•இந்திய தூதரகமும் பத்திரிகை சுதந்திரமும்.
ஊடகவியலாளர் தினத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டை சுமத்தியவர் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகை நிறுவனருமான சரவணபவன் ஆகும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அது கருத்துச் சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் மதிக்கும் நாடு என்று கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் இந்திய அரசானது உள்நாட்டில் மட்டுமல்ல இலங்கையிலும் அது பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பதில்லை.
1999ம் ஆண்டு கொழும்பில் உள்ள ஒரு பிரபல தமிழ் பத்திரிகை அலுவலகத்திற்கு நான் போயிருந்தேன். அதன் அசிரியர் எனது நண்பர். அவரிடம் இந்திய சிறப்புமுகாம் கொடுமை குறித்த கட்டுரை ஒன்றை பிரசுரிக்குமாறு கேட்டேன்.
அதற்கு அவர் “ இந்தியாவுக்கு எதிராக ஏதாவது பிரசுரம் செய்தால் உடனே தூதரகத்தில் இருந்து தொடர்பு கொண்டு பல கரைச்சல் கொடுப்பார்கள் “ என்று கூறினார்.
இதைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம். ஆனால் பின்பு இது உண்மைதான் என்பதற்கு பல செய்திகள் விபரங்கள் அறிந்திருந்தேன்.
இந்திய தூதரகத்திற்கு ஒத்துழைக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு பணம், விசா மற்றும் பல சலுகைகள் மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்ததையும் நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் அமைந்த பின்பு அதன் தூதர் நடராஜன் ஒரு ஆங்கிலேய காலத்து வைஸ்ராய்கள் போலவே செயற்பட்டு வருகிறார்.
தன் கையைக் கொண்டே கண்ணைக் குத்துவது போல இந்திய அரசானது ஒரு தமிழனை தூதராக வைத்தே யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மீது இந்திய ஆக்கிரமிப்பை நடத்துகிறது.
இத்தனை காலமும் பெரும்பாலும் இடதுசாரிகளே இந்த இந்திய தூதரின் அத்துமீறிய செயல்களை அம்பலப்படுத்தி கண்டித்து வந்தார்கள்.
இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இந்திய துணை தூதர் நடராஜனின் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயலை வெளிப்படையாக கண்டித்துள்ளார்.
இன்னொரு நாட்டு தூதரகம் அதுவும் ஒரு அதிகாரி பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது சாதாரண விடயம் அன்று. மிகவும் பாராதூரமான விடயம் ஆகும்.
யாழ் மருத்துவமனையில் இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து கட்டுரை எழுதக்கூடாது என்று இந்திய துணைதூதர் மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி உதயன் பத்திரிகையில் கட்டுரை எழுதியதற்காக ஒருவரின் கலாநிதிப் படிப்பை பூர்த்தி செய்வதற்கு விசா வழங்க மறுத்து அவரது வாழ்க்கையே பாழாக்கியுள்ளார்.
இறந்த எம் மக்களை நினைவு கூர எமக்கு அருகதை இல்லையா?
இந்திய ராணுவத்தின் படுகொலைகளை நாம் நினைவு கூரக் கூடாதா?
எமது சுதந்திரத்தில் எப்படி இந்திய துணை தூதர் தலையிட முடியும்?
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அக்கிரமங்களை சகித்துக் கொண்டிருப்பது?
பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மீது பல குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்திய துணைதூதர் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய கருத்தாகும்.
No comments:
Post a Comment