ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தீர்மானிக்கவிருக்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகள்!
பெரும்பான்மையின சிங்கள வாக்குகள் இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளே இம்முறை தீர்மானிக்கவிருக்கின்றன.
யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதைவிட யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதே தமிழ்மக்களின் தெரிவாக இம்முறை உள்ளது.
தமிழ்மக்களின் சார்பாக பேரம் பேசியிருக்கக்கூடிய தமிழ்தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனையுமின்றி மைத்திரியை ஆதரிக்க தீர்மானித்திருப்பதன் மூலம் மீண்டும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
சிறையில் இருப்பவர்களின் விடுதலை குறித்தாவது தமிழ்தேசியகூட்டமைப்பு நிபந்தனை விதிக்க தவறியிருப்பது அவர்களது சுயரூபத்தை அம்பலப்படுத்துகிறது.
சிங்கள கட்சியான ஜே.வி.பி கூட மொத்த வடமாகாணமே சிறைக்கூடமாக இருக்கிறது என பகிரங்கமாக கூறுகிறது. ஆனால் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னை கூறிக்கொள்ளும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து கூட பேச மறுக்கிறது.
இதுவரை யுத்த வெற்றியை காட்டி பிரச்சாரம் செய்து வந்த ஜனாதிபதி மகிந்த அவர்கள் இம் முறை அது பயன்படாது என்று தெரிந்து கொண்டமையினால் இந்திய நடிகர்களை காட்டுகிறார். சல்மான்கான் மட்டுமல்ல சாருக்கானையே அனுப்பி வைத்தாலும்கூட மோடியின் விருப்பம் நிறை வேறப்போவதில்லை. மகிந்த வெற்றி பெற போவதில்லை.
மகிந்த கும்பல் அச்சுறுத்துவார்கள். மிரட்டுவார்கள். முடியாது போனால் கலவரத்தைகூட உருவாக்குவார்கள். தமது வெற்றிக்காக எந்த முனைவரையும் போக தயாராக இருப்பார்கள். ஆனால் இறுதியில் வேறுவழியின்றி தோல்வியை தழுவுவார்கள். ஏனெனில் மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள்.
No comments:
Post a Comment