தோழர் லெனின் என்றவுடன் எல்லோரும் போல எனக்கும் நினைவுக்கு வருவது ரஸ்சியப் புரட்சியின் நாயகன் மாபெரும் ஆசான் தோழர் லெனினைத்தான். ஆனால் அதற்கடுத்து எனக்கு நினைவுக்கு வருவது தமிழ்நாடு விடுதலைப்படையை முன்னெடுத்த தோழர் லெனினே.
தோழர் லெனினை எனக்கு அறிமுகப்படுத்தியவர் புலவர் கலியப்பெருமாள் அவர்களே. ஒருமுறை புலவரை சந்திப்பதற்காக அவரது பெண்ணாடம் வீட்டிற்கு சென்ற போது ஒரு துடிப்பான இளைஞரைக் காட்டி இவர் எமது அமைப்பு தோழர், பெயர் லெனின் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் லெனின் பெயர் கொண்டவர்களை ஈழத்திலோ அல்லது தமிழகத்திலோ நான் இதற்கு முன்னர் சந்தித்ததில்லை. எனவே புலவரிடம் லெனின் என்பது அவரது சொந்தப் பெயரா? அல்லது அமைப்பு பெயரா எனக் கேட்டேன். புலவர் எனது கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக "இவரது அப்பா ஒரு மாக்சிய உணர்வாளர். அதனால்தான் அவர் தன் மகனுக்கு லெனின் என பெயர் வைத்திருக்கிறார்" என்று காரணத்தை விளக்கினார். புலவரை சந்தித்துப் பேசிய பின்பு நான் பெண்ணாடம் பஸ் நிலையத்திற்கு திரும்பி வந்தேன். அப்போது லெனின்தான் என்னை தனது சயிக்கிளில் ஏற்றிச் சென்று இறக்கிவிட்டார். அதுமட்டுமல்ல எனக்குரிய பஸ் வரும்வரை காத்திருந்து எனக்கு காப்பி வாங்கித் தந்து உரையாடினார். அப்போது அவருடனான உரையாடலில் போராட்டத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை நான் உணர்ந்தேன்.
லெனின் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்தார். அதற்கு காரணம் நான் ஒரு ஈழப் போராளி என்பதை விடவும் தோழர் தமிழரசனுடன் அவரது இறுதிக் காலங்களில் நான் கொண்டிருந்த நெருக்கத்தை புலவர் மூலம் அவர் அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன். அதேபோல் லெனினுடைய ஆர்வமும் உற்சாகமும் எதிர்காலத்தில் போராட்டத்தில் சேர்ந்து பயணிப்போம் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது. எதிர்காலத்தில் நாம் இருவரும் சேர்ந்து பயணிப்போம் என்று நினைத்தேனேயொழிய அவரைப் பற்றிய நூலுக்கு நான் அணிந்துரை எழுதவேண்டி வரும் என ஒருபோதும் நினைத்ததில்லை. லெனின் குறித்து எனது அனுபவங்களை சொல்வதற்கு முன்னர் தோழர் தமிழரசன் குறித்த எனது அனுபவங்களை சிறிது சுருக்கமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் தோழர் தமிழரசன் உருவாக்கி முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப்படையையே அவரது மறைவுக்கு பின்னர் ஒரு காலகட்டத்தில் லெனின் தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளார்.
நான் ஈழத்தில் "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர அமைப்பைச்; சார்ந்தவன். எமது அமைப்பு மாக்சிய லெனிய மாவோயிச தத்துவ வழிகாட்டியில் புதிய ஜனநாயகப் புரட்சியை இலக்காகக் கொண்டு செயற்பட்டது. புரட்சியின் வெற்றிக்கு புரட்சிகர சக்திகளின் ஜக்கியம் அவசியம் என்பதை உணர்ந்த எமது அமைப்பானது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் பல புரட்கர சக்திகளுடன் உறவை மேற்கொண்டது. அவ்வாறு நாம் உறவு வைத்திருந்த புரட்சிகர அமைப்புகளில் தோழர் தமிழரசனின் அமைப்பும் ஒன்றாகும். தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த பெண்ணாடம் மாநாட்டில் எமது பேரவை அமைப்பின் சார்பாக தோழர் நெப்போலியன் கலந்து கொண்டார். பாராளுமன்ற பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்த தோழர் தமிழரசனுக்கும் அவரது தமிழ்நாடு விடுதலைப்படைக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு எமது அமைப்பின் சார்பாக தோழர் நெப்போலியன் அப்போது உறுதியளித்திருந்தார்.
எமக்கு தமிழகத்தில் வாடிப்பட்டிக்கு அருகில் ஒரு பயிற்சி முகாம் இருந்தது. அதில் தோழர் தமிழரசனுக்கும் அவரது தோழர்களுக்கும் தேவையான இராணுவ பயிற்சியை வழங்கினோம். அதுமட்டுமல்ல தேவையான ஆயுதங்;கள் மற்றும் உதவிகளையும் வழங்கினோம். அதேNளை புலவரது பெண்ணாடம் வீட்டில் எமது தோழர்களுக்கு மாக்சிய அரசியல் கல்வி புலவர், தமிழரசன் போன்ற தோழர்களால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. எமது தோழர்களுக்கு மூன்று வேளையும் உணவு தயாரிப்பது, பரிமாறுவது மற்றும் தங்க வைப்பது போன்றவை யாவற்றையும் புலவரும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக் கொண்டார்கள். இது அவர்களுக்கு பெரும் சிரமம் கொடுப்பதாக எமது தோழர்கள் கருதினார்கள். புலவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ அவ்வாறு நினைக்க வில்லையாயினும் நாங்கள் தனியாக வேறு இடம் செல்ல வேண்டும் என விரும்பினோம். எனவே ஒரு நல்ல இடம் ஏற்பாடு செய்யுமாறு தோழர் தமிழரசனிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதன்படி அவர் பெரம்பலூருக்கு அருகில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் மலையடிவாரத்தில் ஒரு இரகசியமான இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த இடத்தில் எமது தோழர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தமிழரசன் மற்றும் அவரது தோழர்களால் மாக்சிய அரசியல் கல்வி போதிக்கப்பட்டது. அவ் வேளைகளில் தோழர் தமிழரசன் பல நாட்கள் தொடர்ந்து எமது தோழர்களுடன் தங்கியிருந்துள்ளார். அதுமட்டுமல்ல எமது தோழர்களை அழைத்துக்கொண்டு மலையுச்சிக்கு சென்று விறகுகள் பொறுக்கி வந்துள்ளார். பல கிராமங்களுக்கு எமது தோழர்களை அழைத்துச் சென்று ஏழை மக்களுடன் பழக வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர் மாக்சிய புரட்சிகர தத்துவத்தை மட்டுமன்றி மக்களுடன் எப்படி பழக வேண்டும் என்ற புரட்கர நடைமுறையையும் எமது தோழர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
இவ்வேளையில் இந்திய அரசானது ஈழப் போராளிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதையும், ஈழ விடுதலைப் போராட்டத்தை நசுக்க முனைவதையும் தோழர் தமிழரசன் கண்டார். எனவே அவர் "இந்திய அரசானது பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்ததுபோல் தமிழீழ விடுதலையையும் அங்கீகரிக்க வேண்டும்" எனக் கோரி மருதையாற்று ரயில் பாலத்தைக் குண்டு வைத்து தகர்த்தார். இந்த சம்பவம் தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த கோரிக்கையையும் முழு இந்தியாவும் அறியவைத்தது. இதனை விசாரணை செய்த உளவு நிறுவனங்கள் இதன் பின்னனியில் எமது அமைப்பு செய்த உதவிகளை அறிந்து கொண்டன. இதனால் ஆத்திரம் அடைந்த "றோ" உளவு அமைப்பு தமது கைக்கூலியான ஈரோஸ் அமைப்பிடம் என்னையும் தோழர் நெப்போலியனையும் கொல்லுமாறு கேட்டுக்கொண்டது. "றோ" உளவு அமைப்பு கேட்டுக்கொண்டபடி அதன் கைக்கூலி அமைப்பான ஈரோஸ் அமைப்பினால் எமது தோழர் நெப்போலியன் இலங்கையில் மலையகத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். இலங்கை இந்திய புரட்சிகர சக்திகளின் ஜக்கியம் என்னும் அடிப்படையில் தோழர் தமிழரசனின் அமைப்பினருக்கு செய்த உதவிக்காக தோழர் நெப்போலியன் பலியானார். தோழர் நெப்போலியனைக் கொன்று எமக்கும் தோழர் தமிழரசனுக்கும் இருந்த உறவை பிரிக்க முடியும் என "றோ" உளவு அமைப்பு போட்ட திட்டம் பலிக்கவில்லை. மாறாக தோழர் நெப்போலியன் படுகொலைக்கு பின்னரும் தோழர் தமிழரசனூடான எமது உறவு தொடர்ந்தது இன்னும் பலமாக.
இந்திய அரசு தனது நலன் கருதி முழு இலங்கையையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் இலங்கை இனப் பிரச்சனையில் தலையிடுகிறதேயொழிய தமிழ் மக்களின் நலன் கருதி தலையிடவில்லை என்பதை தோழர் தமிழரசன் நன்கு உணர்ந்திருந்தார். எனவே இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற ஈழத் தமிழ் மக்களும் தமிழக மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆயிரக் கணக்கில் தமிழக இளைஞர்கள் இலங்கை சென்று ஈழத் தமிழருடன் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் போராடுவதன் மூலமே இந்திய தலையீட்டை தடுக்க முடியும் என்று அவர் கருதினார். அதன்படி இலங்கையில் உள்ள நிலைமைகளை நேரில் அவதானித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள விரும்பினார். இலங்கை வருவதற்காக அவர் இரண்டு முறை வேதாரணியம் கடற்கரைக்கு வந்து காத்து இருந்தார். துரதிருஸ்டவசமாக அவரது விருப்பத்தை அப்போது எம்மால் நிறைவேற்ற முடியாமற் போய்விட்டது. ஒருவேளை அவரது அந்த பயணம் நடந்திருந்தால் பின்னர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அவலம் நிகழாமல் தவிர்க்கப்பட்டிருக்குமோ என இப்போது அடிக்கடி நினைத்து நான் வருந்துவதுண்டு.
இவ்வேளையில் தமிழகத்தில் தங்கியிருந்த ஈழப் போராளி அமைப்பு ஒன்றிடம் புலிகள் இயக்கத்தை அழிக்குமாறு கோரி பெருமளவு ஆயுதங்கள் இந்திய உளவு அமைப்பு "றோ" வினால் வழங்கப்பட்டது. அந்த ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட அந்த அமைப்பின் பொறுப்பான மூன்று நபர்களுக்கு அதனை புலிகளுக்கு எதிராக பயன்படுத்துவதில் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் தங்களை வைத்து புலிகளை அழிக்க இந்திய உளவு அமைப்பு போடும் திட்டத்திற்கு ஒத்துழைக்க விரும்பவில்லை. அதனால் அந்த ஆயுதங்களை இரகசியமாக எமது அமைப்பிடம் ஒப்படைக்க விரும்பினார்கள். அதற்குமாறாக தங்கள் மூவரையும் பாதுகாப்பு கருதி ஏதாவது வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டார்கள். அந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டால் உடனடியாக இலங்கைக்கு எடுத்தச் செல்வதற்குரிய வசதி அப்போது எமது அமைப்பிடம் இருக்கவில்லை. எனவே நாங்கள் அந்த விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இதனை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் தான் அந்த நபர்கள் வெளிநாடு செல்வதற்குரிய பணத்தை எற்பாடு செய்வதாகவும் எப்படியாவது அந்த ஆயதங்களை பெற்று தமக்கு தருமாறு கேட்டார்.
அந்த மூன்று நபர்களையும் வெளிநாடு அனுப்புவதற்கு அப்போது மூன்று லட்சம் ரூபா தேவைப்பட்டது. இதனை தனக்கு தெரிந்த பலரிடம் கூறி பணத்தை திரட்டித் தரும்படி தோழர் தமிழரசன் கேட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி உடனடியாக அந்த தொகையை திரட்ட முடியவில்லை. எனவேதான் வேறு வழியின்றி அவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் அவர் வங்கியை கொள்ளையடிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொண்ட உளவு அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி அவரையும் அவருடன் கூடச் சென்ற தோழர்களையும் கொன்று குவித்தனர். தோழர் தமிழரசனையும் அவரது தோழர்களையும் கொன்று அழித்ததன் மூலம் தமிழ்நாடு விடுதலைப்படையை அழித்துவிட்டதாக தமிழக காவல்துறையும் அதன் உளவு அமைப்புகளும் அறிக்கை விட்டன. தாம் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விட்டதாக அவை கனவு கண்டன.
என் வாழ்வில் பல இழப்புகளையும் நெருக்கடிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் தோழர் தமிழரசன் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்தது. அதேNளை தமிழ்நாடு விடுதலைப்படையை மீண்டும் கட்டுவதற்கும் தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைக்கான போராட்டம் தொடர்வதற்கும் என்னால் இயன்ற பங்களிப்பை செய்யவேண்டியது எனது கடமை என்ற உணர்வையும் அது எனக்குக் கொடுத்தது. அதனால் தோழைர் தமிழரசன் முன்னெடுத்த பாதையை தொடர்வதற்கு விருப்பம் கொண்ட தோழர்களை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை எமது அமைப்பின் சார்பாக நான் வழங்கினேன். மிகவும் குறுகிய காலத்திற்குள்ளேயே மீண்டும் தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டி எழுப்பினோம். இதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து அமைதிப்படை என்னும் பேரில் இலங்கை சென்ற இந்தியராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தது. பல பெண்களை பாலியல் வல்லறவு செய்தது. கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுடைய சொத்துக்களை சேதமாக்கியது. அதுமட்டுமல்ல இத்தனையையும் செய்துவிட்டு தொலைக்காட்சி மூலம் பொய்ப்பிரச்சாரம் செய்தது.
இவ்வேளையில் தாம்பரத்திற்கு அருகில் கௌரிவாக்கம் என்னும் இடத்தில் நான் இருந்து வருவதை அறிந்து கொண்ட கியூ பிராஞ் பொலிஸ் என்னை கைது செய்ய முயற்சி செய்தது. ஆனால் அந்தவூரைச் சேர்ந்த சில இளைஞர்களின் முயற்சியால் நான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக் கொண்டேன். தமிழகத்தில் எனக்கு நெருக்கடி அதிகரித்தமையினாலும் நாட்டில் எமது அமைப்பு பணியின் காரணமாகவும் நான் இலங்கை திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விமானம் மூலம் இலங்கை செல்ல முடிவு செய்து அதற்காக திருச்சி சென்றேன். அங்கு எனது பயணத்திற்கு வேண்டிய ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டி சில நாட்கள் தங்கியிருந்தேன். அவ்வேளையில் பெண்ணாடம் சென்று புலவரைச் சந்தித்தபோதுதான் லெனினை கண்டேன்.
லெனினுடனான எனது முதல் சந்திப்பு ஒரு சில மணி நேரமாயினும் போராட்டம் குறித்த அவரது ஆர்வமும் அக்கறையும் மட்டுமல்ல தோழமை அணுகுமுறையும் அவரை நான் நினைவில் கொள்ள வைத்தன. திருச்சியில் நான் தோழர் மாறனுடன் தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் சில பயிற்சிகளை பெற விரும்பினார். எனவே அதற்கு வசதியான இடத்தை தேடியபோது புலவர் தனது தோட்டத்திற்கு அருகில் பெண்ணாடம் ஆற்றங்கரையில் செய்யலாம் என்றும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் கூறினார். எனவே அதன்படி ஒருநாள் மாலை நேரம் தோழர் மாறனுக்கும் அவருடன் சேர்த்து புலவர் அறிமுகப்படுத்திய இன்னொரு தோழருக்கும் தேவையான பயிற்சிகளை நான் வழங்கினேன். அப்போது எமக்கு உதவியாகவும் பாதுகாப்பிற்காகவும் புலவரால் அனுப்பப்பட்டவர் லெனின். இது அவருடான எனது இரண்டாவது சந்திப்பாகும்.
பயிற்சியின் போது பாரிய சத்தங்கள் ஏற்பட்டன. இதனால் அங்கு வயல் வேலை முடிந்து வந்து கொண்டிருந்த பெண்கள் பயந்து அலறியடித்து ஓடினார்கள். அவர்களிடம் சென்று "பயப்படாதீர்கள். கோயில் திருவிழாவுக்காக வாணவெடி விட்டு பழகிறோம்" என சொல்லி சமாளித்தார். அதேவேளை அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு அருகில் தமது இரு நண்பர்களை நிறுத்தியிருந்தார். ஒருவேளை பொலிஸ் சந்தேகம் கொண்டு வெளியே வந்தால் தகவல் சொல்வதற்காக அவர்களை நிறுத்தியிருந்தாக பின்னர் அவர் என்னிடம் கூறினார். ஆனால் நல்ல வேளையாக சத்தங்கள் கேட்டிருந்தும் இருட்டு நேரமாகையால் பொலிசார் வெளியே வந்து பார்க்க முயலவில்லை.
பயிற்சி முடிந்ததும் புலவர் வீட்டில் எமது இரவு உணவை அனைவரும் உட்கொண்டோம். எல்லோரும் மிகுந்த மகிழ்வுடன் இருந்தோம். விடைபெறும்போது புலவர் எனது கரங்களைப் பற்றி " தோழர் நீங்கள் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தில் என்றும் நினைவு கூறத்தக்கவை. பாதுகாப்பாக ஊர் போய் சேர்ந்ததும் தகவல் அனுப்புங்கள்" என்றார். அதற்கு நான் "என் வரலாற்றுக் கடமையைத்தானே நான் செய்துள்ளேன்" என்று பதில் அளித்துவிட்டு அவருடைய வீட்டிலிருந்து கிளம்பினேன். என்னையும் தோழர் மாறனையும் லெனினே சயிக்கிளில் ஏற்றிச் சென்று பெண்ணாடம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார். அப்போது பல்வேறு இடங்களில் அவர் நிறுத்தி வைத்திருந்த பல இளைஞர்கள் வருவதைக் கண்டபோது எனது பாதுகாப்பு குறித்து அவர் கொண்டிருந்த அக்கறையை என்னால் உணர முடிந்தது. அதுமட்டுமன்றி புலவர் வீட்டில் நாம் அனைவரும் உணவு உட்கொண்டபோதும் பஸ்க்கு காத்திருக்கும் அந்த சொற்ப நேரத்திலும் காப்பி வாங்கி கொடுத்து என்னை அருந்த வைத்த அவரது ஆர்வம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரும் அன்று எதிர்பாராதவிதமாக பயிற்சிகளில் கலந்துகொண்டார். அதனால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இறுதியாக பஸ் வரும்போது நான் விடை பெற்றவேளை அவர் எனது கரங்களை இறுகிப் பற்றியதும் எமது பஸ் மறையும்வரை அவர் கை ஆட்டிக்கொண்டே நின்றதும் இன்றும் என் நினைவில் அழியாமல் இருக்கின்றது.
நான் பாதுகாப்பாக இலங்கையில் எனது ஊருக்கு போய் சேர்ந்ததும் தமிழ்நாடுவிடுதலைப் படையின் தாக்குதல் பற்றிய செய்திகளை அறிந்தேன். இந்திய அமைதிப்படை மேற்கொண்ட அக்கிரமங்களை மறைத்து பொய்ப்பிரச்சாரம் செய்தமைக்காக கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்று கிண்டியில் உள்ள நேரு சிலை மீதும், மற்றும் ஊட்டி பூங்காவில் உள்ள இந்திய வரைபட சின்னத்தின் மீதும் ஏக காலத்தில் தமிழ்நாடு விடுதலைப்படையினால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. எந்த தமிழ்நாடு விடுதலைப்படையை அழித்து விட்டதாக தமிழக காவல்துறை அறிக்கை விட்டதோ அதே தமிழ்நாடு விடுதலைப்படையால் அதுவும் ஏக காலத்தில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்ற செய்தி அறிந்து நான் மிகவும் மகிழ்சி அடைந்த அதே நேரத்தில் அத் தாக்குதலில் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தி என்னை மிகவும் கவலை கொள்ள வைத்தது. தோழர் மாறனுடன் நான் சில நாட்களே பழகியிருந்தாலும் அந்த சில நாட்களில் அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியிருக்கிறேன். உண்மையில் அவருடைய தோழமை உணர்வுகள் மறக்க முடியாதவை.
இலங்கையில் நான் இருந்தபோது நிலைமைகள் மிகவும் மோசமடைந்தன. எனது பாதுகாப்பு கருதி நான் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. எனவே விமான மூலம் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தேன். சென்னையில் நான் இருந்த வேளை தோழர் சண்முகதாசன் எழுதிய "ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்" என்னும் நூலை தமிழ்நாடு அமைப்பு கமிட்டி என்னும் புரட்கர அமைப்பின் "கிளாரா" அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டேன். அவ்வேளை ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் அரசு மத்திய அரசினால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தீவிரவாதிகளுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டியே அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரத்தையும் மத்திய அரசால் காட்ட முடியவில்லை. இதனால் கலைஞர் மீதும் அவருடைய தி.மு.க மீதும் மக்களின் அனுதாப அலை ஏற்பட்டது. எனவே தேர்தலில் தி.மு. க வே மீண்டும் வெல்லும் என்ற நிலை காணப்பட்டது.
கலைஞரின் தி.மு.க கட்சியானது தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்று நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த மத்திய புலனாய்வு துறையானது அதற்கு என்னைப் பயன்படுத்த முனைந்தது. அதற்காக கியூ பிரிவு டிஎஸ்.பி ராமையாவினால் கைது செய்யப்பட்ட நான் மத்திய புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டேன். தி.மு.க வினருடன் சேர்ந்து தமிழ்நாட்டில் பல இடங்களில் குண்டு வைக்கத் திட்டம் போட்டதாக வாக்குமூலம்; கொடுக்குமாறு அவர்கள் என்னை நிர்ப்பந்தித்தனர். அவர்களின் திட்டத்திற்கு சம்மதித்தால் சில மாதங்களின் பின்னர் என்னை விடுதலை செய்து நான் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் கூடவே எனக்கு பல லட்சம் ருபா பணம் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். மாறாக நான் அவர்களுடைய திட்டத்திற்கு சம்மதிக்க மறுத்தால் வழக்கு போட்டு பல வருடங்கள் சிறையில் அடைப்போம் என மிரட்டினார்கள். நான் அவர்களின் திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்தேன். அவர்கள் மிரட்டியபடியே என் மீது கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கை போட்டு மதுரை சிறையில் அடைத்தார்கள். நான் ஜாமீனில் விடுதலை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் அடைத்தார்கள். அதன் பின்பு எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தும் அவ்வாறு விடுதலை செய்யாமல் வேலூர் சிறப்பு முகாமில் என்னை அடைத்தார்கள். வேலூர் சிறப்புமுகாமில் வைத்திருந்தவேளை நீதிமன்றத்தில் என்னை ஆஜர் செய்யாமையினால் கொடைக்கானல் நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டேன். இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துறையூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டேன். துறையூர் சிறப்புமுகாம் மூடப்பட்டதையடுத்து பின்னர் மேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டேன். இவ்வாறு சிறை மற்றும் சிறப்புமுகாம் என மாறி மாறி மொத்தம் எட்டு வருடங்கள் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். இறுதியாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.
சிறப்பு முகாம் என்பது சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் ஆகும். ஏனெனில் இங்கு சிறையில் அளிக்கப்படும் வசதிகள் மற்றும் உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன. குறிப்பாக சிறையில் எமக்கு பத்திரிகை வழங்கப்படும். புத்தகங்கள் சஞ்சிகைகள் வாசிக்க அனுமதி அளிக்கப்படும். தொலைக்காட்சி பார்க்க வசதி செய்து தரப்படும். முக்கியமாக பார்வையாளர்கள யாவரும்; அனுமதிக்கப்படுவர். ஆனால் சிறப்புமுகாமில் இவை எதுவுமே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகை அனுமதிக்கப்படாததால் சாப்பாடு கட்டி தரும் பார்சல் பேப்பர்களை படித்து செய்திகளை அறிந்து வந்தோம். இதனை தெரிந்து கொண்ட கியூ பிராஞ் பொலிசார் உடனே எமக்கு புரியாத மலையாள கன்னட மொழிப் பேப்பர்களிலேலே சாப்பாடு கட்டித் தர ஒழுங்கு செய்து விட்டார்கள். இதனால் வெளியில் நடக்கும் செய்திகள் எதுவும் தெரிந்து கொள்ள முடியாத நிலையிலே நாம் வைக்கப்பட்டிருந்தோம். ஆனால் என்மீதான வழக்கிற்காக நீமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது நீதிமன்றத்தில் எனது வழக்கு தோழர்களிடம் இருந்து செய்திகள் அறியும் வாய்ப்பு எனக்கு இருந்தது. இதனையும் தடுக்க கியு பிராஞ் பொலிஸ் பல வழிகளில் முனைந்தது. இருந்தாலும் தோழர்கள் எனது வழக்கறிஞர் மூலமாவது உரிய செய்திகளை எனக்கு அறிய தந்துகொண்டிருந்தார்கள்.
நான் வேலூர் சிறப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்தவேளை ஆரம்பத்தில் ஒரு ஏட்டு மற்றும் ஒரு காவலராக மொத்தம் இருவரே என்னை அரச போக்குவரத்து பஸ்சில் கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வார்கள். ஆனால் திடீரென ஒரு முறை வழக்கத்திற்கு மாறாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று ஜீப் வண்டிகள் மற்றும் ஒரு பெரிய வண்டியில் என்னை பலத்த காவலுடன் கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றார்கள். அவ்வாறு அழைத்தச் செல்லும்போது திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டபடி என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு காட்டினார்கள். அப்போது அவர் தமிழ்நாடு மக்கள் விடுதலைப்படை தளபதி தோழர் நாகராசனை கடந்தவாரம் தான் சுட்டுக்கொன்றதை பெருமையாக கூறியதுடன் "அவன் ஒரு கொள்ளைக்காரன். எனவே தான் சுட்டுக் கொன்றேன்" என்று தன்னை நியாயப்படுத்தினார். மேலும் அதன்பின் அவருக்கு சம்பந்தம் இல்லாத நிலையிலும் அவர் எனக்கு காவலாக கொடைக்கானல் வந்தார். என்னை அவர் பார்க்க விரும்பியது. என்னிடம் தோழர் நாகராசன் படுகொலை பற்றி பேசியது. அத்துடன் காவலாக கொடைக்கானல் வந்தது எல்லாம் எனக்கு ஆச்சரியத்தையும் அவர்மீது சந்தேகத்தையும் கொடுத்தது. அதனால் கொடைக்கானல் நீதிமன்றத்தில் எனது தோழர்களிடம் இந்த விபரங்களைக் கூறினேன். உடனே அவர்கள் "இவர்கள் ஏதோ சதி செய்கிறார்கள். உங்களை சுட்டுக்கொல்ல திட்டம் போடுகிறார்கள் போல் இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று நீதிபதியிடம் மனுக் கொடுங்கள்" என்று எச்சரித்தார்கள். அவர்கள் அவ்வாறு கூறியது உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்ட நானும் உடனே காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபுவினால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறும் கோரி நீதிபதியிடம் மனுக் கொடுத்தேன். எனது மனுவைப் பெற்றுக்கொண்ட நீதிபதி அன்று இரவு என்னை கொடைக்கானல் கிளைச்சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். மேலும் அடுத்த நாள் பகல் வேளையில் என்னை வேலூர் முகாமிற்கு அழைத்தச் செல்ல வேண்டும் என்றும் அப்போது காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு காவலுக்கு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டார். தோழர்களின் எச்சரிக்கை உணர்வினாலேயே நான் காப்பாற்றப்பட்டதாக உணர்கிறேன். ஏனெனில் இதே காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபுவினால் பின்னர் சென்னையில் தோழர்கள் இராசாராமன் மற்றும் புதுக்கோட்டை சரவணன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ஒருமுறை என்னை நேரில் பார்க்க விரும்பிய தோழர் இளவரசன் புலவருடன் சேர்ந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் எனது வழக்கில் இல்லாததால் என்னை பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார். இதனால் புலவர் மட்டும் அனுமதி பெற்று என்னைப் பார்த்து பேசுவதற்காக நீதிமன்ற வாசலில் பொலிஸ் வண்டிக்குள் அமர்ந்திருந்த என்னிடம் வந்தார். புலவரை யார் என்று தெரியாத ஒரு பொலிஸ்காரர் "யோவ் பெரிசு அங்கால போய்யா, இங்காலயெல்லாம் வரக்கூடாது" என்று மரியாதைக் குறைவாக திட்டிவிட்டார். இதனால் பெரும் கோபம் அடைந்த புலவர் உடனே அந்த பொலிஸ்காரர் சட்டையை பிடித்து "எப்படி நீ உன்னைவிட வயசான என்னை மரியாதைக் குறைவாய் திட்டலாம்?" எனக் கேட்டு சண்டைக்கு போய்விட்டார். இதைப் பார்த்த எமது வழக்கு தோழர்கள் 15 பேரும் உடனே ஒடிவந்து புலவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அவர்கள் மட்டுமல்ல வழக்கறிஞர்கள் மற்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் எல்லாம் பொலிசாருக்கு எதிராகவே குரல் எழுப்பினார்கள். விடயம் விபரீதமாக மாறுவதை உணர்ந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உடனே தலையிட்டு அந்த பொலிஸ்காரரை புலவரிடம் மன்னிப்பு கேட்கவைத்து பிரச்சனையை மேலும் வளர விடாமல் முடித்துக்கொண்டார்கள். அதன் பிறகு புலவர் என்னிடம் பேசினார். அப்போது இளவரசன் சந்திக்க வந்திருக்கும் விடயத்தை கூறினார். இளவரசன் கொடுத்தனுப்பிய 500 ரூபா பணத்தை என்னிடம் ஒப்படைத்தார். தூரத்தில் இளவரசன் என்னை பார்த்தக்கொண்டு நிற்பது தெரிந்தது. ஆனால் அவருடன் நேரில் பேச வாய்ப்பு கிடைக்காமற் போனது எனக்கு வருத்தமாக இருந்தது.
இவ்வாறு பல சிரமங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலேதான் எனது தோழர்கள் வெளியே நடக்கும் செய்திகளை எனக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக தமிழ்நாடு விடுதலைப்படை மேற்கொண்ட காவல் நிலைய தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் யாவும் எனக்கு அறிய தந்தார்கள். தோழர் லெனின் தலைமையில் தமிழ்நாடு விடுதலைப்படை முன்னெடுத்த இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை அறிந்தபோது நான் பெரு மகிழ்ச்சி கொண்டேன். ஆனால் எனது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. நான் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த லெனின் இறந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரத்தை கொடுத்தது. முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் வசந்தா என்ற பெண்;ணை பொலிசார் பாலியல் வல்லுறவு செய்து கொன்றமைக்கு பழி வாங்குமுகமாக வெடி குண்டுகளுடன் சென்று கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் குண்டுகள் வெடித்து லெனின் பலியானார் என்ற விபரம் தோழர்கள் மூலம் அறிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல லெனினை காப்பாற்றியிருக்ககூடிய வாய்ப்பு இருந்தும் பொலிசார் வேண்டுமென்றே எந்த மருத்தவ சிகிச்சையும் அளிக்காமல் அவரைக் கொன்று விட்டார்கள் என்பதை அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.
அரசும் அதன் காவல்துறையும் போராளிகளைக் கொன்று குவிப்பதன் மூலம் போராட்டத்தை நசுக்கிவிட முடியும் என கனவு காண்கிறார்கள். ஆனால் போராளிகள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். அவர்களில் இருந்து ஆயிரமாயிரம் போராளிகள் முளைத்து எழுவர் என்ற உண்மையை இந்த அரசும் அதன் காவல்துறையும் உணர்வதில்லை. ஆனால் இந்த உண்மையை தோழர் தமிழரசனில் இருந்து லெனின் முளைத்து எழுந்ததும் அதன் பின்னர் லெனினில் இருந்து பல நூற்றுக்கணக்கான போராளிகள் முளைத்ததும்; நிரூபிக்கின்றன. இன்று தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையில் பலபேர் அணிதிரண்டு செல்வது, தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை நசுக்க முடியாது என்ற உண்மையை பறைசாற்றுகின்றது.
இந் நூலை எழுதியுள்ள தோழர் செந்தமிழ் குமரனின் பணியையும் உணர்வையையும் நான் பாராட்டுகிறேன். மிகவும் பாடுபட்டு இந்த வரலாற்று நூலை அவர் தந்திருக்கிறார். லெனினுடைய போராட்ட பங்களிப்பை மக்கள் அறிய வைக்கும் இவரது இந் நூல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனெனில் லெனின் மற்றும் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றிய பல தோழர்களின் வரலாறுகள் மேலும் வெளிவருவதற்கு இந்த நூல் வழி வகுக்கும் என நம்புகிறேன். முக்கியமாக தமக்கு ஆதரவாக குரல் கொடுத்த தோழர்கள் தமிழரசன், லெனின் , மாறன் போன்றவர்களை அறிந்துகொள்ளவும் ஈழத் தமிழர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
"மனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தி உள்ள ஒரு கல்விமானாகவும் சிறந்த ஞானியாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத்தான் வரலாறு மாமனிதர்கள் என ஏற்றுக்கொள்கிறது" என மாபெரும் ஆசான் கால் மாக்ஸ் அவர்கள் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, தங்களுக்காக வாழாமல் பரந்துபட்ட மக்களுக்காகப் போராடி தங்கள் வாழ்க்iகையை அர்ப்பணித்த தோழர்கள் தமிழரசன் மற்றும் லெனின் போன்றவர்கள் உண்மையில் மாமனிதர்களே. அந்த மாமனிதர்களை நினைவு கூர்வதற்கும் அவர்களைப் பற்றி அணிந்துரைiயாக சில வரிகள் கூறுவதற்கும் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
தோழர் பாலன்
லண்டன்
29.02.2016
சிறப்பு தோழர்
ReplyDeleteUnbelievabe stories, all historys,
ReplyDeleteமனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தி உள்ள ஒரு கல்விமானாகவும் சிறந்த ஞானியாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத்தான் வரலாறு மாமனிதர்கள் என ஏற்றுக்கொள்கிறது"
தோழரின் அணிந்துரை மிகச்சிறப்பு. தங்களின் வாழ்க்கையையே அர்ப்பணித்து மக்களுக்காக வாழ்ந்த தோழர்களைப் பற்றி படிக்கும் பொழுது இந்த உலகமே மறந்து விடுகிறது. தோழர்கள் விதைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் இலட்சியம் உயிருடனேயே இருக்கிறது.
ReplyDeleteHe is grate,I am salute for them.!!
Delete