Sunday, September 30, 2018

•ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று

•ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று
35 வருடமாக கனவு காணும் தமிழ் தலைவர்கள்!
“இலங்கை தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இந்தியா தொடர்ந்து பாடுபடும்” என இந்திய பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
கடந்த 34 வருடங்களாக இதே உறுதிமொழியைத்தான் 1000 தடவைகளுக்கு மேல் இந்தியா கூறியுள்ளது.
இதைக் கேட்டு கேட்டு தமிழ் மக்கள் சலித்து விட்டார்கள். இதை பிரசுரித்து பிரசுரித்து ஊடகங்களும்கூட சலித்து விட்டன.
ஆனால் தமிழ் தலைவர்களோ “இந்தியா தமிழர்களுக்கு உதவும்” என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் இந்த உறுதிமொழியை கேட்டவுடன் தமிழ் மக்களுக்கு இந்தியா உதவப் போவதாக நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை இந்தியா எந்த தீர்வையும் பெற்று தரவில்லை. மாறாக இந்தியா இரண்டாவது யுத்தக் கப்பலை அண்மையில் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதேபோன்ற ஒரு பாரிய யுத்தக் கப்பலை கடந்த வருடம் இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது.
யுத்தம் அற்ற நிலையில் எதற்காக இந்தியா யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது என்று இந்த கனவு காணும் தமிழ் தலைவர்கள் கேட்க வில்லை.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் எதற்காக இலங்கைக்கு இலவசமாக யுத்தக் கப்பல்களை வழங்க வேண்டும் என்று தமிழக தலைவர்களும் கேட்கவில்லை.
ஒவ்வொரு வருடமும் ஜெனிவாவில் இலங்கைப் பிரச்சனை சம்பந்தமான உரையாடல்கள் நடைபெறும் வேளையில் இந்திய அரசு தன் தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பும் அல்லது இலங்கை தூதுக் குழுவை இந்தியாவுக்கு வரவழைக்கும்.
இது ஏதோ தற்செயலாக நிகழும் சம்பவங்கள் அல்ல. உலகை ஏமாற்ற இந்திய அரசு திட்டமிட்டு அரங்கேற்றும் நாடகம்.
இதனை நன்கு புரிந்திருந்தும் எமது தமிழ் தலைமைகள் இந்தியாவின் நாடகத்திற்கு துணை போகின்றனர்.
ஒவ்வொரு முறையும் இந்திய குழுக்கள் வரும்போது தீர்வு வரப் போவதாக தமிழ் தலைமைகள் கதைகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் உண்மையில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையை இந்தியா ஆக்கிரமிப்பதே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இத்தனை அழிவிற்கு பிறகும் இத்தனை அழிவிற்கு காரணமான இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உதவும் என நம்பவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment