•“மெண்டல்” பத்மநாதன் மரணத்திற்கு
யார் நியாயம் கேட்பது?
யார் நியாயம் கேட்பது?
யாழ்ப்பாணத்தில் நெல்லியடி என்றதும் சந்தை, இரண்டு தியேட்டர் பாடசாலை என்பன நினைவுக்கு வரும்.
1970களில் நெல்லியடியில் புளங்கியவர்களுக்கு கூடவே மெண்டல் பத்மநாதனும் நினைவுக்கு வரும்.
அவர் ஒரு மனநோயாளி. அவரை எல்லோரும் “மெண்டல் பத்மநாதன்” என்றே அழைத்தார்கள்.
அவர் எப்போதும் நெல்லியடியிலேயே இருப்பார். பசித்தால் சங்குண்ணி கடை வாசலில் போய் நிற்பார். அவர்கள் உணவு வழங்குவார்கள்.
இரவில் ஏதாவது ஒரு கடை வாசலில் படுத்து தூங்குவார். மாதத்திற்கு ஒருமுறை யாராவது முடி வெட்டி குளிக்க வார்த்து விடுவார்கள்.
அவர் மிகவும் சாதுவானவர். யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காதவர். தன்னை நடிகை சரோஜாதேவி திருமணம் செய்ததாக கூறுவார்.
நாம் பாடசாலைக்கு செல்வதற்கு பஸ்க்கு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் எமது அருகில் வந்து “ நதி எங்கே போகிறது கடலைத் தேடி . நான் எங்கே போகிறேன் சரோஜாதேவியை தேடி “ என்று பாடுவார்.
இந்திய ராணுவம் ஈழத்தில் இருந்தவேளை ஒருநாள் அதிகாலையில் துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டன.
யாருக்கும் எதுவும் புரியவில்லை. காலை இந்திய வானொலியில் “ “நெல்லியடியில் புலிகளின் அதி முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று செய்தி வாசிக்கப்பட்டது.
விடிந்ததும் மக்கள் நெல்லியடிக்கு சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டது மெண்டல் பத்மநாதன் என்று அறிந்து கொண்டார்கள்.
இருட்டில் தவறுதலாக சுட்டுவிட்டோம் என்று இந்திய ராணவத்தினர் கூறியிருந்தால் மக்கள் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் ஒரு மனநோயாளியை சுட்டதும் அல்லாமல் அவரை புலிகளின் முக்கிய தளபதி என்று கூறியது மக்களுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது.
இலங்கை ராணுவம்கூட அவர் ஒரு மனநோயாளி என்பதை தெரிந்து அவருக்கு எதுவும் செய்யவில்லை.
ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் கொஞ்சம்கூட இரக்கமின்றி ஒரு மனநோயாளியை கொன்று விட்டார்களே என மக்கள் கவலை கொண்டனர்.
சரி. இப்ப இதை இங்கு கூறுவதற்கு என்ன காரணம்?
ராஜீவ் மரணத்தின்போது இறந்தவர்களுக்காக சிலர் நியாயம் கேட்கிறார்கள்.
அப்படியென்றால் இந்த மெண்டல் பத்மநாதன் மரணத்திற்கு யார் நியாயம் கேட்பது?
குறிப்பு- காஸ்மீரில் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை இந்திய ராணுவம் இழுத்துச் செல்லும் படம் கீழே உள்ளது. இந்திய ராணுவம் இறந்தவர் கொடிய பயங்கரவாதி என்கிறது. ஆனால் உண்மை அவர் ஒரு காஸ்மீர் மெண்டல் பத்மநாதனாகவும் இருக்கலாம்.
No comments:
Post a Comment