Friday, March 31, 2017

•ரஜனியின் வன்னி விஜயம் சிறந்த முன் உதாரணமாக அமையட்டும்!

•ரஜனியின் வன்னி விஜயம்
சிறந்த முன் உதாரணமாக அமையட்டும்!
“லைக்கா” முதலாளியினால் கட்டப்பட்ட 150 வீடுகளை திறந்து வைப்பதற்காக நடிகர் ரஜனிகாந்த வன்னிக்கு விஜயம் செய்யவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியை லைக்கா முதலாளியோ அல்லது நடிகர் ரஜனியோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் ரஜனியின் விஜயத்தை இலங்கை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்த முனையும் என்பதால் ரஜனியின் விஜயத்திற்கு எதிர்ப்புகள் தோன்றியுள்ளன.
முதலாவதாக,
இவர்களால் வன்னியில் பாதிக்கப்பட்ட 150 தமிழ் குடும்பங்களுக்கு வீடு கிடைக்கவுள்ளது. எனவே இது வரவேற்கப்படவேண்டிய விடயமாகும்.
இரண்டாவதாக,
லைக்கா முதலாளி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா நிதியளித்தபோது, வன்னியில் சொந்த மக்கள் கஸ்டப்படும்போது நடிகர்களுக்கு எதற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என கேட்டிருந்தோம். எனவே இப்போது லைக்கா முதலாளி சொந்த மக்களுக்கு உதவ முன்வரும்போது அதனை பாராட்டி வரவேற்க வேண்டியது எமது கடமையாகும்.
மூன்றாவதாக,
லைக்காவும், ரஜனியும் வன்னி மக்களுக்கு செய்யும் உதவியினால் கிடைக்கும் வெற்றியையும் விளம்பரத்தையும் பார்த்து மற்ற நடிகர்களும் முதலாளிகளும இதேபோல் வன்னி மக்களுக்கு உதவிகள் செய்ய முன்வரக்கூடும். எனவே மற்றவர்களுக்கு முன் உதாரணமாக அமையும் இவ் விஜயத்தை வரவேற்போம்.
நான்காவதாக,
லைக்கா முதலாளியும் நடிகர் ரஜனியும் பாரிய முதலீட்டில் தமிழ்சினிமா வியாபாரம் செய்வதால் தமிழ் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக அவர்களால் எதுவும் கூறவும் முடியாது. செய்யவும் முடியாது.
ஜந்தாவதாக,
ரஜனி வன்னிக்கு விஜயம் செய்யும்போது காணாமல்போனோர் பிரச்சனை, இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படாமை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை, போன்ற பிரச்சனைகளை நேரில் காட்டி புரியவைப்போம்.
ஆறாவதாக,
இந்திய பிரதமர் மோடி விரைவில் யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். எனவே மோடியின் உற்ற நண்பர் ரஜனி மூலம் வன்னி மக்களின் பிரச்சனைகளை பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்த முனைவோம்.
ஏழாவதாக,
எமது மக்கள் மீது நம்பிக்கை கொள்வோம். ரஜனியோ அல்லது அவரது நண்பர் மோடியோ வருவதால் எமது மக்களின் போராட்ட உணர்வு ஒருபோதும் மழுங்கடிக்க முடியாது என்பதை எதிர்வரும் காலங்களில் போராட்டங்கள் மூலம் காட்டுவோம்.
எனவே ரஜனியின் விஜயத்தை எதிர்க்க வேண்டியதில்லை. அதையும் எமது மக்களின் நலனிற்காக பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment