Saturday, January 31, 2015

தோழர் லெனின் அவர்களின் 91வது நினைவு தினம்(21.01.2015)

தோழர் லெனின் அவர்களின் 91வது நினைவு தினம்(21.01.2015)
நூலகங்களில் உறங்கிக் கிடந்த மாக்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் 91வது நினைவு தினம் இன்று ஆகும்.
ரஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்று மாபெரும் ரஸ்சிய புரட்சியை வெற்றிபெற வைத்தவர். உலக பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்
முதலாளி வர்க்க கொடுமைகள் ஒழிய, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடிக்க, ஆயுதப் போராட்டம் மூலமே சாத்தியம் என்பதை நிரூபித்தவர் தோழர் லெனின்
தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை என்று கூறிய டிரொக்சியின் அகில உலகப் புரட்சியை தத்துவார்த்த ரீதியாகவும, நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்.
தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்தவர் தோழர் லெனின். இதன் மூலம் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்.
திரிபுவாதிகளை அம்பலப்படுத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஜக்கியத்தை ஏற்படுத்தியவர் தோழர் லெனின்.
• மாக்சிய லெனிச மாவோசிச சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
• பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய
மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுப்போம்.!
• போலிகளை அம்பலப் படுத்துவோம்.
புரட்சிவாதிகள் ஜக்கியப் படுவோம்!

லண்டனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா!

லண்டனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா!
தமிழக பதிப்பகங்களின் சுரண்டலுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி!
“எழுநா” வின் முயற்சிகள் நம்பிக்கையளிக்கின்றன. பாராட்டுகள்!
லண்டனில் ஈஸ்ட்காமில் இன்று (25.01.2015) மாலை 5 மணியளவில் “எழுநா” வின் 10 புத்தகங்கள் அறிமுக விழா நடைபெற்றது.
இன்றைய இண்டர்நெட் யுகத்தில் அச்சுப் புத்தகங்கள் விரும்பப்படாது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் லண்டனில் அதுவும் ஒரே நேரத்தில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டிருப்பது எதிர்வரும் காலங்களிலும் அச்சு நூல்களுக்கு மதிப்பு இருக்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
ஈழத்து எழுத்தாளர்கள் தமது புத்தகங்களை வெளியிடுவதற்கு தமிழக பதிப்பக வியாபாரிகளை நம்பியிருக்கும் நிலையில், தமிழக பதிப்பக வியாபாரிகளால் சுரண்டப்படும் நிலையில், அதற்கு எதிரான “எழுநா” வின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரிய பணியாகும்.
ஈழத்து எழுத்தாளர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை புத்தகமாக்குவதற்கு தமிழக வியாபாரிகளிடம் தமது எழுத்தை மட்டுமன்றி பெருமளவு பணத்தையும் கொடுத்துவிட்டு நீண்டகாலமாக காத்திருந்து ஏமாற்றமடைந்து வருவதை “எழுநா”வின் வருகை முற்று புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
“எழுநா” ஒரே நேரத்தில் 10 புத்தகங்களை வெளியிட்டது மட்டுமன்றி அந்த எழுத்தாளர்களுக்கு ராயல்டி பணமும் கொடுத்துள்ளனர். அது மட்டுமன்றி 3 வருட காப்புரிமை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சலுகை என பல பயன் மிக்க ஏற்பாடுகளையும் “எழுநா” செய்துள்ளமை மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக “எழுநா” தனது கடந்த வருட கணக்கு வழக்கையும் பகிரங்கமாக முன்வைத்துள்ளமை மற்ற அமைப்புகளுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.
இது லாப நோக்கற்ற சமூக அக்கறையுள்ளவர்களின் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து உதவ வேண்டும்.
“எழுநா” வின் வளர்சியானது நல்ல புத்தகங்களை மலிவான விலையில் கிடைக்க வழி செய்வதுடன் ஈழத்து தமிழ் ஏழுத்தாளர்களுக்கு நியாயமான பணமும் கிடைக்க வழி செய்கிறது. முக்கியமாக தமிழக பதிப்பக வியாபாரிகளின் சுரண்டடலுக்கு முடிவு கட்டுகிறது.
“எழுநா” வின் பணி பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?

சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?
செய்தி:- சிறையில் உள்ளவர்களின் பெயர்களைத் தாருங்கள் விடுதலை செய்கிறேன் - ஜனாதிபதி மைத்திரி
மகிந்த ராஜபக்ச மறைத்து வைத்த விலையுயர்ந்த காரை கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் மறைத்து வைத்த பணத்தைக் கண்டுபிடித்த அரசுக்கு,
மகிந்தவின் மகன் நாமல் மறைத்துவைத்த விமானத்தைக் கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்தவின் தம்பி கோத்தபாயா கப்பலில் மறைத்து வைத்த ஆயுதங்களைக் கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்த ராஜபக்சாவால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 20 ஆயிரம் தமிழர்களை கண்டு பிடிக்க முடியவில்லையா?
அல்லது அவர்களை கண்டு பிடித்து விடுதலை செய்ய புதிய அரசுக்கும் விருப்பம் இல்லையா?
புதிய மைத்திரி அரசு,
மகிந்தவினால் தண்டிக்கப்பட்ட சரத்பொன்சேகாவுக்கு பூரண விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவினால் பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மகிந்தவினால் அடைக்கப்பட்ட தமிழ் கைதிகளை மட்டும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அது ஏன்?
தேர்தலுக்கு முன்னர் லண்டன் வந்திருந்த ரணில் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
மன்னார் ஆயர் முதல் மனித உரிமைவாதிகள் வரை பலரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பினால் இனவாதிகள் எனக் கூறப்படும் ஜே.வி.பி இயக்கம் கூட தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என பகிரங்கமாக கோரியுள்ளது.
அதுமட்டுமல்ல 20 ஆயரத்திற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்களையும் ஜே.வி.பி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டீக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பகிரங்கமாக இல்லாவிடினும் இரகசியமாகவேனும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஏன் கோர முடியவில்லை? சீ வெட்கம்!
புதிய ஜனாதிபதி மைத்திரியிடம் டக்ளஸ் தேவானந்தாவை அரசில் சேர்க்க வேண்டாம் என கோரிய தமிழ்தேசிய கூட்டமைப்பு,
கருணாவுக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டாம் என கோரிய தமிழ் தேசிய கூட்டமைப்பு,
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரமுடியாதது ஏன்?
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைவிட டக்ளஸ், கருணா ஆகியோரின் விடயம் முக்கியமானதா?
இனியாவது தமிழ்தேசிய கூட்டமைப்பு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்குமா?

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?

• தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?
புலிகள் வெற்றி பெறவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்கிறார் வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்.
அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசால் ஆயுதம் கொண்டு நசுக்கப்பட்டதாலேயே இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆனால் இன்று மீண்டும் அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அறிவிக்கிறார்.
இந்திய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை இனங்களில் ஒன்றான தமிழினம் விடுதலை பெற ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார் “தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி” தோழர் தமிழரசன்.
ஆனால் தமிழன் ஒருவன் தமிழக முதலமைச்சரானால் இலங்கை, இந்திய தமிழினம் விடுதலை பெற முடியும் என்கிறார் “நாம் தமிழர்” சீமான்
அப்படியென்றால் தமிழின விடுதலைக்குரிய பாதை எது?
மகாத்மா காந்தி முன்வைத்த அகிம்சை பாதையா? அல்லது
மாசேதுங் முன்வைத்த ஆயுதப் போராட்ட பாதையா?
விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படியுங்கள்.
http://tholarbalan.blogspot.co.uk/2015/01/blog-post_27.html

பாம்பிற்கு பல்லில்தான் விஷம். ஆனால் “துக்ளக்” சோ விற்கு உடம்பெல்லாம் விஷம்!

பாம்பிற்கு பல்லில்தான் விஷம். ஆனால்
“துக்ளக்” சோ விற்கு உடம்பெல்லாம் விஷம்!
“சோ” தனது 21.01.15 துக்ளக் இதழில் “ முன்பு வால்டர் தேவாரம் திருப்பத்தூர் பகுதியில் நக்சலைட்டுகளை கடுமையாக அடக்கி ஒடுக்கினார். இப்போது மீண்டும் துளிர்விடப் பார்க்கிற இந்த மாவோயிஸ்டுக்களையும் கடுமையாக அடக்கி ஒடுக்க வேண்டும். அரசும், காவல்துறையும் மெத்தனமாக இருந்து விடமாமல் முழு வேகத்தில் செயல்பட வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
அதாவது முன்பு பொலிஸ் அதிகாரியாக இருந்த தேவாராம் நக்சலைட்டுகளை ஒடுக்குவதாக கூறி திருப்பத்தூர் பகுதிகளில் பல அப்பாவி தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை கொன்று குவித்தது போல் இப்போதும் கொன்று குவிக்கும்படி “சோ” நஞ்சைக் கக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல சிறையில் உள்ள மாவோயிஸ்க்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கொண்டு வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் சந்திக்கின்றார்களாம். அதற்கு இடமளிக்க கூடாது என்றும் எழுதியுள்ளார்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். அப்படியானால் மாவோயிஸ்டுக்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதிமன்றத்தின் மூலம் தண்டிப்பதற்கு மாறாக பொலிசாரை துப்பாக்கியால் சுட்டு அடக்கும்படி “சோ” வால் எப்படி கோரமுடியும்?
பொலிஸ் சட்டத்தை கையில் எடுப்பது சரியென்றால் அந்த பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக மக்கள் சட்டத்தை தமது கையில் எடுப்பது எப்படி தவறாகும்?
சட்டம் படித்த வக்கீல் என தன்னைக் கூறிக்கொள்ளும் “சோ” எப்படி பகிரங்கமாக இப்படி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும்படி பொலிசாரிடம் கோர முடிகிறது?
ஜெயா அம்மையாரின் அரசியல் தரகர் என்ற திமிரா? அல்லது சசிகலாவின் சாராய கம்பனியில் பங்குதாரர் என்ற அந்தஸ்தா? “சோ” தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு எதிராக விஷம் கக்கி வருவதற்கு எது காரணம்?
கேரளாவில் இருந்து கொண்டு மலையாளிகளுக்கு எதிராக எழுதமுடியுமா?
கர்நாடகாவில் இருந்து கொண்டு கன்னடர்களுக்கு எதிராக எழுத முடியுமா?
மும்பையில் இருந்து கொண்டு மராட்டியர்களுக்கு எதிராக எழுத முடியுமா?
ஆனால் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு "சோ" வால் தமிழனுக்கு எதிராக எப்படி எழுத முடிகிறது?
தமிழன் “இளிச்சவாயன்” என்று “சோ” கருதுகிறாரா?

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!
இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்கிறார்கள்.
இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் உள்ளது?
• மணிப்பூரில் பெண்களை கற்பழித்து தங்களுக்கு ஆண்மை உள்ளதாக நிரூபிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.
• சாதி மாறி காதலித்தால் பெண்ணை 13 பேர் கற்பழிக்குமாறு உத்தரவிடுவதற்கு நாட்டாமைக்கு சுதந்திரம் உண்டு.
• கோடிக்கணக்கான ஊழல் செய்வதற்கு சோனியாவுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சுதந்திரம் உண்டு.
• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொல்வதற்கு சுதந்திரம் உண்டு.
• கூலிப்படையை ஏவி கொலை செய்ய சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அது மட்டுமல்ல நீதியை விலை கொடுத்து வாங்கவும் அவருக்கு சுதந்திரம் உண்டு.
• பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனையும் கொலை செய்த சங்கராச்சாரிக்கு விடுதலையும் வழங்க இந்திய நீதித்துறைக்கு சுதந்திரம் உண்டு.
• இலங்கையில் 40 ஆயிரம் மக்களைக் கொல்ல இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. அதுமட்டுமல்ல தமிழக மீனவனைக் கொல்ல இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவும் இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு.
இப்படி பல சுதந்திரம் இந்தியாவில் உண்டு.
நீங்கள் எந்த சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கின்றீர்கள்?

இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?

அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயம்.
அப்பாவி மக்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்பாவி மக்களுக்கு ஒரு நியாயமும் அரசியல்வாதிகளுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
323 ரெலிபோன் இணைப்புகளை சன் டிவிக்கு முறைகேடாக பயன்படுத்தியதில் 400 கோடி ரூபா பெறுமதியான ஊழல் செய்த தயாநிதி மாறன் இன்னும் கைது செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
2ஜி மூலம் பல லட்சம் கோடி ஊழல் செய்த கனிமொழி மற்றும் ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவும் இல்லை.
66 கோடி ரூபா மக்கள் பணத்தைச் சுருட்டிய ஜெயா அம்மையாருக்கு 4 வருடம் தண்டனை வழங்கியும்கூட 21 நாளில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை அளித்துள்ளது.
ஆனால் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு விடுதலையளிக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் நிரபராதி பேரறிவாளன் விடுதலையை வேண்டுமென்றே தாமதம் செய்கிறது.
மதுரையில் கைது செய்யப்பட்ட 6 தமிழ் இன உணர்வாளர்கள் 300 நாட்களுக்கு மேலாக மதுரை சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் இந்த தலைவர்கள் போல் ஊழல் செய்யவில்லை. மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை. மாறாக தமிழின விடுதலையை விரும்பியதே அவர்கள் செய்த தவறு.
மக்கள் பணத்தை திருடியவர்களுக்கு ஜாமீனில் விடுதலை. ஆனால் தமிழ் இன உணர்வாளர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறை.
இதுதான் இந்திய நீதியா?