தமிழ் இனமாய் பிறந்ததைவிட சிட்டுக்குருவியாக பிறந்திருக்கலாமோ?
இன்று சிட்டுக் குருவிகள் தினமாம்.
சிட்டுக் குருவிக்குகூட அக்கறையாக தினம் ஒதுக்கும் இந்த உலகம் தமிழ் இனத்தை மட்டும் ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறது?
தமிழ் இனமாக பிறந்து அடிமையாக வாழ்வதைவிட சிட்டுக்குருவியாக பிறந்து சுதந்திரமாக பறந்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது.
ஒரு சிட்டுக்குருவி இன்னொரு சிட்டுக்குருவியை அடக்கி ஆள்வதில்லை.ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடக்கி ஆள்கிறான்.
ஒரு சிட்டுக்குருவி இன்னொரு சிட்டுக் குருவியை ஆக்கிரமிப்பதில்லை. ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆக்கிரமித்து ஆள விரும்புகிறான்.
ஒரு சிட்டுக்குருவி இன்னொரு சிட்டுக் குருவியை சுரண்டி வாழ்வதில்லை. ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டி வாழ்கிறான்.
ஒரு சிட்டுக்குருவி அகதியாக வந்த இன்னொரு சிட்டுக்குருவியை சிறப்புமுகாமில் அடைத்துவிட்டு தன்னை "ஈழத்தாய்" என்று சொல்வதில்லை
ஒரு சிட்டுக்குருவி தன்னை தூக்கி கடலிலே எறிந்தால் கட்டுமரமாக வந்து காப்பாற்றுவேன் என்று இன்னொரு சிட்டுக் குருவியை ஏமாற்றுவதில்லை.
ஒரு சிட்டுக்குருவி தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது இனத்திற்கு துரோகம் செய்வதில்லை.
ஒரு சிட்டுக்குருவி தனக்கு கமாண்டோபடை பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தனது இளைஞர்களை காட்டிக் கொடுப்பதில்லை.
ஒரு சிட்டுக்குருவி தனது இனத்தை அழிப்பதை இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றமே என்று கூறுவதில்லை.
ஒரு சிட்டுக்குருவி தம் இனத்தை அடக்கி ஆள்பவர்களை நல்லாட்சி அரசு என்று வக்காலத்து வாங்குவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக சிட்டுக்குருவிகளுக்கு,
அரசியல் கைதிகள் விடுதலை பிரச்சனை இல்லை
காணாமல் போனோரை கண்டு பிடிக்கும் பிரச்சனை இல்லை
இடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்ய வேண்டிய பிரச்னை இல்லை
தமது நிலங்கை திருப்பி ஒப்படைக்குமாறு ராணுவத்திடம் கெஞ்ச வேண்டியதில்லை.
நான்,
தமிழனாக பிறந்ததற்காக கவலைப்படுவதா?
அல்லது சிட்டுக் குருவியை பார்த்து பொறாமைப்படுவதா?
தமிழனாக பிறந்ததற்காக கவலைப்படுவதா?
அல்லது சிட்டுக் குருவியை பார்த்து பொறாமைப்படுவதா?
No comments:
Post a Comment