தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்போகின்றதா இந்தியா? – பா.அரியநேத்திரன்
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப்போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா மீண்டும் தமிழர்களை ஏமாற்றப்போகின்றதோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியிலும்,தமிழ் அரசியல் கட்சிகளிடையேயும் அடிப்படையாக இருந்துவரும் ஒரு மனநிலையாகும் தற்போது இந்த சந்தேக நிலை மேலும் வலுத்து வருகின்றது.
ஏனெனில் ஒரு புறம் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் அதேநேரம் மறுபுறம் இந்திய அரசாங்கம் இதுகுறித்து கவனம் செலுத்தாமல் இருப்பதுடன், இந்திய எதிர்கட்சி தலைவர்களின் அரசாங்கத்திற்கு சார்பான கருத்துக்கள் போன்றவை இந்தியா தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்போகின்றதோ என்ற தோற்றப்பாட்டை இலங்கை அரசியல் களத்தில் உருவாக்கியுள்ளது.
அண்மையில் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கான மந்திரக்கோல் தங்களிடமில்லை என்று கூறியிருந்தார்.
நான் கேட்கின்றேன் இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்குவதற்கு மட்டும் இந்தியாவிடம் மந்திரக்கோல் இல்லை என்றால் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அழித்தொழிப்பதற்காக இந்தியா எந்தக் கோலை பாவித்திருந்தது அப்போது பாவிக்கப்பட்டது இந்தியாவின் மந்திரக்கோலா? அல்லது தந்திரக்கோலா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா எந்த மந்திரக்கோலை அல்லது தந்திரக்கோலை கொண்டு செய்ததோ, தமிழர்களின் பேரம்பேசும் சக்தியை இந்தியா எந்த மந்திரக்கோலை அல்லது தந்திரக்கோலை கொண்டு செய்ததோ அதே மந்திர,தந்திர கோல்கலை கொண்டுவந்து இந்திய ஆட்சியாளர்களும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரவேண்டும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகளை இந்தியா பலவீனப்படுத்தி தமிழர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. அப்போதும் தமிழர்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தராமல் சென்றதால் இலங்கையில் ஆயுதப்போராட்டம் விஸ்வரூபம் எடுத்து
கடந்த 2009ம் ஆண்டு மீண்டும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்து தமிழ் மக்களை அநாதரவாக்கிய இந்தியா தமிழர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்து நான்கு வருடங்களாகின்றது
இது வரை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த சிறு முயற்சிகளை கூட இந்தியா முன்னெடுக்காமல் இருப்பது மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இந்தியா செய்யப்போகின்றதா என்ற கேள்விகளையே தோற்றுவித்துள்ளது.
எனவே முதலில் 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிரான சட்டமூலங்களை நிறுத்துவதற்கு இந்தியா முயற்சிப்பதுடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காக நேரடி தலையீட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் இந்தியா மீது தமிழ் மக்களுக்க சிறு நம்பிக்கையாவது ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment