Sunday, June 30, 2013

13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்” என்னும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

லண்டன், ஈஸ்ட்காமில் இன்று (29.06.13) மாலை 5.30 மணியளவில் “13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்” என்னும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சார்ல்ஸ் அன்ரனிதாஸ் வழிப்படுத்தலில் ரவி சுந்தரலிங்கம், காதர், மனோகரன், பாறூக், சேனன், மருத்துவர் பாலா ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியில் சபையோரின் கருத்துரைகளுடன் கலந்துரையாடல் முடிவுற்றது.

தலைமையேற்று கலந்துரையாடலை வழிப்படுத்திய சார்ல்ஸ் அவர்கள் அண்மையில் டில்லியில் சுதர்சன் நாச்சியப்பன் ஏற்பாடு செய்த மாநாட்டிலும் கலந்து கொண்டவர். அவர் டெலோ அமைப்பு சார்பில் திம்பு பேச்சுவார்த்தையிலும் கலந்து கொண்டவர். முன்பு தமிழீழத்திற்காக தனது பங்களிப்பை வழங்கியவர் தனது நீண்ட கால அனுபவத்தினூடாக தற்போது 13வது திருத்த சட்டதிற்காக பாடுபடும் நிலைக்கு வந்திருக்கிறார். இந்த நிலை தனக்கு ஏன் வந்தது என்பது பற்றி அவர் விளக்கவில்லை.

அவரை தொடர்ந்து உரையாற்றிய ரவி சுந்தரலிங்கம் ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர். நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்டிருப்பதாக தனது பேச்சினூடே குறிப்பிட்டார். புலிகள் பலமாக இருந்த காலத்தில் வன்னி சென்று புலிகளின் மேல்மட்ட தலைவர்களுடன் உரையாடியவர். ஆனால் தற்போது “தமிழீழம் தோற்றுவிட்டது. இனி அது முடிந்து போன விடயம்” என்றார். அதுமட்டுமல்ல அவர் தனது உரையில் த.தே.கூட்டமைப்பு மாகாணசரபத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மாகாணசபையை பொறுப்பேற்று நடத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

13வது திருத்த சட்டம் தொடர்பாக ரவி சுந்தரலிங்கத்தின் கருத்துகளை தேசம்நெட் சோதிலிங்கம் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அதை பார்க்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை பயன்படுத்தவும்.

http://thesamnet.co.uk/?p=46614

http://www.youtube.com/watch?v=1ypgGBCl-E0


அடுத்து உரையாற்றிய மனோகரன் என்பவர் இந்தியாவின் உதவியின்றி இலங்கை தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்றும் இந்தியாவின் உதவியைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபடுவதை தவிர வேறு வழியில்லை என்றார். ஆனால் அனைவரும் ஒற்றுமையாக கேட்டும் இந்தியா இதுவரை ஏன் உதவி செய்ய வில்லை என்பதற்கோ அல்லது இனியாவது அவ்வாறு கேட்கும் பட்சத்தில் இந்தியா நிச்சயம் உதவி செய்யும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பது குறித்தோ அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை என்பதையே அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தியது ஆச்சரியமாக இருந்தது.

தமிழீழம் கேட்ட இலங்கை தமிழ் பிரமுகர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கணக்கில் 13வது திருத்திற்காக தற்போது பாடுபடுகிறார்கள். அதற்கும் இந்திய அரசின் உதவி பெற வேண்டும் என்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டு பிரமுகர்கள் தமிழீழத்திற்காக இந்திய அரசை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த வினோதம் உலகில் வேறு எங்கேயாவது நடந்திருக்கிறதா?

No comments:

Post a Comment