அகதி ஒருவர் சிறப்பு முகாமில் விடுதலை கோரி சாகும்வரை உண்ணாவிரதம்.
சசிகரன் என்ற அகதி தன்னை விடுதலை செய்யுமாறு கோரி செங்கல்பட்டு சிறப்புமுகாமில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் முன்பு திருப்பூர் சாதாரண முகாமில் இருந்துள்ளார். அங்கிருந்தபோது அவர் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்டார் என கியு பிரிவு பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி சிறப்பு முகாமில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சசிகரனின் தந்தையார் மதுரையைச் சேர்ந்த இந்திய தமிழர். அவர் வியாபார நிமித்தம் இலங்கை சென்றபோது அங்கு சசிகரன் பிறந்துள்ளார். உண்மையில் சசிகரன் ஒரு இந்திய தமிழராக இருந்தும் அவர் இலங்கையில் பிறந்த குற்றத்திற்காக அகதியாக கணிக்கப்பட்டு அகதி முகாமில் வைக்கப்ட்டார். அகதி முகாம்களில் வாழ முடியாமல் பலர் பல புலம் பெயர் நாடுகளுக்கு தப்பி செல்கிறார்கள். அகதிகளை வாழ வைக்க முடியாத தமிழக அரசும் அதன் காவல் துறையும் தப்பி செல்பவர்களை பிடித்து வழக்குப் போட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கிறது.
தனது சொந்த மீனவர்களையே காப்பாற்ற முடியாத தமிழக அரசிடம் தங்களை வாழ வைக்கும்படி சொந்த மூளை உள்ள எந்த ஒரு அகதியும் கேட்க மாட்டான். அவர்கள் வெளி நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்வதில் என்ன தவறு? தாங்களும் வாழ வைக்கமாட்டார்கள. வெளி நாடுகளுக்கு சென்று வாழவும் விடமாட்டார்கள் என்றால் இவர்களுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் என்ன வித்தியாசம்?
சிறப்பு முகாம்களை மூடி அங்குள்ள அகதிகளை விடுதலை செய்யுமாறு வைகோ கோரியுள்ளார். நெடுமாறன் , ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் கோரியுள்ளனர். சீமான் முகாம்களை மூடுமாறு போராட்டம் நடத்தியுள்ளார். ம.க.இக போன்ற புரட்சிகர இயக்கங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளன. இருந்தும் ஜெயா அம்மையாரும் கலைஞரும் மாறி மாறி ஆட்சி செய்கிறார்களேயொழிய சிறப்பு முகாம்களை மூட மறுக்கின்றனர்.
• தமிழீழம் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் ஜெயா அம்மையார் ஏன் சிறப்பு முகாம்களை மூட மறுக்கிறார்?
• ஜ.நா சென்று டெசோ தீர்மானம் கையளிக்கும் கலைஞர் ஏன் சிறப்பு முகாம்களை மூட தீர்மானம் நிறைவேற்றுவதில்லை?
தமிழக மக்களே சிந்தியுங்கள். சிறப்பு முகாமில் உள்ள அகதிகளின் விடுதலைக்கு தயவு செய்து குரல் கொடுங்கள்.
No comments:
Post a Comment