Tuesday, November 18, 2014

சாதி, இனம், வர்க்கம் இவை பற்றி சோசலிஸ்ட்டுகள் சொல்வது என்ன?

 சாதி, இனம், வர்க்கம் இவை பற்றி
சோசலிஸ்ட்டுகள் சொல்வது என்ன?
இன்று (08.11.2014) மாலை 3.00 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள ல் “சாதி இனம் வர்க்கம் இவை பற்றி சோசலிஸ்டுகள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
சோசலிசம் 2014 நிகழ்வின் ஒரு பகுதியாக இக்கூட்டத்தை தமிழ் சொலிடாறிற்றி ஒழுங்கமைத்திருந்தது. மார்வின் கே தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சேனன் மற்றும் மீனா கந்தசாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.
மீனா கந்தசாமி தனது உரையில் வர்க்கப் பார்வையில் இந்தியாவின் சாதீயம் குறித்து விளக்கினார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட குறுகிய நேரத்தில் தன்னால் இயன்றளவு தகவல்களை சபையில் தெரிவித்தார். அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கூடுதலாக அளித்திருந்தால் அவர் மூலம் இந்தியா குறித்த இன்னும் நிறைய தகவல்களை சபையோர் பெற்றிருக்கமுடியும்.
சேனன் தனது உரையில் இலங்கையில் சாதீயம் குறித்தும் அது இந்தியாவில் இருந்து எப்படி மாறுபட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமல்ல இங்கிலாந்திலும்கூட அரசு உயர்சாதியினருக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது என்பதையும் விளக்கினார்.
அமெரிக்க இந்தியவம்சாவழி கவுன்சிலர் கஸ்மா சவான்ற் அவர்களும் சமுகம் அளித்து தனது கருத்தகளை பதிவு செய்தார். அவர் அமெரிக்காவில் சாதீயம் குறித்து தனது அனுபவங்களை வெளிப்படுத்தினார்.
இறுதியாக சபையோரின் வினாக்களுக்கு சேனனும் மீனா கந்தசாமியும் பதில் அளித்தார்கள். தொடர்ந்தும் இதுபோன்ற உரையாடல்கள் நடக்கும் என்றும் சாதீயத்திற்கு எதிராக சோசலிஸ்டுகள் முன்னெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றும் சேனன் கேட்டுக்கொண்டார்.
இரண்டு மணி நேரத்தில் சாதீயம் குறித்து முழுமையாக உரையாட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் ஆசியர்களை கடந்து ஜரோப்பியர்களுக்கும் இந்த சாதீய உரையாடலை கொண்டு சென்றதன் மூலம் இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.
நிகழ்வு ஒருங்கமைப்பாளர்களுக்கு எமது பாராட்டுகள்.

ரஜனி அரசியலுக்கு வரவேண்டும் அவர் படுதோல்வி பெற வேண்டும்.

• ரஜனி பா.ஜ.க விற்கு வரவேண்டும் -பொன் ராதாகிருஸ்ணன்
• ரஜனி எங்களை ஆதரிக்க வேண்டும் - வாசன் கோஸ்டி
• ரஜனி எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்- இளங்கோவன் கோஸ்டி
இவர்கள் யாருமே தங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கோரவில்லையே?
அப்படியாயின் இவர்கள் மக்களுக்காக கட்சி நடத்தவில்லையா?
“தான் ஒருமுறை சொன்னா நூறுமுறை சொன்னமாதிரி” என்றார் ரஜனி.
திமுக வுக்கு ஓட்டுபோடுங்கள் என்று ரஜனி ஒருமுறை கூறியதை
நூறு தடவை சன் டிவி ஒளிபரப்பியும் தி.மு.க வெல்லவில்லையே?
அப்ப எதற்காக எல்லோரும் ரஜனியிடம் ஓடுகிறார்கள்?
பாஜக வினர்
கேட்டுப்பார்த்தார்கள்.
கெஞ்சிப் பார்த்தார்கள்.
தற்போது சிறந்த நடிகர் விருது கொடுத்து
வளைக்க நினைக்கிறார்கள்.
அப்போதாவது ரஜனி பாஜ.க வுக்கு ஆதரவு கொடுப்பாரா?
ரஜனி!
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.
எல்லா பணத்தையும் தமிழ்நாட்டுக்கு வெளியே முதலிட்டார்.
ஈழத் தமிழர் அழிக்கப்பட்டபோது மௌனம் காத்தார்.
தமிழ்நாட்டு தமிழனுக்காகவும்கூட குரல் கொடுப்பதில்லை.
அவரை எதற்கு எல்லா கட்சிகளும் கெஞ்சவேண்டும்?
“கூத்தாடிகளை கொண்டாடாதீர்கள். பெரியாரை கொண்டாடுங்கள்.
அப்பதான் தமிழகம் உருப்படும்” என நடிவேள் எம்ஆர்.ராதா கூறினார்.
அது ரஜனிக்கும் பொருந்தும்.
எமது விருப்பம் என்னவெனில்
ரஜனி அரசியலுக்கு வரவேண்டும்
அவர் படுதோல்வி பெற வேண்டும்.
அப்பதான் இந்த அரசியல்வாதிகளுக்கு புத்தி வரும்!

எல்லாம் வல்ல “அல்லா”தான் இதற்கும் காரணமா?

• எல்லாம் வல்ல “அல்லா”தான் இதற்கும் காரணமா?
முஸ்லிம் மதத்தை கட்டிக்காப்பதாக கூறும் சவூதி மன்னர் தன் மகளுக்கு தங்கத்தில் கக்கூஸ் (கழிப்பறை) கட்டிக் கொடுத்துள்ளார்.
உலகில் மட்டுமல்ல சவூதி நாட்டில்கூட பல முஸ்லிம்கள் வறிய நிலையில் இருக்கும்போது சவூதி மன்னர் இப்படி ஊதாரித்தனமாக செலவு செய்வது நியாயமா?
அல்லாவின் பெயரால் சவூதி மன்னரின் சர்வாதிகார அட்சியை இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதித்துக் கொண்டிருப்பது?
ஈரானில் தன்னை கற்பழித்த ஒரு உளவுத்துறை அதிகாரியை பெண் ஒருவர் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனைக்குள்ளானார்.
இந்த பெண் அபாசமாக உடை உடுத்தவில்லை. மத விதிகளின்படி உடம்பு பூராவும் மறைத்த உடை அணிந்துள்ளார். இருப்பினும் ஒரு ஆண் மிருகம் அவரை கற்பழித்துள்ளது. அவர் தன்னைக் காப்பாற்று முகமாக அந்த மிருகத்தை கொன்றுள்ளார்.
ஆனால் ஈரானிய அரசு அல்லாவின் பெயரால் அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இது என்ன நியாயம்?
• எல்லாம் வல்ல “அல்லா” என்பவர்தான் அவற்றுக்கு காரணமா?
• இன்னும் எத்தனை நாளைக்கு இதனை சமூகத்தில் அனுமதிப்பது?
• எத்தனை கொடுமையான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
ஈழ அகதிகளை மட்டும் அடைத்து வைப்பது ஏன்?
சிறப்பு அகதி முகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கடந்த 15.11.14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களை விடுதலை செய்ய மட்டுமல்ல அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கக்கூட தமிழக அரசு மறுத்து வருகிறது.
இந்த அகதிகள் செய்த குற்றம் என்ன?
• இவர்கள் மக்களின் 66கோடி பணத்தை சுருட்டியவர்களா?
• இவர்கள் நீதிமன்றத்தால் 4 வருடம் தண்டனை விதிக்கப்பட்டவர்களா?
• இவர்கள் தாய் தமிழகத்தை நம்பி வந்தது குற்றமா?
தமிழக அரசே!
கடந்த காலங்களில் செய்தது போன்று அதிகாரிகள் மூலம் வாக்குறுதி அளித்து ஏமாற்றாமல் இம்முறையாவது அவர்களை உடனே விடுதலை செய்!
சிறப்புமுகாம் என்னும் பெயரில் உள்ள சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமை உடனே மூடு!
எவ்வித நீதி விசாரணையும் இன்றி சந்தேகத்தின் பெயரில் பல வருடங்களாக அகதிகளை அடைத்து வைக்கும் கொடுமையை உடனே நிறுத்து!
சில சந்தேகங்கள்,
• கத்தி படத்திற்கு எதிராக திரண்ட 140 தமிழ் உணர்வு அமைப்புகள் இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்பார்களா?
• மகிந்த ராஜபக்சவின் சிறைக் கொடுமையை கண்டிப்பவர்கள் தமிழ்நாட்டில் அகதிகளின் இந்த சிறைக்கொடுமையை கண்டிப்பார்களா?
• மக்களின் பணத்தை சுருட்டி தண்டனை பெற்ற ஜெயா அம்மையாரின் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்கள் இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்பார்களா?

முதல்ல இவனுகளுக்கு ஒரு கோமணத்தை கட்டி விடுங்கடா!

 செவ்வாய்க்கு ராக்கட் விடுவது இருக்கட்டும்.
முதல்ல இவனுகளுக்கு ஒரு கோமணத்தை கட்டி விடுங்கடா!
• நிர்வானமாக திரிபவனை கும்பிடுபவனுக்கு
முத்தம் “அசிங்கம்” என்று சொல்ல என்ன தகுதி இருக்கு?

Saturday, November 8, 2014

தொடரவேண்டும் சாதீயத்திற்கு எதிரான போராட்டம்!


இக் கட்டுரை 2005ம் ஆண்டளவில் “தேசம்” சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

தொடரவேண்டும் சாதீயத்திற்கு எதிரான போராட்டம்!

அண்மையில் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்ட தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் இம் முறை இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலவும் சாதிப் பிரச்சனை தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். இவ் விடயம் தொடர்பாக எழுதுவதற்கு என்னை ஏன் அவர் தெரிவு செய்தார் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. ஒருவேளை சாதீய கொடுமைகள் அதிகம் உள்ள வடமராட்சிப் பகுதியை பிறப்பிடமாக நான் கொண்டிருப்பதாலோ அல்லது பல சாதீயப் பிரிவுகளுடனும் கலந்து பழகி ஓரளவு அனுபவங்களை நான் கொண்டிருப்பதாலோ அல்லது சாதீயப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் சண்முகதாசன் மற்றும் அவருடைய தோழர்கள் சிலரின் அனுபவங்களை நான் கேட்டிருப்பதாலோ ஆசிரியர் என்னை தெரிவு செய்திருக்கக்கூடும் என நம்புகிறேன். எதுவாயினும் அவர் கேட்டுக் கொண்டபடி கட்டுரை ஒன்றை எழுத முன் இது குறித்து யாழ்ப்பாண உயர்சாதி தமிழர் ஒருவரிடம் கருத்துக் கேட்டேன். உடனே அவர் “சாதி குறித்து எழுதாதே. மீறி எழுதினால் நீ ஒரு தமிழ்த் தேசியத் துரோகியாவாய்” என்றார். இதைக் கேட்டதும் ஒரு கணம் திடுக்கிட்டேன். ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் நான் இதுவரை ஸ்டாலின் குறித்து எழுதினேன். மாஓ சேதுங் பற்றி எழுதினேன். புத்தர் பற்றி எழுதினேன். சிறப்புமுகாம் சித்திரவதைகள் குறித்து எழுதினேன். அப்போதெல்லாம் பாராட்டி தொடர்ந்து எழுதும்படி உற்சாகம் ஊட்டியவர் சாதியைப் பற்றி எழுதப்போகிறேன் என்றதும் “எழுதாதே.எழுதினால் தமிழ்த் தேசியத் துரோகி” என்று சாபம் இடுகின்றார். உண்மைதான். சாதீயம் அந்தளவிற்கு ஆழ வேரூன்றி விருட்சமாக வளர்ந்துள்ளது. அதன் ஆணிவேரை அசைக்க முற்பட்டால் துரோகி என்ற பட்டம் மட்டுமல்ல துப்பாக்கித் தோட்டாவும் யாழ்ப்பாண மேலாதிக்க வாதம் பரிசாக வழங்கும்.

1983ம் ஆண்டுக் கலவரத்தின் போது தென்னிலங்கைப் பகுதியில் இருந்த தமிழர்கள் சிங்களக் காடையினரால் தாக்கப்பட்டு காயம்பட்ட நிலையில் , உடைமைகளைப் பறிகொடுத்த நிலையில் பரிதாபகரமான நிலையில் பஸ்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். இவ்வாறு நெல்லியடி என்னும் பகுதியில் பாதிக்கப் பட்டவர்கள் வந்து இறங்கியபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்த கன்பொல்லை கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் இதனை வெள்ளாளர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சண்டையாம் என்று கூறினார்கள். இதைக் கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அன்றைய நிலை அதுதான். அவர்களையும் தமிழர்களாக உயர் சாதியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அவர்கள் உயர் சாதியினரின் சாதீயக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெற தங்கள் கிராமத்திற்கு “கனப்பொல”என சிங்களப் பெயர் சூட்டி புத்த பிக்கு ஒருவரை வரவழைத்து புத்த ஆலயம் ஒன்றையும் உருவாக்கினார்கள். நல்ல வேளையாக சிங்கள இராணுவம் சாதி வேறுபாடு இன்றி , பிரதேச வேறுபாடு இன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தாக்கியதால் அதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் திரட்டுவது இயக்கங்களுக்கு இலகுவாக அமைந்தது. இன்று அதன் மேல் தமிழ்த் தேசியம் கட்ட முனைகின்றனர். ஆனால் அதன் அடித் தளத்தில் உள்ள சாதீயப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படாமல் அவ்வாறே உள்ளது என்பதே உண்மையாகும்.

1989ம் ஆண்டுப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கெதிராக புலிகள் இயக்கம் போராடிக் கொண்டிருந்தபோது கரவெட்டிப் பகுதியில் அதன் ஒரு பிரிவுக்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பு வகித்தார். அவருடன் அவருடைய சாதியைச் சேர்ந்த இளைஞர்களே பெரும்பாலும் இருந்தனர். அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடினாலும் கூட அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் அவருடைய சக போராளிகளுக்கும் உயர் சாதியினர் உணவு வழங்க மறுத்தனர். தங்குமிடம் கொடுக்க மறுத்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க தயங்கினர். இதனால் அவர் பல தடைவ இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளானார். தனது போராளிகள் பலரை இழந்தார். அப்போது அவரிடம் ஒருவர் “தமிழ் ஈழம் கிடைத்தால் என்னவாகும்” என்று கேட்டார். அதற்கு அப் பொறுப்பாளர் எவ்வித தயக்கமும் இன்றி “என் சாதி மக்கள் அகதிகளாக அநுராதபுரம் செல்ல நேரிடும்” என்று கூறினார். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அந்தளவுக்கு சாதியக் கொடுமைகளை அவர் அனுபவித்திருந்தார். அன்று மட்டுமல்ல இன்றும் கூட இந்த நிலைமைதான் உள்ளது. மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இந் நிலை குறித்து அண்மையில் லண்டனுக்கு வருகை தந்த மதிப்புக்குரிய தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களிடம் கேட்டபோது அவர் “ சாதீயம் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. அது என்றாவது ஒருநாள் மீண்டும் பற்றி எரியும்” என்றார். இவருடைய இக் கூற்று மறுக்க முடியாத உண்மையாகும். எனவே உண்மையாகவே தமிழ் தேசியத்தை விரும்புவோர் முதலில் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து சாதீயத்தை ஒழிப்பதற்கு முன் வரவேண்டும். அவ் வழியிலேயே தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப முயலவேண்டும். மாறாக அடக்கி யொடுக்கி பல வந்தமாக அவர்கள் கூறும் தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்பினால் அது என்றாவது ஒருநாள் பீறிட்டு வெடித்துக் கிளம்பி போலியாக கட்டியெழுப்பிய தமிழ் தேசியத்தையே சுக்கு நூறாக்கும். புலிகள் இயக்கத்தில் உப தளபதியாக இருந்த ராகவன் அவர்களும் “வடக்கில் நிகழும் இச் சாதிப்பிரச்சனை தீர்க்கப்படாவிடின் தமிழ் மக்கள் விடுதலை பெறமுடியாது” என்று கூறினார்.( இவர் இச் சாதீயப் பிரச்சனை குறித்து ஒரு சிறந்த ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். இதனை அவர்  விரைவில் பிரசுரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.)

இலங்கையில் குறிப்பாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் சாதி முறையும் தீண்டாமையும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. சுhதி அமைப்பு என்பது இலங்கை முழுவதிலும் சிங்களவர் தமிழர் இருசாரார் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால் வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீண்டாமை என்ற நாசமும் சேர்ந்து இருக்கின்றது. நளவர், பள்ளர், பறையர் போன்ற சில சாதிகள் தீண்டப்படாத சாதிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களாக மட்டுமன்றி மனிதர்களாகவும் கருதப்படவில்லை. தீண்டாமை என்பது மனிதன் மனிதனுக்குச் செய்யும் மிக மோசமான கொடுமை என்றே கூறவேண்டும்.

சாதி அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் ஒரு மிச்ச சொச்சமாகும். இலங்கையில் முதலாளித்துவம் ஒழுங்காக இல்லாமல் ஏற்ற இறக்கமாக வளர்ந்துள்ள படியால்தான் சாதி அமைப்பு இன்னமும் நின்று பிடிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அரசு இயந்திரம் அது அழியாமல் இருப்பதற்கு துணைபுரிகிறது. எனவே சாதீயத்திற்கு எதிரான போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தங்களைத் தாங்களே முற்போக்கு சக்திகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இதனைப் பார்க்கவோ புரிந்து கொள்ளவோ மறுக்கின்றனர். இப் போராட்டத்தை முன்னெடுக்க தயங்குகின்றனர். இதுவே இன்றைய யதார்த்த நிலையாகும்.

இந்தியாவில் உயர்சாதியினரான பிராமணர் வெறும் மூன்று வீதமே சனத்தொகையில் உள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால் பாராளுமன்ற அரசியலில் சில சலுகைகளை பெறமுடிகிறது. ஆனால் இலங்கையில் வடக்குப் பகுதியில் உயர் சாதியினர் பெரும்பான்மையினராகவும் தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக சிறுபான்மையினராக இருப்பதனால் எந்தப் பாராளுமன்றக் கட்சியும் உயர் சாதியினரைப் பகைத்துக் கொள்ளவோ , புண்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக இருந்தும் கூட அவர்கள் எந்தத் தேர்தல் தொகுதியிலும் பெரும்பான்மையைப் பெறமுடியாத விதத்தில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் கமிஸன் மற்றும் அதிகார வர்க்கம் அனைத்திலும் உயர் சாதியினர் இருப்பதால் அவர்களால் இவ்வாறு தந்திரமாக செய்ய முடிந்தது. ஆனால் இந்த நிலைமை தோழர்.சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன் மாறியது. ஏனெனில் அவருடைய கட்சியானது பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்வைத்தது. அது தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சலான தலைமையைக் கொடுக்க முன்வந்தது.

1966ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் சுன்னாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு படுத்தியது. பொலிசாரும் உயர் சாதியினரும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடுத்த நிறுத்த எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் தடைகளை உடைத்தெறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் முற்றவெளியில் திரண்டார்கள். அங்கு அவ் மக்கள் மத்தியில் உரையாற்றிய தோழர்.சண்முகதாசன் அவர்கள் அமெரிக்க நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு அவருடைய சகோதரர் கூறிய புத்தி மதியை மேற்கோள் காட்டினார். “ஒரு போதும் அடி பணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்”

இதன்பின் நிலைமை மாறியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தோன்றினார்கள். புதிய உணர்வு கொண்ட இப் போராளிகள் அடிக்கு அடி கொடுத்தார்கள். இவர்களுடைய போராட்டம் ஆலயப்பிரவேசம், தேனீர் கடைப் பிரவேசம், பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல் ஆகியவற்றைச் சுற்றி நடைபெற்றது. ஆனால் இன்னும் வேறு வடிவங்களில் இப் போராட்டம் நடைபெற்றது. சில போராட்டங்கள் வன்முறையான வடிவத்தில் நடைபெற்றன.

தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான இப் போராட்டத்தில் பொலிசார், நீதிமன்றங்கள் ,அதிகாரிகள் ஆகிய முழு அரசு இயந்திரமும் உயர் சாதியினருக்கு ஆதரவாக செயற்பட்டன. மாஜி மந்திரியாகிய சுந்தரலிங்கம் போன்றவர்கள் வெளிப்படையாக உயர் சாதியினருக்கு ஆலோசகர்களாக செயற்பட்டனர். இவ் வேளையில் சங்கானை என்னும் கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் சவ ஊர்வலத்தின் பாதையை மறித்து அவ் ஊர்வலத்தின் மீது சுட்டார். இத் துப்பாக்கிச் சூட்டிற்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கண்துடைப்பிற்காக சுட்டவரைக் கைது செய்த பொலிஸ் அவரை வெறும் 250 ரூபா பிணையில் பிணையில் விடுவித்தது. நீதிமன்றம் அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது. போலிஸ், நீதிபதி எல்லாம் உயர் சாதியினருக்கு ஆதரவாக இருந்தமையினால் இவ்வாறு நடந்தது. எனவே இவ் அமைப்பில் தமக்கு நீதி கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போராளிகள் அன்று மாலை சங்கானைச் சந்தையில் வைத்து அக் குற்றவாளியைச் சுட்டுக்கொன்றனர். அடிக்கு அடி கொடுத்தனர். இதே போன்று இந்தியாவில் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி என்னும் இடத்தில் கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட சாதிக் கூலித் தொழிலாளர்களை குடிசைக்குள் பூட்டி வைத்து எரித்துக் கொன்றனர் உயர் சாதியினர். இதற்கு காரணமான பண்ணையாரை “அப்பாவி” என்று கூறி இந்திய நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் அவரை கம்யுனிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொன்றனர். இது தான் சாதிப் போராட்டத்தின் இயல்பு. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தம் கன்னத்தில் அறை விழுந்த போது மறு கன்னத்தைக்காட்டாமல் அடிக்கு அடி கொடுக்கக் கற்றுக்கொண்டார்கள். இந்த மாற்றத்திற்கு காரணம் கம்யுனிஸ்ட் கட்சிகள் இப் போராட்டத்திற்கு தலைமை அளித்ததாகும்.

இலங்கையில் கம்யுனிஸ்ட் கட்சியானது இப் போராட்டத்தை ஆதரிக்கக்கூடிய உயர்சாதி மக்களின் முற்போக்கான பகுதிகளை அணிதிரட்டியது. இக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் தலைமைத் தோழர்களில் சிலர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அளித்த தலைமையினால் இந்தப் போராட்டத்தின் நோக்கங்கள் சகல பகுதி மக்கள் மத்தியிலும் பரவலாயின. சிங்கள மக்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அறிமுகம் செய்ய கட்சி பெரும் நடவடிக்கை எடுத்தது. பல தேசிய தின நாளிதழ்கள் இப் போராட்டத்தைப் பற்றிய பல செய்திகளை வெளியிட்டன.சீனாவின் பீக்கிங் வானொலி அதன் ஆதரவை இதற்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல வடிவக் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன என்பதைக் குறிப்பிடவேண்டும். அற்புதமான பல கவிதைகள் பாடல்கள் தோன்றின.நூற்றுக்கு மேலான தடவை அரங்கேற்றப்பட்ட “கந்தன் கருணை” என்னும் சிறப்பான நாடகமும் தயாரித்தளித்தார்கள்.

இந்து மதத்தின் படி கந்தபெருமானுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி வள்ளி “குறவர்” என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இதனால் நாரதர் கந்த பெருமானிடம் சென்று இலங்கையில் வடக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் உயர் சாதியினரால் இம்சிக்கப் படுவதாக முறையிடுவதுடன் இவ் நாடகம் ஆரம்பிக்கின்றது. இதைக் கேட்ட கந்த பெருமான் கோபம் கொண்டு இதற்கு தண்டனை வழங்க பூமிக்கு வருகிறார். அவரின் பெயர் கந்தன் என்பதால் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொண்ட உயர்சாதியினர் அவரை முருகன் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட கந்த பெருமான் உயர் சாதியினர் மீது எறிவதற்காக தனது ஆயுதமாகிய “வேல்” ஜ உயர்த்தினார். அப்போது நாரதர் இடைமறித்து  “இந்த ஆயுதத்தை மக்களிடம் கொடுங்கள்.அவர்கள் பாவிக்கட்டும்” என்று கூறுகின்றார். இந்த மாவோயிச அரசியல் தத்துவத்துடன் அவ் நாடகம் முடிவடைகின்றது.

புரட்சிகர கலை எப்படி புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளிவிடமுடியும் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும். புரட்சிகர நடைமுறையின்றி புரட்சிகர கலை பிறக்காது என்பதையும் அது தெளிவாக்கிறது. நடைமுறைதான் பிரதானமானது. ஆனால் புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும் புரட்சிகரக் கலை புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்தள்ளி விட உதவுகின்றது. சூன்யத்தில்  நாம் புரட்சிகரக் கலையை உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின் அங்கமாக அது உருவாகின்றது.

 

Wednesday, November 5, 2014

மலையக தமிழ் மக்களின் தொடரும் துயரம்

• மலையக தமிழ் மக்களின் தொடரும் துயரம்

மலையகத்தில் பதுளை என்னும் இடத்தில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் மண்ணில் புதையுண்டுள்ளனர். சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய இயற்கை அழிவு என முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். வருடம்தோறும் இவ்வாறான அழிவுகள் மலையகத்தில் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கை அரசு அந்த மக்களுக்கு தேவையான அவசியமான அடிப்படை வசதிகளைக்கூட செய்யாமல் புறக்கணித்து வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  மலையத்தில் அமைக்கப்பட்ட அவர்களது தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொண்டு வரப்பட்டனர். சிங்கள மக்களின் நிலங்கள்  பலவந்தமாக பறிக்கப்பட்டு அதில் குடியேற்றப்பட்டார்கள். இந்த குடியேற்றம் சிங்கள மக்களுக்கும் மலையக தமிழ் மக்களுமிடையேயான முரண்பாட்டை தோற்றுவித்தது.

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட “லயன்” வீடுகளிலேயே அவர்கள் இன்றும் வாழ்கின்றனர். அவர்களுக்கு புதிய வீடுகளோ அல்லது சொந்தமாக நிலங்களோ வழங்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள்கூட பூர்த்தி செய்யப்படவில்லை.

இலங்கையில் அதிக எற்றுமதி வருமானத்தை ஈட்டித் தரும் மலையக தமிழ் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அந்த மக்கள் தமிழர்கள் என்பதாலும் பெரும்பாலானவர்கள் ஏழைக் கூலித் தொழிலாளர்கள் என்பதாலும் அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் ஜனத்தொகை தற்போது 2 கோடியை எட்டியுள்ளது. இதில் தமிழ்பேசும் மக்கள் சுமார் 40லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தமிழ் பேசும் மக்களில் 3 வகையினர் அடங்குன்றனர். பூர்வீக தமிழ் மக்கள் என்னும் வடக்க கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் 18 லட்சம் என்றும் தமிழ்பேசும் முஸ்லிம்மக்கள் 12 லட்சம் என்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் 10 லட்சம் எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பல தலைமைகள்  “தமிழீழம்” என்னும் தனிநாட்டு தீர்வை முன்வைத்தனர். ஆனால் இந்த தீர்வை மலையகத்தில் வாழும் பத்து லட்சம் தமிழர்கள் ஒருபோதும் அதரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஏனெனில் இதனால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இருப்பினும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட  இனக்கலவரங்களின் போது இந்த மலையக தமிழ் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

ஆசியாவில் மிகப்பெரிய தொழிற்சங்கமாக இந்த மக்களின் “இ.தொ.க” இருக்கிறது. ஆனால் இதன் தலைமையானது அதனை பாவித்து இந்த மக்களுக்கு தேவையான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அதனைக் காட்டி இலங்கை அரசிடமிருந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று வருகின்றனர். அமைச்சுப் பதவியை தொடர்ந்து பெற்றுவரும் தொண்டமான் குடும்பம் கோடிக் கணக்கான ஊழல் பணத்தை தனக்கு குவித்துள்ளது. ஆனால் தன்னை நம்பிய அந்த மக்களுக்கு உரிய சம்பள உயர்வைக் கூட பெற்றுக் கொடுக்காமல் துரோகம் செய்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் சென்னையில் விபச்சார ரெய்டு நடத்திய பொலிசார் ஓட்டலில் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானைக் கைது செய்தனர். பின்னர் தகவல் அறிந்த இலங்கை அரசு உடனே இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு கமுக்கமாக அமைச்சரை விடுவித்தது. இவ்வாறு தனது சொந்த பலவீனங்களால் அந்த மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக இந்த தலைவர்கள் இருக்கின்றனர்.

இலங்கை இனவாத அரசு 1950களில் மலையக தமிழ் மக்களின் பிராஜாவுரிமையைப் பறித்தபோது வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் பூர்வீக தமிழர்களின் தலைமைகள் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. மாறாக ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் வெளிப்படையாக இலங்கை அரசை ஆதரித்தனர். இந்த மலையக தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தலைமைகள் மட்டுமல்ல பெரும்பாலான தமிழ் மக்களும் இந்த மலையக வாழ் தமிழ் மக்களை  ஒரே தமிழ் இனமாக கருதவில்லை என்பதே உண்மை. அந்த மக்களை “தோட்டக்காட்டார்” என்றும் “வடக்கத்தையர்” என்றுமே அழைத்தனர். அதுமட்டுமல்ல “வலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்ப முடியாது” என்று  இழிமொழி பேசினார்கள்.

1982ல் சென்னைக்கு சென்ற அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் “எம்.ஜி.ஆரும் கலைஞர் கருணாநிதியும்; ஈழத்தமிழர் நலனுக்காக ஒன்றுபட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு உடனே எம்.ஜி.ஆர் “முதலில் மலையகத்தில் இருக்கும் தமிழர்களையும் தமிழ்இனமாக நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என பதில் அளித்தார். அந்தளவுக்கு ஈழத் தமிழர்கள் வரலாறு பற்றி தெரிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தொடர்ந்தும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தால் ஒருவேளை மலையக தமிழர்களுக்கு ஏதும் விடிவு ஏற்பட்டிருக்கும். ஆனால் அவரோ தான் முழுமையாக ஆதரித்து உதவி செய்த புலிகளிடம்கூட இதனை ஒருபோதும் வலியுறுத்தவில்லை.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த மலையக மக்களின் வரலாறு தெரியாவிடினும் கலைஞர் கருணாநிதிக்கு  நன்கு தெரியும். ஆனால் அவரோ தனது ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காக வடக்கில் கிழக்கில் இருக்கும் பூர்விக தமிழர்களையே ஈழத்தமிழர்களாவும் அவர்களின் கோரிக்கையான தமிழீழத்தையே அனைத்து தமிழர்களின் தீர்வாகவும் தொடர்ந்து கூறிவருகிறார்.

வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்களின் மிதவாத தலைமைகள் மட்டுமன்றி ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலை இயக்கங்களும் மலையக மக்களின் சம்மதம் இன்றி அவர்களுக்கான தீர்வாக தமிழீழத்தை முன்வைத்தனர். தமிழீழம் பெற்ற பின் அனைத்து மலையக தமிழ் மக்களும் தமிழீழத்தில் வந்து குடியேறலாம் என பொருத்தமற்ற, சாத்தியமற்ற  தீர்வுகளை அவர்கள் கூறினார்கள். இருந்தும்கூட பல மலையக தமிழ் இளைஞர்கள் இந்த விடுதலை இயக்கங்களில் பங்கெடுத்துப் போராடியிருக்கின்றனர். உயிர் துறந்து தியாகிகளாகியும் உள்ளனர்.

இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்களே புரட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என மாபெரும் ஆசான் மாக்ஸ் அவர்கள் வரையறுத்திருக்கிறார். அப்படியானால் இலங்கையில் அதற்கு முழு தகுதியானவர்கள் இந்த மலையக தமிழ் உழைக்கும் மக்களே. ஆனால் துரதிருஸ்டவசமாக தன்னை மாக்சிய இயக்கமாக கூறிக்கொள்ளும் ஜே.வி.பி கட்சியானது இரண்டு முறை ஆயுதப் போராட்டம் நடத்தியபோதும் இந்த மலையக மக்களை இணைத்துக் கொள்ளத் தவறியது. தவறியது மட்டுமல்ல அந்த மக்களுக்கு எதிராக இனவாத கோசங்களை முன்வைத்தது.

மலையக தமிழ்மக்கள் ஆரம்ப காலங்களில் பெரிதும் இடதுசாரி கட்சிகளையே ஆதரித்தனர். அதனாலேயே டி.எஸ்.சேனநாயக்க வின் முதலாளித்துவ அரசு அந்த மக்களின் வாக்குரிமையையும் பிராஜாவுரிமையையும் பறித்து பழிவாங்கியது. ஆனால் காலப்போக்கில் இந்த இடதுசாரிக் கட்சிகளும் இனவாத்தில் மூழ்கி தங்களை ஆதரித்த இந்த மக்களை கைவிட்டனர். இந்த மக்களுக்கு துரோகம் இழைத்தனர்.

தமிழ்ப் புரட்சிகர இயக்கங்களைப் பொறுத்தவரையில் அவை மலையக மக்களை அணி திரட்ட வேண்டும் என விரும்பியிருந்தாலும் அதில் போதிய அளவு வெற்றி பெற தவறிவிட்டனர். அதில் “தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை” இயக்கம் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர் நெப்போலியன் மலையகத்தில் “மலையக மக்கள விடுதலை முன்னனி” என்னும் ஒரு வெளிப்புற அமைப்பை  உருவாக்கி அதன் கீழ் பல மலையக தமிழ் இளைஞர்களை  ஒன்று திரட்டினார். இதனையறிந்த இலங்கை அரசு அவரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தியது. ஆனால் இந்திய உளவுப்படையான “றோ” வானது தனது கைக்கூலி இயக்கமான ஈரோஸ் அமைப்பு மூலம் தோழர் நெப்போலியனை இரகசியமாக படுகொலை செய்தது. இதனால் மலையகத்தில் பேரவையின் புரட்சிகரப் பணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

தோழர் சண்முகதாசன் தலைமையிலான செங்கொடி சங்கம் இந்த மலையக மக்கள் மத்தியில் தொழிற் சங்க பணிகளை மேற்கொண்டது. அது குறிப்பிட்ட பங்கை வகித்திருந்தபோதும் அவருடைய கட்சியில் எற்பட்ட பிளவுகள் மற்றும் அவருடைய மரணம்  ஆகியவற்றை தொடர்ந்து அதன்  பணி செயலற்று போய்விட்டது எனலாம். இருப்பினும் 1971 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அனைத்து செங்கொடி சங்க பொறுப்பாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இது மலையக தமிழ் மக்கள் ஒரு புரட்சிர அமைப்பில் இணைவதை இலங்கை அரசு எந்தளவுதூரம் அச்சப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக என்றுகூறி கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் உதவி தூதரங்களை இந்திய அரசு இயக்கி வருகிறது. அதுவும் மலையக தமிழ் மக்களுக்காக கண்டியில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. ஆனால் இந்திய அரசு அந்த மக்களுக்கு இதுவரை செய்த உதவி என்னவென்று ஆராய்ந்தால் மிகவும் ஏமாற்றமே பதிலாக இருக்கிறது.  சில வருடங்களுக்கு முன்னர் 50ஆயிரம் வீடுகள் ஈழத் தமிழர்களுக்கு கட்டிக் கொடுக்கப்போவதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அதில் ஒரு வீடு கூட இந்த மலையக தமிழ் மக்களுக்கு தரப்படவில்லை. இதுதான் இந்திய அரசின் இந்த மக்களுக்கான உதவி என்பது?

ஈழத் தமிழர்கள் தமது தொப்புள் கொடி உறவுகள் என்றும் அவர்களுக்கு உதவுவது தமது கடமை என்றும் பல தமிழக அரசியல் கட்சிகள் கூறுகின்றன. உண்மையில் இந்த தொப்புள்கொடி உறவுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் மலையக தமிழ் மக்களே. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இந்த மலையக மக்களுக்கு ஆதரவாக இதுவரை என்ன உதவி செய்திருக்கிறார்கள்?

வடக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல மலையக வாழ் தமிழர்கள் மத்தியிலும் சாதிப் பிரிவுகளும் தீண்டாமை கொடுமைகளும் உண்டு. ஆனால் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் “விடுதலை சிறுத்தைகள்” திருமாவளவன் அவர்கள் இந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக இதுவரை குரல் கொடுக்காதது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்காகப் போராடி தமிழீழம் பெற்றுக்கொடுக்கப்போவதாக கூறும் “நாம் தமிழர்” சீமான் அவர்களும் இந்த மலையக தமிழ் மக்களுக்கு தான் பெறப்போகும் தமிழீழத்தில் என்ன தீர்வு? எப்படி? வழங்கப்படும் என்பதை இதுவரை கூறியதில்லை.

இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு மிகப்பெரிய துயரமான நிலை எதுவெனில் யுத்தம் முடிந்து ஜந்து வருடமாகியும் இன்னமும் மலையகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுதலை செய்யப்படவில்லை. புலிகளின் தளபதியாக செயல்பட்ட கருணா அமைச்சராக வலம் வருகிறார். புலிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்த கே.பி என்பவர் அரச அரவணைப்பில் சொகுசாக இருக்கிறார். ஆனால் புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட அப்பாவி மலையக தமிழ் இளைஞர்கள் மட்டும் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் புலிகளுக்கு சாப்பாடு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயதான மலையக  பெண்மணி (வயது 80)ஒருவர் விடுதலை செய்யப்படாதது மட்டுமல்ல சிறையில் மருத்துவ வசதிகூட வழங்கப்டாமையினால்  சிறையிலேயே கடந்த வருடம் இறந்தார். இந்த கொடுமை குறித்து வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகள் மட்டுமல்ல தமிழக தலைமைகளும் கண்டனம் தெரிவிக்காதது இந்த மலையக தமிழ் மக்களின் அவல நிலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இனியாவது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் தலைமைகள் மட்டுமன்றி தமிழக அரசியல் கட்சிகளும் இந்த மலையக வாழ் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அந்த மக்கள் ஒரு நல்ல தீர்வைப் பெறுவதற்கு உறுதியான ஆதரவை வழங்க வேண்டும்.

இலங்கை இந்திய அரசுகளின் ஒடுக்கு முறைக்கு எதிராக, மலையக உழைக்கும் மக்களின் தலைமையில, மாசேதுங் சிந்தனை வழிகாட்டலில் ஏற்படும் புதிய ஜனநாயகப் புரட்சியே  அனைத்து மக்களுக்கும்  ஒரு சிறந்த தீர்வைப் பெற்று தரும். இலங்கையின் எதிர்கால வரலாற்றை இந்த மலையக உழைக்கும் மக்களின் பங்களிப்பே தீர்மானிக்கும் என்பது மிகையான கூற்று அல்ல.