Saturday, November 30, 2019

இந்த அரசு மீது சந்தேகம்

இந்த அரசு மீது சந்தேகம். ஓரிரு மாதங்களில் தீர்க்கமாக முடிவு எடுப்போம் என்றார் சம்பந்தர் ஐயா
இப்போது அதே அரசின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்று சம்பந்தர் ஐயா முடிவு எடுத்துள்ளார்.
சம்பந்தர் ஐயாவின் சந்தேகம் எப்படி தீர்;ந்தது?
பணப் பெட்டி காரணமாக இருக்குமோ என இப்போது மக்களுக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.

கொஞ்சம்கூட மூளையை பயன்படுத்துவதில்லை

கொஞ்சம்கூட மூளையை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தவர்களுடன் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்- அறிஞர் அண்ணா
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி வோட்டு வாங்கிவிட்டு இதுவரை தீர்வு பெற்று தராதது தவறு இல்லையாம்
ஒவ்வொரு தீபாவளிக்கும் அடுத்த தீபாவளிக்குள் தீர்வு கிடைத்துவிடும் என்று அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றியது தவறு இல்லையாம்
வேலை கேட்டால் தீர்வு கிடைக்காமல் போய்விடும் என்று கூறிவிட்டு தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் வாங்கியது தவறு இல்லையாம்.
ஆனால் அவர்கள் தேர்தலுக்கு வவனியா வரும்போது அவர்களுக்கு பாதிக்கப்பட்ட ஒரு பெண் செருப்பு காட்டியது மிகப் பெரிய தவறாம்.
அநத பெண் ஏன் கோத்தாவுக்கு செருப்பு காட்டவில்லை என்றும் அவர் ஒரு கட்சியால் தூண்டப்பட்ட பெண் என்றும் சுமந்திரன் விசுவாசிகள் கூறுகிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் கோத்தாவிடம் காசு வாங்கிவிட்டுத்தான் அந்த பெண் சுமந்திரனுக்கு செருப்பு காட்டினார் என்று எழுதுவார்கள் போல் இருக்கிறது.
முதலாவது, இந்த பெண் 2009ல் செருப்பு காட்டவில்லை. 2019ல் பத்து வருடம் பொறுமையாக இருந்துவிட்டே காட்டியுள்ளார்.
இரண்டாவது, ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி யார் வோட் வாங்கினார்களோ அவர்களிடம்தான் அந்த பெண் தன் கோபத்தை காட்டியுள்ளார்.
மூன்றாவது, அவர் செருப்பு காட்ட வேண்டும் என்று அந்த இடத்திற்கு வரவில்லை. தலைவர்களுடன் பேசுவதற்காகவே வந்திருக்கிறார். கூட்டம் முடிந்து செல்லும்போது தலைவர்களுடன் பேச முடியும் என்று அவரிடம் பொலிசார் கூறியுள்ளனர். எனவே கூட்டம் முடியும்வரை அவர் பொறுமையுடன் இருந்துள்ளார். ஆனால் கூட்டம் முடிந்த பின்பு தலைவாகள் அவருடன் பேசாமல் வண்டியில் சென்றதாலே அவர் வேறு வழியின்றி செருப்பைக் காட்டியுள்ளார்.
நான்காவது, செருப்பை காட்டுவது தவறான கலாச்சாரம் கிடையாது. உலகில் அமெரிக்க ஜனாதிபதிக்கே அதிகளவு செருப்படிகள் விழுந்துகொண்டிருக்கின்றன. அதை தவறான கலாச்சாரம் என்று யாரும் கூறுவதில்லை.
ஜந்தாவது, சஜித் பிரேமதாசாவை ஆதரிக்காதவர்கள் எல்லாம் கோத்தாவின் கைக்கூலிகள் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றார்கள். அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று “துரோகிகள்” என்றும் முத்திரை குத்துகின்றனர்.
இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் ஈழத் தமிழ் அரசியலில் இந்த “துரோகி” முத்திரை குத்தும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களே இவர்கள்தான். இறுதியாக அதற்கு பலியாகுபவர்களும் இவர்களே.

தம்பி செந்தூரா! எங்களை மன்னித்துவிடு!

•தம்பி செந்தூரா!
எங்களை மன்னித்துவிடு!
நீ தலை வைத்து உயிர் விட்ட தண்டவாளத்தில்
இப்போதும் ரயில்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
நீ விரும்பிய கைதிகள் விடுதலை பெற்று
அதில் வருவார்களா என நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
எமது தலைவர்கள் அரசியல் கைதிகளையும் மறந்து விட்டார்கள்
அதற்காக உயிர் விட்ட உன்னையும் மறந்து விட்டார்கள்.
அவர்களது கவலை எல்லாம்
தங்கள் பதவியை எப்படிக் காப்பாற்றுது
சொகுசு பங்களா வாகனம் எப்படி வாங்குவது என்பது பற்றியே.
நீ எம்.பி சிறீதரன் வீட்டில் பிறந்திருந்தால்
நல்லூரில் தனி வீடு வாங்கி படித்திருக்கலாம்
நீ, மாவை சேனாதிராசாவின் மகனாக பிறந்திருந்தால்
இந்தியா சென்று படித்திருக்கலாம்
நீ சுமந்திரன் மகனாக பிறந்திருந்தால்
லண்டன் சென்று படித்திருக்கலாம்.
நீ ஏழை வீட்டில் பிறந்ததால்தானா
அரசியல் கைதிகளுக்காக உயிர் துறந்தாய்?
தமிழ்நாட்டில் எழுவர் விடுதலைக்காக உயிர் தறந்த செங்கொடிக்கு
நினைவு சின்னம் வைத்து வருடா வருடம் நினைவு கூர்கிறார்கள்
ஈழத்தில் அரசியல் கைதிகளுக்காக உயிர் துறந்த உனக்கு
ஒரு நினைவுச் சின்னம்கூட அமைக்க எமக்கு தோன்றவில்லை
மன்னித்துவிடு செந்தூரா!
பிகில்; பட கட்அவுட் கட்ட வேண்டும்
அப்பறம் ஜனாதிபதி எலெக்சன் வருது
தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டும்
எங்களுக்கு நிறைய வேலை இருக்கு
அதில் உன்னை நினைக்க ஏது நேரம்?
ஆனாலும் ஒரு விடயத்தில் நீ ஆறதல் கொள்ளலாம்
ஏனெனில் நல்லவேளை 2015ல் நீ செத்துவிட்டாய்
இல்லையேல் ஏன் கோத்தா வரும்போது சாகவில்லை என்று கேட்டிருப்பார்கள்.
அல்லது, ஒரு கட்சி தூண்டிவிட்டுத்தான் செத்தாய் என்று கூறியிருப்பார்கள்.
குறிப்பு- அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 26.11.2015 யன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரன் நினைவாக எழுதும் குறிப்பு இது.

•தோழர் சண்முகதாசனும் கோத்தாவின் ஆதரவாளரா?

•தோழர் சண்முகதாசனும் கோத்தாவின் ஆதரவாளரா?
“ தேர்தலை பகிஸ்கரிக்க சொல்லி யார் சொன்னாலும் அடிப்பேன். அது தமிழ்தேசிய கூட்டமைப்பாக இருந்தாலும்” என்று சுமந்திரனின் ஒரு தம்பி எழுதுகிறார்
“தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை. அதை மறுப்பது சட்ட விரோதம்” என்று இன்னொரு தம்பி எழுதுகிறார்
“தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்று கோருபவர்கள் கோத்தாவின் ஆதரவாளர்கள்” என்று வேறொரு தம்பி முத்திரை குத்துகிறார்.
இந்த தம்பிகள் “தேர்தல் பகிஸ்கரிப்பு” என்பது கஜேந்திரகுமாரின் கண்டு பிடிப்பு என்று நினைக்கிறார்கள்.
அதனால்தான் கஜேந்திரகுமாரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு தேர்தல் பகிஸ்கரிப்பை எதிர்க்கிறார்கள்.
பாவம். அந்த தம்பிகளின் அரசியல் அறியாமையை சுட்டிக் காட்டுவது எனது இப் பதிவின் நோக்கம் இல்லை.
மாறாக, தேர்தல் பகிஸ்கரிப்பு என்னும் சரியான அரசியல் பாதையை கொஞ்சமாவது அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.
இலங்கை அரசியலில் நான் அறிந்தவரையில் முதன் முதலாக தேர்தல் பகிஸ்கரிப்பு பாதையை முன்வைத்தவர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன் அவர்கள்.
“இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும். அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது” என்று அவர் தேர்தல் பாதையை பகிஸ்கரிக்க முன்வைத்த காரணத்தை விளக்குகிறார்.
அன்று தேர்தல் பாதையை பகிஸ்கரிக்க தோழர் சண்முகதாசன் முன்வைத்த காரணம் இன்றுவரை பொருத்தமாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல அவர் தேர்தலை பகிஸ்கரித்தபோது அதனை டல்லி சேனநாயக்காவுக்கோ அல்லது சிறிமாவோ பண்டார நாயக்காவுக்கோ ஆதரவானது என்று யாரும் கூறியதில்லை.
அதன்பின்பு ஈழத் தமிழர்கள் மத்தியில் 36 போராளி இயக்கங்கள் தோன்றியது. அவை யாவும் தேர்தல் பகிஸ்கரிப்பையே முன்வைத்தன. அப்போதும் கூட இந்த பகிஸ்கரிப்பு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு ஆதரவானது என்று யாரும் கூறியதில்லை.
ஆனால் இப்போது மட்டும் தேர்தல் பகிஸ்கரிப்பை கோருவோரை கோத்தாவின் ஆதரவாளர்கள் என்று சிலர் முத்திரை குத்துகிறார்கள். இனியாவது இவர்கள் தங்கள் அரசியல் அறியாமையை போக்கிக் கொள்ள வேண்டும்.

கோத்தாவும் சஜித்தும் ஒன்னு

கோத்தாவும் சஜித்தும் ஒன்னு
இதை அறியாவர்கள் வாயில் மண்ணு
தேர்தல்பாதை மூலம் தமிழ் மக்கள்
இதுவரை எதையும் பெறவில்லை.
இனியும் எதுவும் பெற்றுவிட முடியாது.
தேர்தல் மூலம் தமிழ் மக்கள் எதுவும் பெற்றுவிட முடியுமென்றால்
அவர்கள் தேர்தலையே தமிழ் மக்களுக்கு அனுமதிக்க மாட்டார்கள்.
மகிந்த காலத்திலும் தமிழ் மக்கள் போராடினார்கள்
மைத்திரி காலத்திலும் தமிழ் மக்கள் போராடுகிறார்கள்
இனி கோத்தாவோ அல்லது சஜித் வந்தாலும்
அவர்கள் காலத்திலும் தமிழ் மக்கள் போராடுவார்கள்.
ஏனெனில் போராட்டம் ஒன்றே வழி
போராட்டத்தை விட்டால் வேறு வழியில்லை.
யார் வந்தாலும் தமிழ் மக்கள் போராடுவார்கள்.
யார் வந்தாலும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் தலைமைகள பதவி பெறுவார்கள். பங்களாக்கள் பெறுவார்கள்.

சஜித் பிரேமதாசாவை ஆதரித்தால்

சஜித் பிரேமதாசாவை ஆதரித்தால் தமிழருக்கு தீர்வு வரும் என்கிறார் சுமந்திரன்.
ஆனால் சஜித் கட்சியைச் சேர்ந்த விஜயகலா அம்மையார் “கடவுள் எப்போது நினைக்கிறாரோ அப்பதான் தமிழருக்கு தீர்வு வரும்” என்கிறார்.
இப்போது ஒரு சந்தேகம் வருகிறது. அம்மையார் யாரை கடவுள் என்கிறார்?
தமிழ் மக்களுக்கு சஜித்தான் கடவுள் என்கிறாரா?
சரி. அப்படியென்றால் வோட்டையும் போய் கடவுளிடம் கேட்க வேண்டியதுதானே?
என்ன ம - - க்கு தமிழ் மக்களிடம் வந்து வோட் கேட்க வேண்டும்?

ஆளும் வர்க்கம் தொடர்ந்து ஆட்சி ஆதிகாரத்தை தக்க வைக்க

ஆளும் வர்க்கம் தொடர்ந்து ஆட்சி ஆதிகாரத்தை தக்க வைக்க தேர்தல் உதவுகிறது. எனவே அவர்கள் தேர்தலை பகிஸ்கரிப்பதில்லை.
சம்பந்தர் ஐயா சுமந்திரன் போன்றவர்கள் பதவி மற்றும் பாதுகாப்பு சொகுசு வாகனம் பெறுவதற்கு தேர்தல் உதவுகிறது. எனவே அவர்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பதில்லை.
கோழைகள்; போராடாமல் இருக்க தேர்தல் உதவுகிறது. எனவே அவர்களும் தேர்தலைப் பகிஸ்கரிப்பதில்லை.