• ஜனாதிபதி தேர்தலும் இலங்கை மக்களும்
குரங்கு கையில் பூ மாலையை கொடுத்துவிட்டு அது மாலையை பிய்க்குது, அறுக்குது என்று புலம்பவது எப்படி அர்த்த மற்றதோ, அதே போன்று குரங்கு அரசியல்வாதிகளின் கையில் பதவியைக் கொடுத்து விட்டு அவர் நாட்டை சீரழித்துவிட்டார் என்று கடந்த 71 வருடமாக மக்கள் புலம்புவதும் வழக்கமாகிவிட்டது.
கடந்த 2015 தேர்தலுக்கு 1280 மில்லியன் ரூபா செலவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்படியென்றால் இந்த தேர்தலுக்கு குறைந்தது 1500 மில்லியன் ரூபா செலவாகவுள்ளது.
அதேவேளை இலங்கையின் மொத்த கடன் 10313 பில்லியன் ரூபா என்று நிதி அமைச்சர் கூறினார். ஆனால் இது பொய் என்றும் உண்மையான கடன் தொகை 10702 பில்லியன் ரூபா என ஆடிட்டர் ஜெனரல் கூறுகிறார்.
பிரதமர் ரணில் டில்லி சென்ற போது இலங்கையின் மொத்த கடன் தொகை தனக்கு தெரியாது என்று பத்திரிகை பேட்டியொன்றில் கூறினார். நிதியமைச்சரோ 389 பில்லியன் ரூபா தவறாக கணக்கு சொல்கிறார்.
இன்று இலங்கை குடிமகன் ஒவ்வொருவர்; தலையிலும் 417913 ரூபா கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமார் நான்கு லட்சம் ரூபா கடனுடனே பிறக்கிறது.
கடன் வாங்குவது தவறு அல்ல. ஆனால் அது பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவ்வாறு இல்லை.
இலங்கையின் GDP growth rate 3.1 % என நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் உண்மையில் இது 2.7% என்று ஆடிட்டர் ஜெனரல் கூறுகிறார்.
வருமானத்தில் 70.1 வீதம் கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே போய்விடுகிறது. இதனால் எந்தவொரு அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாத நிலை.
எனவேதான் மகிந்த அரசானாலும் சரி அல்லது ரணில் அரசானாலும் சரி ஒருபுறம் அரசுக்கு சொந்தமான சொத்துகளை தனியாருக்கு விற்கின்றனர். மறுபுறம் நாட்டின் வளங்களை சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு தாரை வார்க்கின்றன.
மைத்திரி பதவியேற்றபோது செலவு வெறும் ஜயாயிரம் ரூபா என கூறப்பட்டது. அவர் செருப்புடனே நடந்து திரிகிறார். அவர் தனது வீட்டு சாப்பாட்டை கொண்டு வந்து தானே தன் கையால் சாப்பிடுகிறார் என்று எல்லாம் கூறி அவரை எளிய ஜனாதிபதி என்றார்கள்.
அந்த எளிய ஜனாதிபதி தன் மகளுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சாராய பார்லைசென்சுகளை வழங்கியிருப்பதாக இப்போது அறிகிறோம். அதுமட்டுமல்ல இந்த எளிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தலா 16 கோடி ரூபாவுக்கு குண்டு துளைக்காத கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு வேடிக்கை என்னவெனில் பிரதமர் ரணில் தனது அலரி மாளிகையில் இருந்து அருகில் இருக்கும் பாராளுமன்றத்திற்கு ஹெலிகெப்டரில்தான் சென்று வருகிறார். இருந்தும் அவருக்கும் 16 கோடி ரூபாவுக்கு சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் தங்கள் சுய இலாபங்களுக்காகவும், போலி பகட்டிற்காக கட்டுமானங்களை மேற்கொள்வதற்காகவுமே கடன்களை பெற்றனர்.
அதனால் தான் கடந்த காலத்தில் 11 பில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ள போதிலும், வெறும் 1.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களே நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.
அதனால் தான் கடந்த காலத்தில் 11 பில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ள போதிலும், வெறும் 1.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களே நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்கள், மிகவும் அதிகமான வட்டி வீதத்திற்கே பெறப்பட்டன. உதாரணமாக ஹபரண - கந்தளாய் வீதி புனரமைப்பிற்கு 0.75% என்ற வட்டி வீதத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறப்பட்ட அதேவேளை, வேறு பல கட்டுமான திட்டங்களிற்கு மிகவும் கண்மூடித்தனமாக 7.5% போன்ற அதிக வட்டிவீதத்திற்கு சில நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறப்பட்டுள்ளது.
குறைந்த வட்டிக்கு கடன் வழங்க பல நிறுவனங்கள் இருக்கையில் இவ்வாறு கடன் பெறுவதற்கான பிரதான காரணம் ஊழல் மோசடியேயாகும். ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் கடன் வழங்கும் போது சில நிபந்தனைகளை முன்வைக்கின்றன.
உதாரணத்திற்கு, கடன் தொகை சரியாக முதலிடப்படுகின்றதா, குறித்த உத்தேச திட்டம் எந்தளவு பிரயோசமானது, அதனால் சூழலியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றனவா, மக்கள் மீள குடியமர்த்தப்படும் நிலைமை வந்தால் அவர்களுக்கு சரியான விதத்தில் நஷ்டஈடு வழங்கப்படுகின்றதா எனபன அவற்றுட் சிலவாகும். இந்த நிபந்தனைகள் உண்மையில் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கின்ற நிபந்ந்தனைகளாகும்.
ஆனால் இவற்றிற்கு கட்டுப்பட்டால் அரசியல்வாதிகளுக்கு நிதி மோசடியில் ஈடுபட முடியாது என்பதால், நிபந்தனைகளின்றி அதிக வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறப்படுகின்றது. உமா ஓயா திட்டம், தெற்கு அதிவேக பாதை திட்டம், கடலோர ரயில் பாதையை விஸ்தரிக்கும் திட்டம், சூரியவெவ கிரிக்கட் மைதானத் திட்டம் போன்றவை இவ்வாறு அதிக வட்டிக்கு கடன் பெற்று செய்யப்பட்ட திட்டங்களாகும்.
0.75% வட்டி வீதத்தில் 100 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டால் 40 வருடங்களில் மீள் செலுத்தும் போது 30 கோடி ரூபாய் வட்டியையே செலுத்த வேண்டியேற்படும். ஆனால் 7.5% வட்டிக்கு கடனை பெறுவதால், 40 வருடங்களின் பின் 300 கோடி ரூபாயை வட்டியாக செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இது ஆட்சியாளர்களின் இலாபத்திற்காக அப்பாவி மக்களின் மீது ஏற்றிவைக்கப்படும் சுமையாகும்.
இன்றுடன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருமே தாம் பதவிக்கு வந்தால் இந்த கடன் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்போம் என்பதை மக்களுக்கு விளக்கிக் கூறவில்லை.
இந்த கடன் என்பது சிங்கள மக்கள் மீது மட்டுமல்ல தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட அனைத்து இலங்கை மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல அனைத்து இன தலைவர்களும் இது குறித்து எந்த அக்கறையும் இன்றி இருக்கிறார்கள்.
அதனால்தான் உறுதியாக கூறுகிறோம் “இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவருக்குமே பயன் அற்றது ஆகும்”
மகிந்த ராஜபக்ச, ரணில், மைத்திரி, கோத்தா, சஜித் இவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் மீது எவருக்குமே அக்கறை இல்லை. இவர்களுடைய அக்கறை எல்லாம் பதவி, ஊழல், லஞ்சம்தான்.
No comments:
Post a Comment