Wednesday, July 31, 2024
அமிர்தலிங்கம் மரணம்
•அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா?
(இன்று அமிர்தலிங்கத்தின் 35வது நினைவு தினம். )
சில வருடங்களுக்கு முன்னர் பி.பி.சி க்கு பேட்டி கொடுத்த சம்பந்தர் ஐயா “அமிர் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” எனக் கூறியிருந்தார்.
(1) தமிழ் மக்களுக்கு இன உணர்வை ஊட்டியதில் அமிர்தலிங்கம் பங்கு மறுக்க முடியாதது. ஆனால் அதை அவர் தமிழ் மக்களின் நலன்களுக்காக செய்யவில்லை. மாறாக தனது பதவி நலன்களுக்காகவே செய்தார்.
(2) சுயாட்சிக் கழக நவரட்ணம் தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தபோது அது தற்கொலைக்கு ஒப்பான தீர்வு என அமிர்தலிங்கம் சாடினார். ஆனால் அதே அமிர்தலிங்கம் தான் தேர்தலில் தோற்றதும் தனது பதவி நலனுக்காக அதே தமிழீழ தீர்வை முன்வைத்தார்.
(3) ”அடைந்தால் தமிழீழம் இல்லையேல் சுடுகாடு” என இளைஞர்களை உசுப்பேற்றிவிட்ட அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தபோது அதனை ஏற்றார். ஜே.ஆர் “மாவட்ட சபை” வழங்க முன்வந்தபோது அதனை ஏற்றார். இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட மாகாண சபையை ஏற்றார்.
(4) வடபகுதியில் சாதிப் போராட்டம் நடைபெற்றபோது அமிர்தலிங்கம் உயர்சாதியினர் பக்கமே நின்றார். பாராளுமன்றத்தில் “சங்கானை இன்னொரு சங்காயாக (சீனா) மாறுகின்றது” என தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எதிராக பேசினார்.
(5) தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராக (மலையக) தொண்டமான் இருந்தார். ஆனால் அமிர்தலிங்கம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தபோது அதனால் தமது மக்களுக்கு பயன் இல்லை எனக் கூறி தொண்டமான் விலகி சென்றார்.
(6) ராஜதுரைக்கு தலைமைப் பதவியை வழங்கியிருந்தால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அமிர்தலிங்கம் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜதுரைக்கு எதிராக தமிழரசுக்கட்சி சார்பில் காசி ஆனந்தனை போட்டியிட செய்தார். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை குழப்பினார்.
(7) இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொலை மற்றும் பாலியல் வல்லுறவு செய்தபோது அதனைக் கண்டித்த அமிர்தலிங்கம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்தபோது அதனைக் கண்டிக்க மறுத்தார்.
(😎 இலங்கை அரசு தரப்படுத்தலை அமுல்படுத்தியபோது அதற்கு எதிராக தமிழ் மாணவர்களை போராடும்படி தூண்டிய அமிர்தலிங்கம் தனது மகனுக்கு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு பெற்றார்.
(9) இந்திரா காந்தி போராளிகளுக்கு பயிற்சி வழங்க முனைந்தபோது அதனை தடுக்க அமிர்தலிங்கம் முனைந்தார். ஆனால் மதுரை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது மகன் ஆயுத இயக்கம் கட்டிய போது அதனை அவர் தடுக்கவில்லை.
(10) பல தமிழ் இளைஞர்களை அன்றைய ஜே.ஆர் அரசு கைது செய்தபோது அவர்களை விடுவிக்க அமிர்தலிங்கம் முனையவில்லை. ஆனால் தனது மகனின் கடிதத்தை கொண்டு சென்ற தனது உறவினர் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும் உடனே ஜே. ஆர் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுவித்தார். அந்த உறவினர் எந்த வழக்கும் இன்றி உடனே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.
(11) யாழப்பாணத்தில் தேர்தலில் தோல்வியுற்ற அமிர்தலிங்கம் அம்பாறையில் இருந்து தெரிவு செய்யப்பட விரும்பினார். ஆனால் அங்கும் அவர் தோல்வியுற்றார். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் கொல்லப்பட்டார்.
அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால்,
• தமிழீழம் கிடைத்திருக்காது. ஏனெனில் அவர் தமிழீழ கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டார்.
• முள்ளிவாய்க்கால் அவலத்தையும் அவர் தடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் உயிரோடு இருந்த காலத்திலே இந்திய ராணுவ அழிப்பை தடுக்காதவர் மட்டுமல்ல அதை கண்டிக்க கூட முன்வராதவர்.
• தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்திருக்காது. சம்பந்தர் ஐயாவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருக்காது.
எனவே அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.!
குறிப்பு- புலிகளுக்கு பின்னால் பைல் கட்டை தூக்கி திரிந்த காலத்தில் அமிர் இறப்பு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சம்பந்தர் ஐயா கூறவில்லை. இப்போது அந்த சம்பந்தர் ஐயா இறந்த பின்பு சம்பந்தர் ஐயா மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சுமந்திரன் கூறுகின்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment