மனித உரிமை செயற்பாட்டாளர் ரிக்கி பெர்ணான்டோ வுடனான சந்திப்பு
கடந்த சனிக்கிழமை (22.11.2014) லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் இலங்கை மனிதவுரிமை செயற்பாட்டாளர் ரிக்கி பெர்ணான்டோவுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
ஜனநாயக மனித அரங்கு சார்பில் சார்ல்ஸ் அவர்கள் தலைமையில் இவ்வுரையாடல் இடம்பெற்றது.
ரிக்கி பெர்ணான்டோ உரையாற்றும் வேளையில் பார்வையாளரில் ஒருவர் போட்டோ பிடிக்க முற்பட்டபோது “தயவு செய்து முகநூல் போன்ற தளங்களில் போட்டுவிடாதீர்கள். அப்புறம் இலங்கை திரும்பிச் செல்லும்போது பிரச்னையாயிடும்” என்றார்.
ரிக்கி பெர்ணான்டோ ஒரு பிரபல மனிதவுரிமை செயற்பாட்டாளர். அவர் சிங்கள பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர். இருந்தாலும் அவரே அச்சப்படுகின்ற நிலை இருக்கின்றதாயின் இலங்கையின் ஜனநாயகத்தை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
கடந்த வாரம் சுவிற்சலாந்தில் நடைபெற்ற சோசலிச முன்னனியின் கூட்டத்தில் குமார் குணரட்னம் பேசும்போதும் போட்டோ எடுக்க தான் முற்பட்டவேளை தடுக்கப்பட்டதாக அஜீவன் வீரகத்தி முகநூலில் தெரிவித்திருந்தார்.
சோசலிச முன்னனி சிங்கள இளைஞர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைப்பு. ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து வந்த அமைப்பு. அந்த அமைப்பே அச்சப்படுகிறது எனில் தமிழ் அமைப்புகளின் நிலை என்ன வென்று கூறவேண்டியதில்லை.
சிங்கள இனத்தை சேர்ந்த பிரபலமானவர்களே பாதுகாப்பு குறித்து அச்சப்படுவது இலங்கையின் இன்றைய நிலைமையை நன்கு உணர்த்துகிறது. சிங்களவர்களுக்கே இந்த நிலையென்றால் சாதாரண தமிழ் மக்களின் கதி என்ன?
இந்த நிலை மாறவேண்டும். இதற்கு காரணமான மகிந்த கும்பல் தூக்கியெறியப்பட வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
No comments:
Post a Comment