Wednesday, December 31, 2014

ஆயுத எழுத்து (நாவல்)

• ஆயுத எழுத்து (நாவல்)
ஒரு புலிப் போராளியின் ஒப்புதல் வாக்குமூலம்?
புலிகள் அமைப்பில் பல வருடங்களாக முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய சாத்திரி என்பவர் எழுதி வெளிவந்திருக்கும் நாவல் “ஆயுத எழுத்து”
இதுவரை ஈழப் போராட்டம் குறித்து சில நாவல்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஈழப் போராட்டம் பற்றிய நாவலாகவே வந்துள்ளது. ஈழப் போராட்டத்தில் அக்கறையுள்ளவர்கள் படிக்க வேண்டிய நாவல்களில் இதுவும் ஒன்று.
இதுவரை மாற்று கருத்தாளர்களால் புலிகள் அமைப்பு மீது முன்வைக்கப்பட்ட கருத்துகள் பல புலிகள் அமைப்பில் இருக்கும் சாத்திரி என்பவரால் இந் நாவலில் கூறப்பட்டிருக்கிறது. எனவே இது ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக கருத இடம் அளிக்கிறது.
உண்மை பெயர்களுடன் உண்மை சம்பவங்களை எழுதிவிட்டு எதற்காக நாவல் என குறிப்பிடுகிறார்; என்று புரியவில்லை? ஒருவேளை ஏதாவது சட்ட சிக்கல் வருமா என அஞ்சினாரா தெரியவில்லை?
• புலிகள் அமைப்பே துர்க்கை அம்மன் கோவிலில் கொள்ளையடித்தது.
• புலிகள் அமைப்பே பிரான்சில் கஜன், நாதன் ஆகியோரைக் கொன்றது.
• புலிகள் அமைப்பு ஆயுதங்களுக்காக போதைப் பொருள் கடத்தியது.
• புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார்.
இவ்வாறு பல செய்திகள் எழுதப்பட்டிருப்பது புலிகள் புனிதமானவர்கள் என நம்புவோருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் சாத்திரி அவர்கள் இவற்றிற்கு தேவையான ஆதாரங்களுடன் விபரமாக எழுதியுள்ளார்.
புலிகள் பலமாக இருக்கும்போது ஏன் இவற்றை தெரிவித்து நாவல் எழுதவில்லை என சிலர் கேட்கலாம். ஆனால் அப்போது எழுதவில்லை என்பதற்காக இப்போது எழுதக்கூடாது என்றோ அல்லது எப்போதும் எழுதக்கூடாது என்று அர்த்தம் இல்லையல்லவா!
புலிகளின் தவறுகள் தொடர்பாக உரையாடுவதற்கும் இனங் கண்டு கொள்வதற்கும் இந் நாவல் மூலம் சாத்திரி அவர்கள் பங்களித்துள்ளார். அந்த வகையில் அவரது பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியதே.
ஈழப் போராட்டம் குறித்து நிறைய எழுத்துக்கள் வரவேண்டும். அவை ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment