Monday, August 31, 2015

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

• பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
மதுக் கடைகளை மூடும் படி கேட்ட மாணவர்கள் மீது பொலிஸ் தடியடி.
மதுவை ஒழிக்கும்படி கேட்போர் மீது பிணையில் வராதபடி பொய் வழக்குகள்.
66 கோடி ரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்து நாலரை வருடம் தண்டனை பெற்றவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைத்தமைக்கு அவர் தரும் பரிசு.
• சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.
மாணவர்கள் திரண்டு எழுந்தால் ஆட்சி நிலைக்க முடியாது.
• மதுவிற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் தமிழக அரசு மக்களை அடக்க காவல் துறையை ஏவுகிறது.
மக்கள் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை.
மக்களை மதிக்காத அரசுகள் தூக்கியெறியப்பட்டதே வரலாறு.
ஜெயா அம்மையார் மீண்டும் சிறை செல்லும் நாள் விரைவில் வரும்.
மாணவர்களுடன் அனைத்து மக்களும் இணையட்டும்.
மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்!

ஜெயா அம்மையாரின் ஆட்சியால் தமிழகம் தலை குனிகிறது!

• ஜெயா அம்மையாரின் ஆட்சியால்
தமிழகம் தலை குனிகிறது!
இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மதுக் கடைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கிய பெருமை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமே!
மதுவிற்கு எதிராக போராடிய மாணவர்களை தாக்கிவிட்டு மதுக் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கும் ஒரே நாடு தமிழ்நாடு மட்டுமே!
மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்தவிட்டு மதுக்கடைகளுக்கு பெண் காவலர்களை பாதுகாப்பிற்கு வழங்கியிருக்கும் ஒரே பெண் முதலமைச்சர் ஜெயா அம்மையார் மட்டுமே!
மதுவிற்கு எதிராக போராடிய சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு வீட்டுக்காவல். மதுவிற்கு எதிராக போராடிய 9வயது சிறுவனையும் கைது செய்து வழக்கு போடும் ஒரே அரசு தமிழ்நாடு அரசு மட்டுமே!
இனி
"அம்மா" காவல் நிலையத்தில்
"அம்மா" டாக்ஸ்மார்க் பிரிவு தொடங்கப்படும்.
அங்கு "அம்மா" பியரை
"அம்மா" தொண்டன் பொலிஸ் காவலுடன் குடிப்பான்.
இது ஆச்சரியமில்லை. ஏனெனில்
தமிழ்நாட்டில் நடப்பது "அம்மா" ஆட்சியல்லவா!

தவிச்ச முயல்

 தவிச்ச முயல்
லண்டனில் லூசியம்சிவன் கோவில் மண்டபத்தில் 30.05.2015 யன்று ந. வினோதரன் எழுதிய "தவிச்சமுயல்" நூல் வெளியீடு இடம்பெற்றது.
என். கெங்காதரன் அவர்களின் தலைமையில் இந் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
திருவேணி சதீஸ் அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்கள்.
மு.நித்தியானந்தன், எம்.பௌசர், ராஜினி நடராசா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக நூல் ஆசிரியர் ந. வினோதரன் ஏற்புரை வழங்கினார்.
நூல் ஆசிரியர் வினோதரன் அவர்கள் தனது கிராமத்து மண் வாசனையுடன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே "தவிச்சமுயல்" ஆகும்.
போர் தந்த வலிகள், அம் மக்கள் அனுபவித்த வேதனைகள் அவரது கிராமத்து மண் வாசனையுடன் பதிவு செய்ய முயன்றுள்ளார்.
தற்போது லண்;டனில் வசிக்கும் நாலாசிரியர் தனது முன்னுரையில் " அகதியாக உலகெல்லாம் ஓடி ஓடி உலைந்தாலும் இந்த பிறப்புணர்வு மறுக்கும் யாருடனும் மண்டியிட்டு சமரசப்படவும் முடியவில்லையே!" என குறிப்பிட்டுள்ளார்.
அவரிடமிருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்.

• லண்டனில் நடைபெற்ற இரு நிகழ்வுகள்

• லண்டனில் நடைபெற்ற இரு நிகழ்வுகள்
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் 25.07.2015 யன்று "தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் " சார்பில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ந.சுசீந்திரன் வழிப்படுத்தலில் முதல் நிகழ்வாக தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருந்த கவிஞர் திலகபாமா உரையாற்றினார். சமூக செயற்பாட்டாளரான திலகபாமா தனது உரையில் பெண் எழுத்தும் எழுத்தின் அரசியலும் பற்றிக் குறிப்பிட்டார்.
இரண்டாம் நிகழ்வாக பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றினார். இவர் அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழக திரைப்படத்துறை பேராசிரியராவார். இவர் தனது உரையில் "தேடலும் வாசிப்பும் திரைப்படங்களை முன்வைத்து" உரையாற்றினார்.
இறுதியாக வந்திருந்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுசீந்திரன் திறம்பட வழி நடத்தினார். உரையாற்றியவர்கள் சுருக்கமாக அதே நேரம் பொருள் பொதிந்த உரையை வழங்கினார்கள். உண்மையிலே ஒரு நல்ல நிகழ்வாக இது அமைந்தது.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் பணி பாராட்டுக்குரியது.
அவதானிப்பு:-
ஈஸ்ட்காம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவர்கள் கவிஞர் திலகபாமா அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
தனது ஈஸ்ட்காம் நகருக்கு வருகை தரும் தமிழர்களை கௌரவிப்பதில் போல் சத்தியநேசன் அவர்கள் எப்போதும் முன் நிற்பவர். ஆனால் இந்த பொன்னாடை போர்த்தும் கலாச்சாரம் லண்டனுக்கு தேவையில்லை என நாம் கருதுகிறோம். இதை கவுன்சிலர் கவனத்தில் எடுப்பார் என நம்புகிறோம்.

• இவர்களின் அழு குரல் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு ஏன் கேட்பதில்லை?

• இவர்களின் அழு குரல் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு ஏன் கேட்பதில்லை?
ஒருவர் ஒரு வருடத்தில் தீர்வு என்கிறார்.
இன்னொருவர் ஒரு நாடு இரு தேசம் என்கிறார்.
மற்றொருவர் அதிக சீட் தந்தால் அதிக பேரம் பேசுவேன் என்கிறார்.
ஆனால் யாருமே இந்த காணாமல் போனவர்கள் பற்றி
எந்த தீர்வும் கூறுவதில்லையே?
இவர்கள் ஈழம் கேட்கவில்லை.
இவர்கள்; சமஸ்டி கேட்க வில்லை.
இவர்கள் கேட்பதெல்லாம் காணாமல் போன தமது உறவுகளை
கண்டு பிடித்துத் தாருங்கள் என்பதே!
இவர்களிடம் வாக்கு பிச்சை கேட்பவர்கள்
ஏன் தக்க பதில் கூற மறுக்கிறார்கள்?
காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியாதவர்கள்
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய முடியாதவர்கள்
அகதிகளை மீள் குடியேற்றம் செய்ய முடியாதவர்கள்
ஒரு வருடத்தில் தீர்வு தருவார்கள் என்று எப்படி நம்புவது?
சமஸ்டி பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்
வானம் எறி வைகுண்டம் போவதை நம்ப முடியுமா?
தேர்தலுக்கு தேர்தல் மட்டும் மக்களை சந்தித்து
தமது பதவிக்காக பொய் வாக்குறுதி கொடுக்கும்
இந்த போலி அரசியல்வாதிகளை இனியும் நம்பலாமா?

• முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு

• முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு
பிரபாகரன் சம்மதித்தால் ஒரு இரவில் தமிழர்களுக்கான தீர்வை பெற்று தருவேன் என முன்னர் பல தடவை நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.
இப்பொது பிரபாகரன் இல்லாமல் 6 வருடம் கழிந்து விட்டது. அதாவது 2190இரவுகள் கழிந்து விட்டன. ஆனால் உங்களால் இதுவரை எந்த தீர்வையும் பெற்று தர முடியவில்லை.
உங்களால் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெற்று தர முடியவில்லை என்பதைவிட நீங்களே உங்கள் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்குரிய சுதந்திரத்தையும் தமிழ் மக்களே பெற்று தந்துள்ளார்கள்.
நீங்கள் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சயாட்சி என்கிறீர்கள். ஆனால் பேரினவாத கட்சிகள் எல்லாம் சுயாட்சியும் பிரிவினைக்கு ஒப்பானது என்றும் அதனை எற்க முடியாது என்றும் அறிவித்துள்ளன. எனவே நீங்கள் எப்படி சுயாட்சி பெறப்போகிறீர்கள்?
நீங்கள் உண்மையிலே தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு பெற முயன்றால் உங்கள் மீதான வழக்குகள் தூசு தட்டப்படும். நீங்கள் மீண்டும் பணாகொட இராணுவ முகாமில் அடைக்கப்படுவீர்கள். முன்பு நடந்ததுபோல் அங்கு கணுக்கால் நீரில் நிர்வாணமாக நீச்சல் அடிக்க வைக்கப்படுவீர்கள்.
"அகிம்சை போராட்ட மூலமோ அல்லது தேர்தல் பாதை மூலமோ தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் பெற முடியாது. ஆயுதம் ஏந்திய போராட்ட பாதை மூலமே தீர்வு பெற முடியும்." இதனை நீங்களே முன்பு மக்களுக்கு கூறினீர்கள். அந்த வரிகளை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஜே.வி.பி- "மாக்சிய" இனவாதிகள்?

• ஜே.வி.பி- "மாக்சிய" இனவாதிகள்?
தமிழீழத்தை பிரிவினை என்று எதிர்த்தார்கள்
சமஸ்டியையும் பிரிவினை என்று எதிர்க்கின்றார்கள்.
வட- கிழக்கு மாகாண சபையை வழக்கு போட்டு பிரித்தார்கள்
யுத்தத்திற்கு பங்கர் வெட்டிக் கொடுத்தார்கள்
ராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்தார்கள்
மகிந்தவின் இன அழிப்பக்கு துணை போனார்கள்
இத்தனையும் செய்துவிட்டு கொஞ்சம்கூட கூச்சமின்றி
தங்களை "மாக்சியவாதிகள்" என்று அழைக்கிறார்கள்.
தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இவர்கள் "மாக்சியவாதிகள்" என்றால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்த கால்மாக்ஸ் இனவாதியா?
ஜே.வி.பி பற்றி தோழர் சண்முகதாசன் கூறியது,
"ஜே.வி.பி நடத்திய வகுப்புவாத பிரச்சாரம் பற்றி சந்தேகத்திற்கு இடமில்லை. மலையக தமிழர்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளின் பகடைக்காய்கள் என்று அவர்களுடைய ஜந்தாவது விரிவுரை கூறியது. ஜே.வி.பி புதியதோர் கலவையைச் செய்தது. அது வகுப்புவாதத்துடன் பரட்சிகர வார்த்தைகளைக் கலந்தது." ( பக்-239. ஓரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்)
அன்று தோழர் சண்முகதாசன் கூறியது உண்மைதான் என்பதை தற்போது ஜே.வி.பியினர் நன்கு நிரூபித்து வருகின்றனர்.
இதுவரை
மாக்சிய "சந்தர்ப்பவாதிகள"; அறிந்திருக்கிறோம்.
மாக்சிய "திரிபுவாதிகள்" அறிந்திருக்கிறோம்
மாக்சிய "சீர்திருத்தவாதிகள்" அறிந்திருக்கிறோம்.
ஆனால் இப்பொது ஜே.வி.பி மூலம்
மாக்சிய "இனவாதிகள்" அறிகிறோம்.