•தோழர் சண்முகதாசனும் கோத்தாவின் ஆதரவாளரா?
“ தேர்தலை பகிஸ்கரிக்க சொல்லி யார் சொன்னாலும் அடிப்பேன். அது தமிழ்தேசிய கூட்டமைப்பாக இருந்தாலும்” என்று சுமந்திரனின் ஒரு தம்பி எழுதுகிறார்
“தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை. அதை மறுப்பது சட்ட விரோதம்” என்று இன்னொரு தம்பி எழுதுகிறார்
“தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்று கோருபவர்கள் கோத்தாவின் ஆதரவாளர்கள்” என்று வேறொரு தம்பி முத்திரை குத்துகிறார்.
இந்த தம்பிகள் “தேர்தல் பகிஸ்கரிப்பு” என்பது கஜேந்திரகுமாரின் கண்டு பிடிப்பு என்று நினைக்கிறார்கள்.
அதனால்தான் கஜேந்திரகுமாரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு தேர்தல் பகிஸ்கரிப்பை எதிர்க்கிறார்கள்.
பாவம். அந்த தம்பிகளின் அரசியல் அறியாமையை சுட்டிக் காட்டுவது எனது இப் பதிவின் நோக்கம் இல்லை.
மாறாக, தேர்தல் பகிஸ்கரிப்பு என்னும் சரியான அரசியல் பாதையை கொஞ்சமாவது அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.
இலங்கை அரசியலில் நான் அறிந்தவரையில் முதன் முதலாக தேர்தல் பகிஸ்கரிப்பு பாதையை முன்வைத்தவர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன் அவர்கள்.
“இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும். அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது” என்று அவர் தேர்தல் பாதையை பகிஸ்கரிக்க முன்வைத்த காரணத்தை விளக்குகிறார்.
அன்று தேர்தல் பாதையை பகிஸ்கரிக்க தோழர் சண்முகதாசன் முன்வைத்த காரணம் இன்றுவரை பொருத்தமாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல அவர் தேர்தலை பகிஸ்கரித்தபோது அதனை டல்லி சேனநாயக்காவுக்கோ அல்லது சிறிமாவோ பண்டார நாயக்காவுக்கோ ஆதரவானது என்று யாரும் கூறியதில்லை.
அதன்பின்பு ஈழத் தமிழர்கள் மத்தியில் 36 போராளி இயக்கங்கள் தோன்றியது. அவை யாவும் தேர்தல் பகிஸ்கரிப்பையே முன்வைத்தன. அப்போதும் கூட இந்த பகிஸ்கரிப்பு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு ஆதரவானது என்று யாரும் கூறியதில்லை.
ஆனால் இப்போது மட்டும் தேர்தல் பகிஸ்கரிப்பை கோருவோரை கோத்தாவின் ஆதரவாளர்கள் என்று சிலர் முத்திரை குத்துகிறார்கள். இனியாவது இவர்கள் தங்கள் அரசியல் அறியாமையை போக்கிக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment