Thursday, January 30, 2020

“சீ”தனம்?

“சீ”தனம்? படித்த பெண் அதுவும் வங்கியில் பணி புரியும் பெண் தற்கொலை என்ற செய்தி வந்ததும் நான் ஆச்சரியம் அடைந்தேன். அதைவிட ஆச்சரியம் என்னவெனில் அப் பெண் சீதனக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார் என்று வந்திருக்கும் செய்திதான். ஒரு கோடி ரூபா சீதனம் கொடுத்திருந்தும் ஒரு நேர உணவுகூட நிம்மதியாக உண்ண முடியாமல் அப் பெண் தற்கொலை செய்தார் என்கிறார்கள். ஈழத் தமிழர்கள் மத்தியில் சீதனக் கொடுமை இருப்பது உண்மைதான். ஆனால் அது தற்கொலை செய்யும் அளவிற்கு வந்து விட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் பெண் திருமணத்திற்கு பின் கணவரின் வீட்டில் சென்று வாழ்வதால் அங்கு “மாமியார் கொடுமை, மருமகள் ஸ்டவ் வெடித்து சாவு” என்ற செய்திகள் அடிக்கடி வருவது வழமை. ஆனால் ஈழத்தில் திருமணத்திற்கு பின் பெண் தன் தாய் வீட்டில்தான் தொடர்ந்தும் வாழ்கிறார். எனவே தாய் வீட்டில் சீதனக் கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு மிகவும் அரிது. என்.எம்.பெரரா நிதி அமைச்சராக இருந்தபோது சீதனக் கொடுமை பற்றி பாராளுமனத்தில் கூறியது, “ இலங்கையின் செல்வத்தில் 60வீதம் தமிழர்களிடம் இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் மத்தியில் இருக்கும் சீதனம் கொடுக்கும் பழக்கமும் அதற்காக சேமிக்கும் முறையுமே. எனவே ஒரு நிதி அமைச்சராக இந்த சீதன முறையை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு மனிதனாக இந்த கொடுமையை வெறுக்கிறேன்” என்றார். புலிகளின் காலத்தில் இந்த சீதனக் கொடுமை இல்லாமல் இருந்தது. அல்லது புலிகளின் துப்பாக்கியின் நிழலில் ஒளித்திருந்தது என்று கூறவேண்டியுள்ளது. ஏனெனில் இப்போது புலிகள் அற்ற நிலையில் அது தைரியமாக மீண்டும் தன் கொடுமையை காட்ட ஆரம்பித்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒருபுறம் கைகள் அற்ற கண்களும் அற்ற முன்னாள் போராளிகள் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெறும் இக்காலத்தில் படித்த பெண் அதுவும் வங்கியில் வேலையில் இருக்கும் பெண் தற்கொலை செய்வதை என்னவென்று சொல்வது? Image may contain: 2 people, possible text that says 'Rest in peace Krishna'

No comments:

Post a Comment