இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தமிழகத்தில் இருக்கும் மகஇக புரட்சிகர அமைப்பை சேர்ந்த தோழர் செங்கொடி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இலங்கைப் பிரச்சனை அல்லது தமீழீழப் பிரச்சனை அல்லது விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பதை அதற்காக போராடும் அமைப்புகளும், மக்களும் – இலங்கையில் இருக்கும் அமைப்புகளானாலும் தமிழகத்தில் இருக்கும் அமைப்புகளானாலும் – எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முதன்மையான விசயம்.
இராஜீவ் காந்திக்கு முன் இராஜீவ் காந்திக்குப் பின் என்று பிரித்துப் பார்ப்பவர்கள் உண்டு. அவர்களைப் பொருத்தவரையில் இராஜீவ் கொலை நடந்திராவிட்டால் .. .. .. என்றொரு கற்பனாவாதமே அனைத்திற்குமான மையப் புள்ளி.
இலங்கையில் சீனா ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்தியா இலங்கையில் இன்னும் தீவிரமாக பங்கெடுப்பதே சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளும் கூட தமிழீழம் அமைவது இந்திய உதவி இன்றி சாத்தியம் இல்லை எனும் கருத்து கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
சர்வதேச வல்லரசு நாடுகளின் நேர்மையான தலையீடு இருந்தால் இன்றைய இலங்கப் பிரச்சனை சுமூகமாக தீர்ந்து விடும் என்பவர்களும் இருக்கிறார்கள்.
இஸ்ரேலின் வழியில் தமிழீழத்தை சமைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறவர்கள் கூட இருக்கிறார்கள்.
தமிழ் தேசியவாதிகள் ஈறாக பலருக்கும் பலவாறான கருத்துகள் நிலைப்பாடுகள் இதில் நிலவிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான எவரும் புறநிலை யதார்த்தமாக இருக்கக்கூடிய இன்றைய நிலையிலிருந்து, இன்றைய தோல்வியிலிருந்து தங்களின் நிலைப்பாட்டை பரிசீலிக்கவே இல்லை. மாறாக, தங்கள் அகநிலை வாதங்களுக்கு ஏற்ப விளக்கமளிப்பதற்காக மட்டுமே யதார்த்தத்தை சலித்தெடுக்கிறார்கள்.
ஒரு பல்தேசிய நாட்டில், ஒற்றைத் தேசியம் தனியாக பிரிந்து தனிநாடாக அமைவது என்பது முழுக்க முழுக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்டது. உலக வரலாற்றை புரட்டிப் பார்த்து பரிசீலிக்கும் யாருக்கும் இதில் எவ்வித ஐயங்களுக்கும் இடமில்லை.
தொடக்கத்தில் இலங்கை தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா உதவியதற்கும், தற்போது விடுதலைப் புலிகளையும், அதன் பேரில் தமிழ் மக்களையும் அழித்தொழித்து நிற்பதற்கும் ஒரே காரணம் இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் என்பதை தவிர்த்து வேறொன்றுமில்லை.
பொதுவாக, அரசியல் நிகழ்வுகளுக்கான சரியான, பொருத்தமான எதிர்வினை என்பது வெகு மக்களிடம் இருப்பதில்லை. காரணம், செய்தி ஊடகங்கள் – அச்சு ஊடகமானாலும், காட்சி ஊடகமானாலும் – சரியான கண்ணோட்டத்தை மக்களிடம் அளிப்பதில்லை.
அரசின் ஊதுகுழலாக இருந்து பக்கச் சார்பான செய்திகளை மட்டுமே நடுநிலமை எனும் பெயரில் வழங்கி வருகின்றன.
நடப்பு விசங்களை, சமூக நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு மக்கள் இந்த செய்தி ஊடகங்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.
அதனால் தான் சமூக அரசியல் நிகழ்வுகளுக்கு பொருத்தமான எதிர்வினை பெரும்பாலான சமயங்களில் மக்களிடம் வெளிப்படுவதில்லை.
ஆனால், சரியான கண்ணோட்டத்துடன் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை மக்களை நேசிப்பவர்களுக்கு இருக்கிறது.
அந்த அடிப்படையில், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை எடுத்து வைக்கிறது இந்த சிறுநூல்.
ஏகாதிபத்திய வலைப் பின்னாலில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? எதிரிகளாக முன்னிற்பவர் யாவர்? பிபுலத்தில் இருப்பவர்கள் யாவர்? என்பவைகளை அறிந்து அதை கண்முன்னே நடக்கும் யாதார்த்த நிகழ்வுகளில் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்வதே நம்மை சரியான திசையில் இருத்தி வைக்கும் வழியாகும்.
இலங்கை இந்தியாவானாலும், சீனா அமெரிக்காவானாலும், ஐ.நா வே ஆனாலும் கூட இந்த அடிப்படையில் பரிசீலித்துப் பார்த்தால் மட்டுமே சரியானதில் நிலைக்க முடியும்.
இலங்கை பிரச்சனையில் அந்த வழியைக் கைக்கொள்ள இந்த சிறு நூல் உதவும். படித்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment