•இப்ப நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா?
ஒரு நாள் ஒரு தந்தை தனது மகனை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவர் ஒரு மனநல மருத்துவரை சந்தித்தார். அவர் பிரபல்யமான மருத்துவர். எந்த மெண்டல் நோயாக இருந்தாலும் குணப்படுத்துபவர் என பெயரெடுத்தவர். அவர் யாழ் பல்கலைக்கழகத்திலும் மனநலப் பிரிவு பேராசிரியராக கடமை ஆற்றுவதாக கூறுகிறார்கள்.
டாக்டர்- என்ன பிரச்சனை கூறுங்கள்?
தந்தை- டாக்டர்! இவன் என் மகன். இப்ப கொஞ்ச நாளாய் எப்ப பார்த்தாலும் மேலே விட்டத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கிறான்.
டாக்டர்- ஓ! அப்படியா. இது சின்ன பிரச்சனை. தம்பி! இப்படி அருகில் வா. ஏன் யோசிக்கிறாய்?
மகன்- என்ன படிக்கிறது என்பதில் குழப்பமாக இருக்கிறது. அதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
டாக்டர்- இதில் என்ன யோசிக்க இருக்கிறது? உனக்கு என்ன படிக்க விருப்பமோ அதைப் படிக்க வேண்டியதுதானே!
மகன்- அதில்தான் டாக்டர் குழப்பம். இப்ப ஒரு அசிரியரானால் மாதம் முப்பதாயிரம் ரூபா உழைக்கலாம்.
டாக்டர்- யேஸ்! அப்ப நீ ஆசிரியருக்கு படிக்க வேண்டியதுதானே?
மகன்- ஆனால் ஒரு வழக்கறிஞர் மாதம் ஜம்பதாயிரம் ரூபா உழைக்கிறார்.
டாக்டர்- ஆம். உண்மைதான். அப்ப நீ வழக்கறிஞருக்கு படிக்க வேண்டியதுதானே?
மகன்- ஆனால் ஒரு டாக்டரானால் மாதம் எழுபத்தைந்தாயிரம் ரூபா உழைக்கலாம் அல்லவா?
டாக்டர்- யேஸ்! யேஸ்! அப்ப நீ டாக்டருக்கு படிக்க வேண்டியதுதானே?
மகன்- ஆனால் எதுவும் படிக்காமல் அரசியல்வாதியானால் கோடிக்கணக்கான ரூபா உழைக்கலாம் அல்லவா?
டாக்டர்- அதெப்படி? எனக்கு புரியவில்லையே!
மகன்- இப்ப உதாரணத்திற்கு எங்கட மாவை சேனாதிராசா வை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு அலவன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு மாத சம்பளம் ஒன்றரை லட்சம் ரூபா. அதைவிட வாகன பெர்மிட் விற்று ஜந்து கோடி ரூபா. அதைவிட கனடாவில் நிதி சேகரிப்பு. அவுஸ்ரேலியாவில் நிதி சேகரிப்பு. அதையும்விட ஒவ்வொரு எலெக்சனுக்கும் இந்திய பண உதவி. இதையும்விட சுன்னாகம் பவர் கம்பனியிடம் லஞ்சம். மாவிட்டபுரத்தில் வீடு. இந்தியாவில் வீடு. கொழும்பில் அரச பங்களா. பாராளுமன்றத்தில் நித்திரை கொள்ளலாம். எல்லாவற்றையும்விட மற்ற வேலை செய்யிறவை எல்லாம் 60 வயதில் பென்சன் எடுக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதி சாகு மட்டும் பதவி வகிக்கலாம். அதையும்விட கனடாவில இருக்கிறவை கூப்பிட்டு மாலை போட்டு வாழும் வீணர் என்று பட்டம் கொடுப்பினம். இப்ப சொல்லுங்க டாக்டர் நான் அரசியல்வாதி ஆகட்டுமா?
“ஆமான்டா நீ அரசியல்வாதி ஆகடா” என்று சொல்ல வாயெடுத்த டாக்டர் அதனை சொல்ல முடியாமல் மேலே விட்டத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார்.
இப்போது தந்தை தந்தை மகனைப் பார்த்து “ என்னடா உனக்கு மெண்டல் என்று கூட்டி வந்தால் நீ டாக்டரை மெண்டலாக்கி விட்டாயே” என்றார். மேலும் “வாடா யாரும் வாறதுக்குள்ள நாம இங்கிருந்து ஓடிவிடலாம்” என்று சொல்லிக்கொண்டு மகனை இழுத்துக் கொண்டு அவசரம் அவசரமாக மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.
குறிப்பு- இப்போ இதைப் படிக்கிறவர்களிடம் ஒரு கேள்வி. ஒருவேளை நீங்கள் அந்த டாக்டராக இருந்தால் இந்த பையனுக்கு என்ன பதில் கூறுவீர்கள்?
No comments:
Post a Comment