Tuesday, August 15, 2023
நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேள
நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை எனக்கு காவலாக நல்லதம்பி என்ற காவலர் இருந்தார்.
நான் தனிமையில் அடைக்கப்பட்டிருந்தபடியால் பொழுதுபோக்கிற்கு காவலுக்கு இருக்கும் அக் காவலருடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்த சிறைக்காவலர்களைப் பொறுத்தவரையில் நாம் கம்பிக்குள்ளே இருக்கும் கைதிகள். அவர்கள் கம்பிக்கு வெளியே இருக்கும் கைதிகள்.
அந்தளவுக்கு அவர்களையும் ஒரு கைதி போலவே சிறை நிர்வாகமும் தமிழக அரசும் நடத்தியது.
அதனால் அவர்களுக்கு ஒரு தொழிற்சங்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கு என்னால் ஆன உதவிகள் செய்தேன்.
உயர்நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக எனது வழக்கறிஞர் மக்கள் உரிமைகழகம் பி.வி. பக்தவச்சலம் அவர்களின் தொடர்பையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
இதனால் காவலர் நல்லதம்பி அவர்களுக்கு என்மேல் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது.
அதைவிட காவலர் நல்லதம்பி சிபிஎம் கட்சியின் தீவிர ஆதரவாளர். ஒவ்வொருநாளும் கடசி அலுவலகத்திற்கு சென்றுவிட்டே வேலைக்கு வருவார்.
நான் கம்யுனிஸ்ட் நூல்களை விரும்பி படிப்பதைக் கண்டு எனக்கு தன் கட்சியின் பத்திரிகை மற்றும் வெளியீடுகளை இரகசியமாக கொண்டு வந்து தருவார்.
அதில் செம்மலர் இதழ் நான் விரும்பி படிப்பதுண்டு. பார்க்க குமுதம் இதழ் போல் இருக்கும். ஆனால் குமுதம் ஒரு குப்பை. செம்மலர் ஆயிரம் மடங்கு சிறந்த சஞ்சிகை.
காவலர் நல்லதம்பி என்னுடன் உரையாடும் விடயங்களை நான் எழுப்பிய கேள்விகளை தமது தலைவர்களில் ஒருவரான மோகன் எம்.பி யிடம் கூறியிருக்கிறார்.
மோகன் அவர்கள் என்னை பார்வையிட விரும்பி மதுரை சிறைக்கு வந்தார்.
அவர் வந்த அன்று எனக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்தா இருந்தமையினால் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் அவர் காத்து நின்று சிறை வாசலில் என்னை அழைத்து வரும்போது பேசினார்.
ராஜிவ் காந்தி மரணமடைந்த அவ்வேளையில் ஒரு எம்பி அதுவும் சிபிஎம் எம்பி ஈழப் போராளியான என்னை சந்திக்க வந்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.
அப்போது “நீங்கள் ஏன் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை?” என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் “ஈழத்தில் பிரிவினையை ஆதரித்தால் இந்தியாவிலும் பிரிவினை கேட்பவர்களை ஆதரிக்க வேண்டி வருமே” என்றார்.
உடனே நான் “லெனின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டியது கம்யுனிஸ்டுகளின் கடமை என்கிறார். நீங்கள் கம்யுனிஸ்ட் என்றால் ஈழத்தில் தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய போராட்டத்தை எப்படி மறுக்க முடியும்?” எனக் கேட்டேன்.
அதற்கு அவர் “நல்ல கேள்வி. நீங்கள் உங்கள் கேள்வியை எழுத்தில் தாருங்கள். எங்கள் இளம் தலைவர் காரத் அவர்களிடம் கொடுத்து பதில் வாங்கி தருகிறேன்” என்றார்.
நானும் அவர் கேட்டுக்கொண்டபடி என் கேள்விகளை எழுத்தில் கொடுத்தேன்.
ஆனால் அதற்கு இதுவரை பதில் வரவில்லை. இனியும் வருமா என்று தெரியவில்லை.
இவர்கள் ஏன் தோழர் தமிழரசனின் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment