Wednesday, July 31, 2024

தோழர் சண் அவர்களின்

தோழர் சண் அவர்களின் 104வது பிறந்ததினம்! இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 104 வது பிறந்த தினம் ஆகும் (03.07.1920 – 03.07.2024) தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர் அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர். மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே. அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை பகிரங்கமாக ஆதரித்தார். ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை ஜே.ஆர் ஜெயவர்தனா “பயங்கரவாதிகள்” என்றார். அமிர்தலிங்கம் “பொடியன்கள்”என்றார். ஆனால் சண்முகதாசன் மட்டுமே முதன் முதலாக அவர்களை “போராளிகள்”என்று அழைத்தார். அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், என்எம் பெரோரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் இவ்வாறு கூறினார். அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவர் மீது மதிப்பு கொண்டதுடன் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் பெற்று வந்தார்கள். இறுதியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அவரது மகள் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருந்தார். இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது. அவருடன் அவருடைய இறுதிக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை எனக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை தந்தது. அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தமிழ் நூல் பதிப்பை நானே முதலில் வெளியிட்டிருந்தேன். அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று அவர் விரும்பிய புரட்சியை மேற்கொள்வதே ஆகும். குறிப்பு- தோழர் சண் பற்றி அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். https://www.youtube.com/watch?v=hJSV6g_qf4k&t=2s

No comments:

Post a Comment