Thursday, November 30, 2017

தமிழ் மக்களுக்கு தேவை இன்னொரு சம்பந்தர் அல்ல

•தமிழ் மக்களுக்கு தேவை
இன்னொரு சம்பந்தர் அல்ல
மாற்று தலைமையே தேவை!
நேற்றைய தினம் லண்டன் ஈஸ்ட்காம் நகரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கலந்துரையாடல் நடைபெற்றது.
புதிய அரசியல் அமைப்பும் சமகால அரசியலும் என்னும் தலைப்பில் மக்கள் சந்திப்பாக நிகழ்வு நடைபெற்றது.
மண்டபம் நிரம்பிய கூட்டம். அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அவர் புதிய அரசியலமைப்பு பற்றியும் சம்பந்தர் அய்யா மற்றும் சுமந்திரன் ஆகியோரின் துரோகங்கள் பற்றியும் தெளிவாக விளக்கினார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்குரிய மாற்று தலைமை ஒன்று இல்லாததாலேயே தொடர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வருகின்றனர்.
இந்த உண்மையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே அவர் தான் எப்படி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு தலைமையை கொடுக்க முடியும் என்பதை விளக்கி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற முயல வேண்டும்.
ஆனால் நேற்றைய கூட்டத்திலும் அவர் தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை இதற்கு பயன்படுத்த தவறிவிட்டார் என்றே கூற வேண்டியிருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டனவேயொழிய தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்று அவர் கூறினார்.
ஆனால் அதேவேளை தமிழீழம் கோருவது சட்ட விரோதம் என்பதால் தாம் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக கூறினார்.
தேர்தல் பாதையில் பயணித்துக்கொண்டு வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் தமிழ் மக்களுக்கான உரிமையை பெற முடியும் என சம்பந்தர் அய்யா கூறுகிறார்.
சம்பந்தர் அய்யா கூறிய வழியில் தமிழ் மக்களுக்கான உரிமையை இதுவரை பெற முடியவில்லை. எனவே மாற்று தலைமை என்பது இதற்கு மாற்றான ஒரு வழியைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தர் அய்யா கூறிய அதே வழியில்தான் தானும் பயணிக்கப்போவதாக கூறுகிறார்.
அவர் மாற்றுவழி எதையும் முன்வைக்காத படியால்தான் அவரை மாற்று தலைமையாக தமிழ் மக்களால் தெரிவு செய்ய முடியவில்லை.
குறிப்பு-
(1)இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று 1977ல் வண்ணை ஆனந்தன் பேசினார். அவர் பேசியபடி வெளவால் (இந்தியா) வந்தது. அதனிடம் வாங்கிய அடியின் வலியே இன்னும் மாறவில்லை. அதற்குள் மேற்கு நாடு வரும். அதன் மூலம் தீர்வு பெறுவேன் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார். ஆனால் இதை நம்பி இன்னொரு முறை அடிவாங்க தமிழ் மக்கள் தயாரில்லை.
(2)சம்பந்தர் துரோகி என்பதால் அவரை அய்யா என விழிக்கமாட்டேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். ஆனால் இந்த துரோகியுடன்தான் 2010 வரை இவரும் கூட இருந்தார் என்பதை மறந்துவிட்டாரா?
(3)இந்தியா குறித்து அதன் ஆக்கிரமிப்பு பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதுவும் கூறாதது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட மௌனமா என்று புரியவில்லை.

No comments:

Post a Comment