Monday, April 29, 2019

கிராய் பிள்ளையாரும் இலங்கை ராணுவமும்

 கிராய் பிள்ளையாரும் இலங்கை ராணுவமும்
கரவெட்டியில் சோனப்புவெளிக்கு அருகில் இருக்கும் கோவிலே “கிராய் பிள்ளையார் கோவில்” ஆகும்.
இது கரவெட்டியில் ஒரு பழமையான பிரத்தி பெற்ற கோவில் ஆகும். அதன் வருடாந்த திருவிழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனது நண்பர் ஒருவர் இக் கோயில் திருவிழா படங்களை தொடர்ந்து தனது முகநூலில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது லண்டனில் இருக்கும் அந்த நண்பர் கரவெட்டியில் சிறுவனாக இருந்தபோது எம்முடன் சேர்ந்து மோக்கன்கிராயில் கிரிக்கட் விளையாடியவர்.
அப்போது தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதையும் கடவுள் மீது தனக்கு பயம் இல்லை என்பதையும் காட்டுவதற்காக அங்கு வேப்பமரத்தின் கீழ் இருந்த வைரவர் கோயில் சூலத்தின் மீது மூத்திரம் பெய்து காட்டியவர்.
அதுமட்டுமல்ல அந்த சூலத்தை பிடுங்கி எறியவும் முயன்றார். அப்படி செய்த அந்த நண்பர் இன்று பிள்ளையார் திருவிழாவை பகிர்வது ஆச்சரியம் தருகிறது.
எனக்கு சிறுவயது முதல் பிள்ளையாரைப் பிடிப்பதில்லை. ஏனெனில் எனது தாயார் கோயிலுக்கு என்னை அழைத்தச் செல்லும்போதெல்லாம் எனக்கு கடலை வாங்க பத்துச் சதம்தான் தருவார். ஆனால் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய 25 சதம் கொடுப்பார்.
இதனால் கோபம் கொள்ளும் நான் “நான் உன் பிள்ளையா? அல்லது பிள்ளையார் உன் பிள்ளையா? என்று என் தாயாருடன் சண்டை பிடிப்பேன். அவர் சிரித்து விட்டு செல்வார். ஆனால் அந்த 25 சதத்தை ஒருபோதும் அவர் எனக்கு தந்ததில்லை.
சரி இப்போது விடயத்திற்கு வருகிறேன். 1983 ம்ஆண்டு இறுதிப் பகுதியில் முதன் முதலாக இலங்கை ராணுவம் கரவெட்டியை சுற்றி வழைத்து தேடுதல் செய்தது.
தேடுதல் என்றால் நள்ளிரவில் வந்து ஊரைச் சுற்றி வழைத்து நிற்பார்கள். விடிந்ததும் ஊருக்குள் வந்து ஒவ்வொரு வீடு வீடாக தேடி இளைஞர்களை பிடிப்பார்கள்.
கரவெட்டியில் அதிகாலையில் பெண்கள் நல்ல தண்ணி எடுக்க அத்துளு வயல் கிணற்றுக்கு செல்வார்கள். அப்படி சென்ற பெண்கள் ராணுவத்தை கண்டதும் ஓடி வந்து எங்களுக்கு சொன்னதால் நாம் எல்லாம் முடக்காடு தோட்ட வெளிக்கு தப்பி சென்று விட்டோம்.
மாலைநேரம் தேடுதல் முடித்த ராணுவம் மீண்டும் பலாலி ராணுவ முகாமுக்கு புறப்பட ஆயத்தமானது. அப்போது அவர்களின் இரு கவச வாகனம் எதிர்பாராத விதமாக சோனப்பு வெளியில் புதைந்து விட்டது.
அவர்கள் எவ்வளவோ முயன்றும் கவச வாகனத்தை எடுக்க முடியவில்லை. எனவே வேறு வழியின்றி ஊரில் வந்து உதவி கேட்டார்கள்.
அப்போது ஊர்ப் பெரியர்கள் சிலர் “ நீங்கள் சப்பாத்து கால்களுடன் கோயிலுக்கள் சென்று விட்டீர்கள். அதனால்தான் பிள்ளையார் கோபத்தில் உங்கள் வாகனத்தை புதைத்து விட்டார்” என்று கூறியிருக்கிறார்கள்.
சிங்கள ராணுவ வீரர்கள் பெரும்பாலும் பௌத்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு இந்து கடவுகள்மீதும் நம்பிக்கை உண்டு. அதனால் பயத்தில் “என்ன செய்யலாம்?” என்று கேட்டார்கள்.
அதன்பின் ஊர்ப் பெரியவர்கள் கூறியபடி கைகால் கழுவி கோயில் வாசலில் பயபக்தியுடன் கற்பூரம் கொளுத்தி கும்பிட்டார்கள்.
பின்னர் ஊர்ப் பெரியவர்கள் கேட்டுக் கொண்டதால் நாம் இளைஞர்கள் எல்லோரும் சென்று கவச வாகனத்தை எடுப்பதற்கு ராணுவத்திற்கு உதவினோம்.
எங்களைக் கண்ட ராணுவத்தினர் ஆச்சரியத்துடன் “ நாங்கள் ஊருக்குள் வந்தபோது உங்களை யெல்லாம் காணவில்லையே? நீங்கள் எல்லாம் இந்த ஊர்க்காரர்கள்தானா? என்று கேட்டனர்.
நாங்களும் சிரித்துவிட்டு கவச வாகனத்தை மீட்டுக் கொடுத்தோம். அவர்கள் எமக்கு நன்றி சொல்லி விட்டு மீண்டும் கிராய் பிள்ளையாரை வணங்கிச் சென்றார்கள்.
எனக்கு ராணுவத்தினர் கிராய் பிள்ளையாரை நம்பியது ஆச்சரியம் தரவில்லை. ஆனால் வைரவருக்கு மூத்திரம் பெய்த என் நண்பன் பிள்ளையார் படத்தை நம்பி பகிர்வதுதான் ஆச்சரியம் தருகிறது.
அது சரி, உண்மையில் கிராய் பிள்ளையார் சக்தி உள்ளவரா?
நண்பர்களே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

No comments:

Post a Comment