Wednesday, April 29, 2020
ஈழத்து பெண் போராளியின் பெயரை
•ஈழத்து பெண் போராளியின் பெயரை
தன் மகளுக்கு சூட்டிய தோழர் வள்ளுவன்!
இங்கிலாந்தில் பெர்மிங்காம் நகரில் இருக்கும் தோழர் சாந்தன் சில தினங்களுக்கு முன்னர் எனது நலன் அறிவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது நான் அவரிடம் “தோழர் வள்ளுவன் மகள் முகநூல் வழியாக என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார்” என்ற விபரத்தை தெரிவித்தேன்.
உடனே அவர் “யார் ஊர்மிளாவா?” என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம். எப்படி இத்தனை வருடம் கழித்தும் கிட்டத்தட்ட 35 வருடம் கழித்தும் அப்போது மிகவும் சிறிய குழந்தையாக இருந்தவரின் பெயரை ஞாபகமாக வைத்திருக்கிறார் என்று.
புலவர் கலியபெருமாளுடன் மட்டுமல்ல அவர் மகன் வள்ளுவனுடன் நானும் பழகியிருக்கிறேன். ஆனால் வள்ளுவன் மகள் பெயர் எனக்கு நினைவில் இருக்கவில்லை.
அதனால் எப்படி அந்த பெயர் மறக்காமல் நினைவில் இருக்கிறது என்று சாந்தனிடம் கேட்டேன்.
“ஈழத்து பெண் போராளியான ஊர்மிளாவின் நினைவாகவே மகளுக்கு அப் பெயரை வைத்தேன்” என்று தோழர் வள்ளுவன் தன்னிடம் தெரிவித்ததாகவும் அதனால்தான் அப் பெயர் மறக்காமல் நினைவில் இருக்கிறது என்றும் சாந்தன் கூறினார்.
ஈழத் தமிழர்கள் பலருக்கே ஊர்மிளாவை தெரியாத நிலையில் தோழர் வள்ளுவன் அவர் நினைவாக தன் மகளுக்கு அந்த பெயரை சூட்டியிருப்பது உண்மையில் அவர் எந்தளவுக்கு ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்திருக்கின்றார் என்பதை காட்டுகிறது.
ஈழத்தில் முழு நேரமாக இயக்கத்திற்கு போராடச் சென்ற முதல் பெண் போராளி என்ற பெருமை ஊர்மிளாவுக்கு உண்டு.
சென்னையில் அவர் இருந்த காலத்தில் பாவலலேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தன் வீட்டில் வைத்து பாதுகாத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து திரும்பிய சில நாட்களில் அவர் வவுனியாவில் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்று அறிந்திருந்தேன்.
அவருக்கு புளட் இயக்கம் மட்டும் அந்நாளில் நினைவு முத்திரை வெளியிட்டிருந்தது.
தோழர் வள்ளுவன் ஊர்மிளாவை நேரில் சந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவர் ஊர்மிளாவின் நினைவாக தன் மகளுக்கு அப் பெயரை சூட்டியிருக்கிறார் என்பது அவர் எந்தளவு ஆழமாக ஈழப் போராட்டத்தை நேசித்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
தோழர் வள்ளுவன் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம்.
குறிப்பு - இன்று தோழர் வள்ளுவன் அவர்களின் பிறந்த தினம் ஆகும்.
Image may contain: 2 people, glasses
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment