பட்ட அவர்களது தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொண்டு வரப்பட்டனர். சிங்கள மக்களின் நிலங்கள்  பலவந்தமாக பறிக்கப்பட்டு அதில் குடியேற்றப்பட்டார்கள். இந்த குடியேற்றம் சிங்கள மக்களுக்கும் மலையக தமிழ் மக்களுமிடையேயான முரண்பாட்டை தோற்றுவித்தது.

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட “லயன்” வீடுகளிலேயே அவர்கள் இன்றும் வாழ்கின்றனர். அவர்களுக்கு புதிய வீடுகளோ அல்லது சொந்தமாக நிலங்களோ வழங்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள்கூட பூர்த்தி செய்யப்படவில்லை.

இலங்கையில் அதிக எற்றுமதி வருமானத்தை ஈட்டித் தரும் மலையக தமிழ் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அந்த மக்கள் தமிழர்கள் என்பதாலும் பெரும்பாலானவர்கள் ஏழைக் கூலித் தொழிலாளர்கள் என்பதாலும் அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் ஜனத்தொகை தற்போது 2 கோடியை எட்டியுள்ளது. இதில் தமிழ்பேசும் மக்கள் சுமார் 40லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தமிழ் பேசும் மக்களில் 3 வகையினர் அடங்குன்றனர். பூர்வீக தமிழ் மக்கள் என்னும் வடக்க கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் 18 லட்சம் என்றும் தமிழ்பேசும் முஸ்லிம்மக்கள் 12 லட்சம் என்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் 10 லட்சம் எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பல தலைமைகள்  “தமிழீழம்” என்னும் தனிநாட்டு தீர்வை முன்வைத்தனர். ஆனால் இந்த தீர்வை மலையகத்தில் வாழும் பத்து லட்சம் தமிழர்கள் ஒருபோதும் அதரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஏனெனில் இதனால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இருப்பினும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட  இனக்கலவரங்களின் போது இந்த மலையக தமிழ் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

ஆசியாவில் மிகப்பெரிய தொழிற்சங்கமாக இந்த மக்களின் “இ.தொ.க” இருக்கிறது. ஆனால் இதன் தலைமையானது அதனை பாவித்து இந்த மக்களுக்கு தேவையான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அதனைக் காட்டி இலங்கை அரசிடமிருந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று வருகின்றனர். அமைச்சுப் பதவியை தொடர்ந்து பெற்றுவரும் தொண்டமான் குடும்பம் கோடிக் கணக்கான ஊழல் பணத்தை தனக்கு குவித்துள்ளது. ஆனால் தன்னை நம்பிய அந்த மக்களுக்கு உரிய சம்பள உயர்வைக் கூட பெற்றுக் கொடுக்காமல் துரோகம் செய்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் சென்னையில் விபச்சார ரெய்டு நடத்திய பொலிசார் ஓட்டலில் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானைக் கைது செய்தனர். பின்னர் தகவல் அறிந்த இலங்கை அரசு உடனே இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு கமுக்கமாக அமைச்சரை விடுவித்தது. இவ்வாறு தனது சொந்த பலவீனங்களால் அந்த மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக இந்த தலைவர்கள் இருக்கின்றனர்.

இலங்கை இனவாத அரசு 1950களில் மலையக தமிழ் மக்களின் பிராஜாவுரிமையைப் பறித்தபோது வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் பூர்வீக தமிழர்களின் தலைமைகள் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. மாறாக ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் வெளிப்படையாக இலங்கை அரசை ஆதரித்தனர். இந்த மலையக தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தலைமைகள் மட்டுமல்ல பெரும்பாலான தமிழ் மக்களும் இந்த மலையக வாழ் தமிழ் மக்களை  ஒரே தமிழ் இனமாக கருதவில்லை என்பதே உண்மை. அந்த மக்களை “தோட்டக்காட்டார்” என்றும் “வடக்கத்தையர்” என்றுமே அழைத்தனர். அதுமட்டுமல்ல “வலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்ப முடியாது” என்று  இழிமொழி பேசினார்கள்.

1982ல் சென்னைக்கு சென்ற அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் “எம்.ஜி.ஆரும் கலைஞர் கருணாநிதியும்; ஈழத்தமிழர் நலனுக்காக ஒன்றுபட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு உடனே எம்.ஜி.ஆர் “முதலில் மலையகத்தில் இருக்கும் தமிழர்களையும் தமிழ்இனமாக நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என பதில் அளித்தார். அந்தளவுக்கு ஈழத் தமிழர்கள் வரலாறு பற்றி தெரிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தொடர்ந்தும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தால் ஒருவேளை மலையக தமிழர்களுக்கு ஏதும் விடிவு ஏற்பட்டிருக்கும். ஆனால் அவரோ தான் முழுமையாக ஆதரித்து உதவி செய்த புலிகளிடம்கூட இதனை ஒருபோதும் வலியுறுத்தவில்லை.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த மலையக மக்களின் வரலாறு தெரியாவிடினும் கலைஞர் கருணாநிதிக்கு  நன்கு தெரியும். ஆனால் அவரோ தனது ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காக வடக்கில் கிழக்கில் இருக்கும் பூர்விக தமிழர்களையே ஈழத்தமிழர்களாவும் அவர்களின் கோரிக்கையான தமிழீழத்தையே அனைத்து தமிழர்களின் தீர்வாகவும் தொடர்ந்து கூறிவருகிறார்.

வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்களின் மிதவாத தலைமைகள் மட்டுமன்றி ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலை இயக்கங்களும் மலையக மக்களின் சம்மதம் இன்றி அவர்களுக்கான தீர்வாக தமிழீழத்தை முன்வைத்தனர். தமிழீழம் பெற்ற பின் அனைத்து மலையக தமிழ் மக்களும் தமிழீழத்தில் வந்து குடியேறலாம் என பொருத்தமற்ற, சாத்தியமற்ற  தீர்வுகளை அவர்கள் கூறினார்கள். இருந்தும்கூட பல மலையக தமிழ் இளைஞர்கள் இந்த விடுதலை இயக்கங்களில் பங்கெடுத்துப் போராடியிருக்கின்றனர். உயிர் துறந்து தியாகிகளாகியும் உள்ளனர்.

இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்களே புரட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என மாபெரும் ஆசான் மாக்ஸ் அவர்கள் வரையறுத்திருக்கிறார். அப்படியானால் இலங்கையில் அதற்கு முழு தகுதியானவர்கள் இந்த மலையக தமிழ் உழைக்கும் மக்களே. ஆனால் துரதிருஸ்டவசமாக தன்னை மாக்சிய இயக்கமாக கூறிக்கொள்ளும் ஜே.வி.பி கட்சியானது இரண்டு முறை ஆயுதப் போராட்டம் நடத்தியபோதும் இந்த மலையக மக்களை இணைத்துக் கொள்ளத் தவறியது. தவறியது மட்டுமல்ல அந்த மக்களுக்கு எதிராக இனவாத கோசங்களை முன்வைத்தது.

மலையக தமிழ்மக்கள் ஆரம்ப காலங்களில் பெரிதும் இடதுசாரி கட்சிகளையே ஆதரித்தனர். அதனாலேயே டி.எஸ்.சேனநாயக்க வின் முதலாளித்துவ அரசு அந்த மக்களின் வாக்குரிமையையும் பிராஜாவுரிமையையும் பறித்து பழிவாங்கியது. ஆனால் காலப்போக்கில் இந்த இடதுசாரிக் கட்சிகளும் இனவாத்தில் மூழ்கி தங்களை ஆதரித்த இந்த மக்களை கைவிட்டனர். இந்த மக்களுக்கு துரோகம் இழைத்தனர்.

தமிழ்ப் புரட்சிகர இயக்கங்களைப் பொறுத்தவரையில் அவை மலையக மக்களை அணி திரட்ட வேண்டும் என விரும்பியிருந்தாலும் அதில் போதிய அளவு வெற்றி பெற தவறிவிட்டனர். அதில் “தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை” இயக்கம் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர் நெப்போலியன் மலையகத்தில் “மலையக மக்கள விடுதலை முன்னனி” என்னும் ஒரு வெளிப்புற அமைப்பை  உருவாக்கி அதன் கீழ் பல மலையக தமிழ் இளைஞர்களை  ஒன்று திரட்டினார். இதனையறிந்த இலங்கை அரசு அவரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தியது. ஆனால் இந்திய உளவுப்படையான “றோ” வானது தனது கைக்கூலி இயக்கமான ஈரோஸ் அமைப்பு மூலம் தோழர் நெப்போலியனை இரகசியமாக படுகொலை செய்தது. இதனால் மலையகத்தில் பேரவையின் புரட்சிகரப் பணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

தோழர் சண்முகதாசன் தலைமையிலான செங்கொடி சங்கம் இந்த மலையக மக்கள் மத்தியில் தொழிற் சங்க பணிகளை மேற்கொண்டது. அது குறிப்பிட்ட பங்கை வகித்திருந்தபோதும் அவருடைய கட்சியில் எற்பட்ட பிளவுகள் மற்றும் அவருடைய மரணம்  ஆகியவற்றை தொடர்ந்து அதன்  பணி செயலற்று போய்விட்டது எனலாம். இருப்பினும் 1971 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அனைத்து செங்கொடி சங்க பொறுப்பாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இது மலையக தமிழ் மக்கள் ஒரு புரட்சிர அமைப்பில் இணைவதை இலங்கை அரசு எந்தளவுதூரம் அச்சப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக என்றுகூறி கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் உதவி தூதரங்களை இந்திய அரசு இயக்கி வருகிறது. அதுவும் மலையக தமிழ் மக்களுக்காக கண்டியில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. ஆனால் இந்திய அரசு அந்த மக்களுக்கு இதுவரை செய்த உதவி என்னவென்று ஆராய்ந்தால் மிகவும் ஏமாற்றமே பதிலாக இருக்கிறது.  சில வருடங்களுக்கு முன்னர் 50ஆயிரம் வீடுகள் ஈழத் தமிழர்களுக்கு கட்டிக் கொடுக்கப்போவதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அதில் ஒரு வீடு கூட இந்த மலையக தமிழ் மக்களுக்கு தரப்படவில்லை. இதுதான் இந்திய அரசின் இந்த மக்களுக்கான உதவி என்பது?

ஈழத் தமிழர்கள் தமது தொப்புள் கொடி உறவுகள் என்றும் அவர்களுக்கு உதவுவது தமது கடமை என்றும் பல தமிழக அரசியல் கட்சிகள் கூறுகின்றன. உண்மையில் இந்த தொப்புள்கொடி உறவுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் மலையக தமிழ் மக்களே. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இந்த மலையக மக்களுக்கு ஆதரவாக இதுவரை என்ன உதவி செய்திருக்கிறார்கள்?

வடக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல மலையக வாழ் தமிழர்கள் மத்தியிலும் சாதிப் பிரிவுகளும் தீண்டாமை கொடுமைகளும் உண்டு. ஆனால் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் “விடுதலை சிறுத்தைகள்” திருமாவளவன் அவர்கள் இந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக இதுவரை குரல் கொடுக்காதது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்காகப் போராடி தமிழீழம் பெற்றுக்கொடுக்கப்போவதாக கூறும் “நாம் தமிழர்” சீமான் அவர்களும் இந்த மலையக தமிழ் மக்களுக்கு தான் பெறப்போகும் தமிழீழத்தில் என்ன தீர்வு? எப்படி? வழங்கப்படும் என்பதை இதுவரை கூறியதில்லை.

இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு மிகப்பெரிய துயரமான நிலை எதுவெனில் யுத்தம் முடிந்து ஜந்து வருடமாகியும் இன்னமும் மலையகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுதலை செய்யப்படவில்லை. புலிகளின் தளபதியாக செயல்பட்ட கருணா அமைச்சராக வலம் வருகிறார். புலிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்த கே.பி என்பவர் அரச அரவணைப்பில் சொகுசாக இருக்கிறார். ஆனால் புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட அப்பாவி மலையக தமிழ் இளைஞர்கள் மட்டும் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் புலிகளுக்கு சாப்பாடு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயதான மலையக  பெண்மணி (வயது 80)ஒருவர் விடுதலை செய்யப்படாதது மட்டுமல்ல சிறையில் மருத்துவ வசதிகூட வழங்கப்டாமையினால்  சிறையிலேயே கடந்த வருடம் இறந்தார். இந்த கொடுமை குறித்து வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகள் மட்டுமல்ல தமிழக தலைமைகளும் கண்டனம் தெரிவிக்காதது இந்த மலையக தமிழ் மக்களின் அவல நிலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இனியாவது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் தலைமைகள் மட்டுமன்றி தமிழக அரசியல் கட்சிகளும் இந்த மலையக வாழ் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அந்த மக்கள் ஒரு நல்ல தீர்வைப் பெறுவதற்கு உறுதியான ஆதரவை வழங்க வேண்டும்.

இலங்கை இந்திய அரசுகளின் ஒடுக்கு முறைக்கு எதிராக, மலையக உழைக்கும் மக்களின் தலைமையில, மாசேதுங் சிந்தனை வழிகாட்டலில் ஏற்படும் புதிய ஜனநாயகப் புரட்சியே  அனைத்து மக்களுக்கும்  ஒரு சிறந்த தீர்வைப் பெற்று தரும். இலங்கையின் எதிர்கால வரலாற்றை இந்த மலையக உழைக்கும் மக்களின் பங்களிப்பே தீர்மானிக்கும் என்பது மிகையான கூற்று அல்ல.




1 comment:

  1. இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக இலங்கை தீவில் இலங்கை அரசால் வஞ்சிக்கப்பட்ட தமிழர்கள் யாரென்று பார்த்தால் மலையக தமிழர்களே. அவர்களின் அவலங்கள் இன்று வரை தீர்க்கப்படாதவை. அவர்களின் குருதியை உறிஞ்சி பயிர் செய்யும் தேயிலை பயிர்ச் செய்கை இலங்கையின் பிரதான ஏற்றுமதி வருவாயாக இருந்தும் அவர்கள் ஒரு பிடி சோற்றுக்கும் வக்கின்றி சாகும் கொடிய வறுமையில் தான் இன்றளவும் வாழ்கின்றார்கள்.

    ஒரு நேர உணவுக்காக ஒரு நாள் முழுவதும் உழைத்தாலும் வழியின்றி போகும் வறுமை நிலையில் அவர்கள் குடும்பத்தின் சிறுவர்கள் பலரும் பால்ய வயது தொழிலாளிகளாக இருப்பதை ஏறெடுத்து பார்ப்பார் எவரும் இல்லை.

    மலையகத்தில் இயற்கை அனர்த்தத்தில் மக்கள் பெருமளவில் உயிர் இழப்பு சேதங்களுக்கு ஆளாவது புதிய செய்தி அல்ல. ஆனாலும் அவர்கள் அவலங்களை போக்க இலங்கை அரசு என்றுமே முயன்றதில்லை.

    சந்ததிகள் கடந்தும் லயன்களே கதி என்று வாழும் கொடிய வாழ்வில் மலையக மக்கள். குறுகிய லயங்களுக்குள் தனி மனிதன் வாழ்வதற்கே போதாது. இந்நிலையில் ஒரு குடும்பம் மட்டுமில்லாமல் கூட்டுக் குடும்பமாக வாழும் நிலை கூட பல குடும்பங்களுக்கு உண்டு. கால் நீட்டி படுக்க இடம் இருப்பதில்லை.

    மலையகத் தமிழரை சுரண்டிக் கொழுக்கும் இலங்கை அரசிடம் இருந்து அம்மக்களை காக்க இதுவரையில் எந்த தலைவற்கும் முனையவில்லை என்பது கொடிய வேதனை.

    இன்று வடக்கு கிழக்கினை தாயகமாக கொண்ட தமிழீழ மக்கள் மட்டுமன்றி தமிழக மக்களும் இன்னமும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் சக தமிழர்களான மலையக மக்களின் அவல வாழ்விலிருந்து விடுபட வழி சமைத்து கொடுக்கும் பெரும் பொறுப்பு உண்டு. இது வரை எவராலும் காக்க படாத மலையக மக்களை அனர்த்த காலம் கடந்தும் அவலங்களில் இருந்து விடுபட துணை நிற்போமாக.

    குறிப்பாக அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம். அவர்களுக்கு நிகழும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம். சலுகைகள் பெற்றுக் கொடுக்க போராடுவோம். விடுதலை வென்று சம உரிமை பெற்று நீதியாக நடத்தப்பட குரல் கொடுப்போம்.

    தாம் அடிமைப்பட்டு இருக்கின்றோம் என அறியாமல் அடிமை வாழ்வுக்கு பழக்கப்பட்ட அடிப்படை உரிமை கூட இல்லாது விலங்குகள் போல் நடத்தப்பட்டு சுரண்டப்பட்டு அடிமைப்படுத்தப்படும் மக்களிற்கான விழிப்புணர்வை அவர்கள் பெற உதவுவோம்.

    சக தமிழன் கண்ணீர் வாழ்வில் எமது இதயங்களும் துடிக்காவிட்டால் எமது இன உணர்வில் எங்கோ பெரும் தவறு உண்டு என பொருள். எனவே மலையக தமிழர்களுக்கு சிக்கல் இல்லை என உதாசீனம் செய்வோரும் அவர்களுக்காக உதவ முன் வராத தமிழர்களும் தமது இன உணர்வை மார்தட்டி அரசியல் நடத்துவதில் நேர்மை இல்லை என பொருள்.

    தீர்க்கப் படாத தமிழர் சிக்கல்களில் எம் மலையக தமிழர்களும் முதன்மையானது என்பதை மனதில் நிறுத்துவோம். போராடுவோம். உரிமையை பெறுவோம். மறுத்தால் விடுதலையை வென்றெடுப்போம்.

    ReplyDelete