•“மாமனிதர்” தோழர் தமிழரசனும்
மாமனிதரைப் பெற்ற மகராசியும்
மாமனிதரைப் பெற்ற மகராசியும்
போராடப் போன தன் மகன் திரும்பி வருவான் என காத்துக்கொண்டிருக்கும் தாயார். அந்த தாயாருக்கு நாம் எப்படி பதில் கூறப் போகிறோம்?
தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்- மாமேதை காரல் மாக்ஸ்
தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர்
தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்
இறுதியில் தமிழ் மக்களுக்காவே தன் உயிரை அர்ப்பணித்தவர்
ஆம். அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !
மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு மா, மா என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று.
தமிழக மாடுகளும் மன்னிக்கவும் மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா.
ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
வெள்ளைக்காரன் 350 கோடி ரூபாவை வசூலித்தபோது தம்மை அடிமைகளாக உணர்ந்து விடுதலைக்கு போராடிய தமிழ் இனம் இப்போது 85000 கோடி ரூபா வசூலிக்கப்படும்போது தான் சுதந்திரமாக இருப்பதாக கருதுகிறது.
ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை.
எனவேதான் "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்" என்று தோழர் தமிழரசன் கூறினார்.
தமிழக மக்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்று கூறியதாலேயே தோழர் தமிழரசன் தமிழக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழ்க்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மொத்த கடன் தொகை 55448 ரூபா. ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் இலவச பொருட்கள் பெறுமதி சுமார் 4000 ரூபா எனில் மிகுதி 51448 ரூபா எங்கே சென்றது?
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் 50 ஆயிரம் ரூபா. மாதாந்த சம்பளம் 50 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதியின் குடும்ப சொத்தின் பெறுமதி 45 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
மாதாந்த சம்பளம் 1 ரூபா மட்டுமே பெற்றுவந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் எப்படி கோடிக் கணக்கான ரூபா சொத்துக்கள் சேர்த்தார்கள்?
ஏன் இவர்களின் வருமானத்திற்கு மேலான சொத்தை இதுவரை பறிமுதல் செய்ய முடியவில்லை? அப்படியாயின் இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
இந்திய அரசின் கைப் பொம்மைகளாக இவர்கள் செயற்படுவதற்கு சலுகையாகவே இவர்களது ஊழல் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.
85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே.
இந்திய மத்திய அரசு, நேபாளத்திற்கு 14000 கோடி ருபாவையும், பூட்டானுக்கு 8000 கோடி ரூபாவையும், இலங்கைக்கு 10000கோடி ரூபாவையும், மங்கோலியாவுக்கு 6000 கோடி ரூபாவையும் வழங்கியுள்ளது.
ஆனால் 85000கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ்நாட்டிற்கு மழை வந்தபோது வழங்கிய உதவி தொகை வெறும் 1940 கோடி ரூபா மட்டுமே. புயல் வந்தபோது வழங்கிய தொகை வெறும் 350 கோடி ருபா மட்டுமே.
தமிழ்நாடு தனக்குரிய உதவியை பெற முடியாதது மட்டுமல்ல தன்னிடமிருந்து பெறப்படும் பணத்தை இலங்கைக்கு வழங்குவதைக்கூட தடுக்க முடியாத அடிமை நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தில்தான்; தமிழக மீனவனைக் கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பல் வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலைக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் முன்னரே உணர்ந்து சுட்டிக்காட்டியவர் தோழர் தமிழரசன்
அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார்.
இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment