Tuesday, May 30, 2017

•"நல்ல செய்தி" கிடைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே!

•"நல்ல செய்தி" கிடைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே!
இங்கு சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் ஜனாதிபதி மைத்திரியுடன் உரையாடுவது இரு வாரங்களில் கிடைக்க விருக்கும் நல்ல செய்தி பற்றியே என நம்புவோமாக.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்திருந்தார்.
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்ததோ இல்லையோ ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது. 6 சொகுசு வாகனங்கள் கிடைத்தது. இரண்டு சொகுசு பங்களாக்கள் கிடைத்தது. 20 பாதுகாப்பு வீரர்கள் கிடைத்தது. சுமந்திரனுக்கும்கூட அதிரடிப் படையின் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
இப்போது இரு வாரங்களில் நல்ல செய்தி கிடைக்கும் என மே தினத்தில் சம்பந்தர் அய்யா கூறினார். அதன்படி நல்ல செய்தி கிடைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது.
இங்கு சம்பந்தர் அய்யா நல்ல செய்தி என்று கூறியது தமிழ் மக்களின் தீர்வு என நாம் நம்புகிறோம். ஆனால் அவர் ஒருவேளை தனக்கு ஏதும் சலுகை கிடைக்கப் போவதை கூறினாரோ தெரியவில்லை.
ஒரு வருடத்தில் ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்று கேட்டபோது அது தனது கணிப்பு மட்டுமே என சர்வ சாதாரணமாக பதில் கூறினார் சம்பந்தர் அய்யா. தமிழ் மக்களை தான் ஏமாற்றியது குறித்து கொஞ்சம்கூட அவர் கூச்சப்படவில்லை.
எனவே அடுத்து 4 நாட்களின் பின் ஏன் நல்ல செய்தி கிடைக்கவில்லை என்று யாராவது கேட்டால் சர்வசாதாரணமாக எதையாவது கூறுவார்.
சம்பந்தர் அய்யா போன்றதொரு கேவலம் கெட்ட தலைவரை தமிழ் இனம் இதுவரை சந்தித்ததில்லை என்றே வரலாறு எழுதப்படப் போகிறது.

•அமைச்சர் மனோ கணேசனின் இரட்டை வேடம்!

•அமைச்சர் மனோ கணேசனின் இரட்டை வேடம்!
அமைச்சர் மனோ கணேசனின் அப்பா வி.பி கணேசன் ஒரு நடிகர். அவர் சினிமாவில் தேவையானால் இரட்டை வேடம் போடலாம். ஆனால் அவர் மகன் மனோ கணேசன் அரசியலில் இரட்டை வேடம் போடுகிறார்.
மனோ கணேசன் ஒருபுறம் மகிந்த ராஜபக்ச செய்த இனப்படுகொலையை கண்டிக்கிறார். அது விசாரிக்கப்பட வேண்டும் என கோருகிறார். மறுபுறத்தில் முஸ்லிம் மக்களை படுகொலை செய்த பிரதமர் மோடியை சந்தித்து கைகுலுக்க துடிக்கிறார்.
தான் யாருக்கும் பயப்படாதவன். தனது கருத்தை வெளிப்படுத்த தயங்காதவன் என்று மனோ கணேசன் தன்னைப் பற்றி கூறி வருகிறார். அது உண்மை என்றால் மோடியின் படுகொலைகள் பற்றிய கருத்தை தைரியமாக மோடியிடம் கூறுவாரா?
பிரதமர் மோடி குஜராத்தில் ஆயிரக் கணக்கில் முஸ்லிம் மக்களை கொன்றவர். அதுமட்டுமன்றி இன்றும்கூட காஸ்மீரில் ஆயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருப்பவர். அவரை வரவேற்கவும் கைகுலுக்கவும் மனோ கணேசனால் எப்படி முடிகிறது?
தான் அரசை விமர்சித்துக்கொண்டுதான் அமைச்சு பதவியில் இருப்பதாக மனோ கணேசன் கூறுகிறார். சிறையில் இருக்கும் மலையக இளைஞர்களை க்கூட விடுதலை செய்விக்க முடியாத அமைச்சு பதவியில் எதற்காக அவர் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்?
மனோ கணேசனின் முன்னணியில் இருக்கும் அமைச்சர் திகாம்பரம் என்பவர் இதொக கட்சி பிரதமர் மோடியை சந்திப்பதை தடுப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இது உண்மை என்றால் ஏன் அவ்வாறு அவர் தடுத்தார் என்பதை மனோ கணேசன் கூறவாரா?

•இந்திய அரசு தடைசெய்த ஈழத் தமிழனின் “கூட்டாளி” படத்திற்கு ஆதரவு வழங்குவோம்!

•இந்திய அரசு தடைசெய்த ஈழத் தமிழனின்
“கூட்டாளி” படத்திற்கு ஆதரவு வழங்குவோம்!
ஈழத் தமிழரான நிரோஜன் அவர்கள் “கூட்டாளி” என்னும் படத்தை இயக்கியுள்ளார். அவரது படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்திய அரசு தடை விதித்துள்ள இப் படம் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் வெளிநாடுகளில் திரையிடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் டென்மார்க்கில் திரையிடப்பட்ட இப் படம் 04.06. 17 யன்று லண்டனில் திரையிடப்படவுள்ளது.
இப் படத்தை தடை செய்ததன் மூலம் ஒரு திரைப்படக் கலைஞனின் கருத்து சுதந்திரத்தை இந்திய அரசு மறுத்துள்ளது.
சாதாரணமாகவே ஈழத்து கலைஞர்கள் தமிழ்நாட்டு சினிமாவில் வளர்வதற்கு அனுமதிப்பதில்லை. இப்போது அரசு இத் தடை மூலம் மேலும் தடுக்கப்படுகிறது.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் அவர்களின் குப்பை படங்களை சந்தைப் படுத்துவதற்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தேவை. ஆனால் ஒரு ஈழத்து கலைஞன் அங்கு சென்று வளர்வதை அனுமதிப்பதில்லை.
எனவே இந்திய அரசு தடை செய்த படத்தை பார்வையிட்டு ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத் தமிழனின் கடமையாகும்.
பாகுபலிக்கு பணத்தை அள்ளி கொடுப்பவர்கள் அதில் ஒரு சிறு பகுதியையாவது எமது கலைஞர்களின் படத்திற்கு கொடுத்து அதரிக்க வேண்டியது கடமையாகும்.
அதுமட்டுமன்றி பாகுபலி ஒரு வாரத்தில் சம்பாதித்த 1000 கோடி ரூபாயில் ஒரு ரூபாகூட எமக்கு வரப்போவதில்லை.
ஆனால் இந்த கூட்டாளி படத்தின் மூலம் பெறப்படும் பணம் முழுவதும் தமிழகத்தில் அகதிமுகாம்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள்.
எனவே நீங்கள் இந்தப் படத்தை பார்வையிட்டு ஆதரிப்பதன் மூலம்
•இந்திய அரசின் தடைக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்கள்
•ஒரு கலைஞனின் கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கிறீர்கள்.
•ஒரு ஈழத்து கலைஞனின் வளர்ச்சிக்கு உதவுகிறீர்கள்.
•எல்லாவற்றுக்கும் மேலாக அகதி மகாமில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறீர்கள்.
என்ன நண்பர்களே! தயாராகி விட்டீர்களா?
மறக்காதீர்கள், லண்டனில் 04.06.17 மாலை 4 மணி
இடம்- Crystal Clubs Ltd Hall,
1 Poppin Building, Southway,
Wembley, Middlesex HA9 0HB.
London.
நுழைவுச்சீட்டு ஒன்று-£5.00 மட்டும்
உணவு வகைகள் பரிமாறப்படும் மேலதிக கட்டணம் இல்லை.
மேலதிக விபரங்களுக்கு:
ராம் - 07501 963481
யோகி - 07929 349302

போராளிகளை படுகொலை செய்வதன் மூலம் போராட்டத்தை ஒருபோதும் அடக்கிவிட முடியாது!

•போராளிகளை படுகொலை செய்வதன் மூலம்
போராட்டத்தை ஒருபோதும் அடக்கிவிட முடியாது!
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் துருக்கியில் இளம் போராளி சிலா அபலாய் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டபோது உலகம் எப்படி கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததோ அதேபோன்றுதான் இந்தியாவில் காஸ்மீரில் முஸ்லிம் மக்கள் கொல்லப்படும்போதும் சதீஸ்கரில் பழங்குடி மக்கள் கொல்லப்படும்போதும் துருக்கியில் கொல்லப்படும்போதும் வேடிக்கை பார்க்கின்றது.
ஆயிரக் கணக்கில் மக்களை படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியும் என எப்படி இலங்கை அரசு நினைத்ததோ அதேபோன்றுதான் இந்திய அரசும் துருக்கிய அரசும் படுகொலை மூலம் மக்கள் போராட்டங்களை அடக்கிவிடமுடியும் என நினைக்கின்றன.
ஆனால் படுகொலைகள் மூலம் மக்கள் போராட்டத்தை அடக்கிவிட முடியாது என்பதை எப்படி இலங்கையில் தமிழ் மக்கள் நிரூபித்து வருகிறார்களோ அதேபோன்று இந்தியாவில் மட்டுமல்ல துருக்கியிலும் மக்கள் நிச்சயம் நிரூபிப்பார்கள்.
இலங்கை அரசாக இருந்தாலும் சரி அல்லது இந்திய மற்றும் துருக்கிய அரசுகளாக இருந்தாலும் சரி படுகொலைகள் மூலம் மக்கள் போராட்டங்களை ஒருபோதும் அடக்கிவிட முடியாது.
ஏனெனில் மக்களுக்காக போராடும் போராளிகள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். எனவே ஆயிரம் ஆயிரம் போராளிகள் முளைத்துக்கொண்டேயிருப்பார்கள்.
இங்கு கவலைக்குரிய விடயம் என்னவெனில் தாம் அழியும்போது தமக்காக யாரும் குரல் கொடுக்கவேயில்லையே என கூறும் தமிழர் சிலர் இந்தியாவில் , துருக்கியில் மக்கள் மற்றும் போராளிகள் கொல்லப்படும்பொது குரல் கொடுப்பதில்லை.
அடக்கு முறைக்கு எதிராக போராடும் ஒரு இனம் இன்னொரு போராடும் இனத்துடனே ஜக்கியப்பட முடியும். மாறாக போராடும் தமிழ் இனம் போராட்டத்தை அடக்கும் இந்திய அரசுடனோ அல்லது அமெரிக்க அரசுடனோ ஒருபோதும் ஜக்கியப்பட முடியாது.
துருக்கியில் பாசிச அரசால் படுகொலை செய்யப்ட்ட புரட்சிகர இளைஞர் அமைப்பைச் சேர்ந்த 18 வயதான பெண் போராளி சிலா அபலாயை நினைவு கூர்வோம். அவருக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம்.
துருக்கிய அரசின் படுகொலைகளை கண்டிப்போம். துருக்கிய அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எமது ஆதரவினை தெரிவிப்போம்.

•முள்ளிவாய்க்காலில், கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவது

•முள்ளிவாய்க்காலில்,
கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவது
அழுது புலம்புவதற்காக அல்ல -மாறாக,
நாம் மீண்டும் எழுந்து நிற்பதற்காகவே!
படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நாம் நினைவு கூருவது அழுது ஒப்பாரி வைப்பதற்காக அல்ல. மாறாக நாம் மீண்டும் எழுந்து நிற்பதற்காகவே.
நாம் எழுந்து நடந்தால் இமய மலையும் எமக்கு வழி கொடுக்கும். மாறாக நாம் உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழும். அப்படியிருக்க தமிழ் இனம் மட்டும் அடங்கி அடிமையாக கிடந்து விடுமா என்ன?
அழுத பிள்ளையே பால் குடிக்கும். போராடிய இனமே விடுதலை பெறும். இப்போது எம்முன் உள்ள கேள்வி நாம் போராடப் போகிறோமா அல்லது அடிமையாக கிடக்கப் போகிறோமா?
தாயகத்தில் உள்ள எம் உறவுகள் தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக அறிவித்து போராடி வருகிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது உறவுகளின் போராட்டத்திற்கு துணை நிற்கப் போகிறார்களா? அல்லது போராட்டத்தை காட்டிக் கொடுக்கப் போகிறார்களா?
தலைமைகள் அரசின் சலுகைகளுக்காக துரோகம் புரிந்தாலும் பரந்து பட்ட மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். வருவார்கள்.
போத்துக்கேயரை எந்த மக்கள் விரட்டினார்களோ, ஒல்லாந்தரை எந்த மக்கள் விரட்டினார்களோ, ஆங்கிலேயரை எந்த மக்கள் எதிர்தார்களோ அதே மக்கள்தான் இந்திய ராணுவத்தையும் எதிர்த்தார்கள். இலங்கை அரசையும் எதிர்க்கிறார்கள்.
எமது மக்கள் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்கள் ஒருபோதும் அடிமைத்தனத்திற்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.
இலங்கை இந்தியஅரசுகள் மட்டுமல்ல எத்தனை அரசுகள் சேர்ந்து அடக்கினாலும் எம் மக்கள் பயந்து மண்டியிட மாட்டார்கள்.
அவர்கள் தமது மூச்சுக்காற்றை நிறுத்துவார்களேயொழிய ஒருபோதும் போராட்டத்தை விட்டு விடமாட்டார்கள்.
இதையே கடந்தகால வரலாறு காட்டுகிறது. எதிர்கால வரலாறும் இதையே நிரூபித்துக் காட்டும்.
எனவே முள்ளிவாய்க்கால் நினைவுகளை இயன்றளவு எந்தவித அமைப்பு வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்று திரண்டு செய்வோம்.
மீண்டும் எழுந்து நிற்போம். இம்முறை கடந்த முறையைவிட பலமாக எழுந்து நிற்போம

•சம்பந்தர் அய்யா கூறவேண்டியதை சீமான் கூறியிருப்பது உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது!

•சம்பந்தர் அய்யா கூறவேண்டியதை சீமான் கூறியிருப்பது
உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது!
நேற்று முன்தினம் மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள் மீது தமிழக பொலிசார் தாக்குதல் நடத்தி பொய்வழக்கு போட்டதை “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் மட்டுமே கண்டித்திருக்கிறார்.
அவர் தனது கண்டன அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“தமிழகத்திற்குத் தஞ்சம்தேடிவரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இங்குச் சந்திக்கும் துன்பத்துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஈழத்தமிழில் பேசினாலே பயங்கரவாதி என்று முத்திரை குத்துவது, அவர்களை எத்தகைய பணிகளிலும் ஈடுபடவிடாமல் தொந்தரவு செய்வது, எப்பொழுதும் கண்காணிப்பிலேயே வைத்திருப்பது, நாள் முழுக்க உழைத்து அவர்கள் பெறும் ஊதியத்தை அபகரித்துக் கொள்வது, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவது, ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவது, பெண்களிடமும், குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தல்களைத் தருவது, காரணமில்லாமல் அகதி முகாமுக்குள் அடைத்து சித்திரவதை செய்வது, அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூடச் செய்துதராது இழுத்தடிப்பது, பொய்யாக வழக்குகளைப் புனைந்து சிறையிலடைப்பது என அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாகும்.”
நான் அறிந்தவரையில் தமிழகத்தில் ஈழ தமிழ் அகதிகள் அனுபவிக்கும் கொடுமையை வேறு எந்த தலைவரும் இத்தனை தெளிவாக வெளிப்படையாக சொல்லியதில்லை.
உண்மையில் இந்த வரிகள் யாவும் ஈழத் தமிழர்களின் தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் சம்பந்தர் அய்யா கூறவேண்டிய வார்த்தைகள் ஆகும்.
ஆனால் சம்பந்தர் அய்யாவோ கொஞ்சம்கூட கூச்சம் இன்றி பிரதமர் மோடியுடன் விருந்துண்டு மகிழ்கிறார்.
சீமான் விரும்பியிருந்தால் நெடுமாறன் அய்யா போன்று மோடி யாழ்ப்hணம் செல்ல வேண்டும் என்று ஒரு அறிக்கையை விட்டிருக்கலாம். அல்லது மற்ற தலைவர்கள் போல் பேசாமல் மௌனமாகவே இருந்திருக்கலாம்.
ஈழ அகதிகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து ஈழ தமிழ் தலைவர்களே எதுவும் பேசாமல் இருக்கும்போது சீமான் ஈழ அகதிகளுக்காக இவ்வாறு குரல் கொடுத்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.
நமக்காக குரல் கொடுத்த சீமானை பாராட்ட வேண்டிய நம்மவர்கள் சிலர், பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. மாறாக அவர் நெற்றியில் விபூதி அணிந்த படத்தை போட்டு கிண்டல் அடிக்கின்றனர்.
ஒவ்வொரு எழுத்திற்கு பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கிறது என்று தோழர் லெனின் கூறியது உண்மைதான்.

•நல்ல செய்தி வருவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே!

•நல்ல செய்தி வருவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே!
இரண்டு கிழமையில் தமிழ் மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்று சம்பந்தர் அய்யா மே தினத்தில் கூறினார்.
சம்பந்தர் அய்யா கூறியபடி நல்ல செய்தி வருவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.
நல்ல செய்தி வருமா அல்லது இதுவும் சம்பந்தர் அய்யாவின் வழக்கமான ஏமாற்றா என்பது நாளைய தினம் தெரிந்துவிடும்.
இதோ இந்த படத்தில் உள்ள வீடானது திருகோணமலையில் கப்பல்துறை கிராமத்தில் உள்ள வீடுகளின் நிலையை காட்டுகிறது.
இந்த கப்பல்துறை கிராமமானது 1996ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரால் சமாதானத்திற்கான கிராமமாக தோற்றுவிக்கப்பட்டது.
இந்த கிராமம் தொடர்ந்தும் அபிவிருத்தி குன்றிய கிராமமாகவே காணப்படுகிறது. இந்த கிராமத்தின் பாராளமன்ற உறுப்பினராக சம்பந்தர் அய்யா இருக்கிறார்.
திருகோணமலை மாவட்ட கோயில் ஒன்றின் புனரமைப்புக்கு 150 லட்சம் ரூபா பணத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொடுத்துள்ளார் சம்பந்தர் அய்யா.
தனக்கு வாக்குபோட்ட மக்கள் ஓட்டை வீட்டிற்குள்ள வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு எந்த உதவியையும் பெற்றுக் கொடுக்காமல் கோயில் கட்டுவதற்கு நிதி பெற்றுக் கொடுக்கிறார் சம்பந்தர் அய்யா.
சம்பந்தர் அய்யா விரும்பினால் தனது சொந்தப் பணத்தில் கோயில் கட்டிக் கொள்ளட்டும்.
அதைவிடுத்து மக்கள் வீடு இன்றி இருக்கும்போது அரச பணம் பெற்று கோயில் கட்டுவது என்ன நியாயம்?