• தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றுகிறதா?
• தமிழகத்தில் லட்சக் கணக்கானவர்கள் பேரணி. தாயகத்தில் சொகுசு வாகனத்திற்கு தலைவர்கள் அணிவகுப்பு!
• இந்திய தூதுவரிடம் பெற்ற 10 கோடி ருபா தேர்தல் நிதிக்கு கணக்கு காட்டுவார்களா?
தமிழீழத்தை கைவிட்டுவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பு சத்தியக் கடதாசி கொடுத்துள்ளது.
தாம் தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டதாக தலைவர் சம்பந்தன் சென்னையில் வைத்து பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஆனால் கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசா எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அகிம்சைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
அகிம்சை போராட்டத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதால்தானே அன்று ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மாவை சேனாதிராசா கூட முன்னர் ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தியவர்தானே!
இன்று அவர் மீண்டும் அகிம்சை போராட்டம் என அறிவிப்பதன் நோக்கம் என்ன? இலங்கை அரசு அகிம்சை போராட்டத்தை மதிக்கும் என கருதுகிறாரா? அல்லது மக்களை ஏமாற்றி தொடர்ந்தும் பதவிகளை பெற துடிக்கிறாரா?
மாவை சேனாதிராசா எதற்காக அகிம்சைப் போராட்டம் நடத்தப் போகிறார்? தமிழீழத்திற்காகவா? அல்லது வேறு தீர்விற்காகவா? வேறு தீர்வு எனில் அது என்ன தீர்வு என்பதை அறிய தருவாரா?
தமிழ்தேசிய கூட்டமைப்பின் இன்னொரு தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் ஸ்கொட்லாந்து மாதிரி இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோருகிறார்.
இவருடைய கட்சியும் தலைவர் சம்பந்தனும் தமிழீழத்தை கைவிட்டு விட்டார்கள். இவருடைய (விசுவாச) இந்திய அரசும் தமிழீழத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந் நிலையில் இவர் வாக்கெடுப்பு கோருவது யாரை ஏமாற்றுவதற்கு?
யாழ் இந்திய தூதுவர் மகாலிங்கம் தேர்தல் நிதியாக 10 கோடி ருபாய் கொடுத்திருப்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அது குறித்து தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் கணக்கு காட்டவோ அல்லது கருத்து கூறவோ மறுப்பதன் மர்மம் என்ன? அப்படியாயின் தலைவர்கள் அதனை தமது சொந்த நிதியாக்கிவிட்டனர் என்பது உண்மையா?
இந்திய தூதுவரிடம் கை நீட்டி காசு வாங்கியாதால்தானே அவர் தமிழ் மக்கள் சிங்களம் படிக்க வேண்டும் எனக் கூறிய போது இந்த தலைவர்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை?
தமிழகத்தில் உள்ள மக்கள் ஈழத் தமிழர்களுக்காக லட்சக் கணக்கில் பேரணி செல்கிறார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள். ஆனால் எமது தமிழ் தலைவர்கள் தங்களுக்கு சொகுசு வாகனம் பெறுவதிலும் தூதுவரிடம் கோடிக் கணக்கில் பணம் பெறுவதிலுமே குறியாக இருக்கின்றனர்.
தங்களுக்கு ஓட்டுப் போட்ட தமிழ் மக்களுக்காக என்றுதான் இவர்கள் போராடப் போகின்றார்கள்?
No comments:
Post a Comment