Friday, October 20, 2023
இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா?
•இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா?
மறப்பது மக்கள் இயல்பு. நினைவு படுத்த வேண்டியது எமது கடமை.
2009ல் என்ன நடந்தது என்பதே பலருக்கு மறந்துவிட்ட நிலையில் 1987ல் நடந்தது எப்படி நினைவு இருக்கும்?
அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987ல் பிறந்தே இருக்க மாட்டார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு” என்றும் “அமைதிப்படையை எதிர்த்து போரிட்டது ஒரு முட்டாள்தனம்” என்றும் ரீல் சுத்த முனைகின்றனர்.
•முதலில் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி பார்ப்போம்.
(1)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த அரசியல் இராணுவ நலன்கள்
(அ) இலங்கையின் வெளியுறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை
(ஆ)ஒலி ஒளி பரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை
(இ)திருகோணமலை தளத்தின் மீதான கட்டுப்பாடு உரிமை
(ஈ)இலங்கை ராணவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை,இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடனான உறவுகள் மீதும் கட்டுப்பாடு
(2)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த பொருளாதார நலன்கள்
(அ)இந்திய கொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும்
(ஆ)திரிகோணமலை எண்ணெய் குதங்கள் புத்துயிர்ப்பு செய்யப்படும். அதன் செயற்பாட்டிலும் லாபத்திலும் இந்தியாவுக்கு உரிமை அளிக்கப்படும்
(இ)சுமார் 400 கோடி ரூபா பெறுமதியான கட்டுமான பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்
(ஈ)பெற்றோல் மற்றும் எண்ணெய் கிணறுகள் இந்தியாவுக்கு அளிக்கப்படும்
(உ)இலங்கை வங்கி மற்றும் திட்டக்குழு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதார திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு
(ஊ)இந்திய ரயில் மற்றும் பேரூந்துகளை விற்பனை செய்யும் வாய்ப்பு
இவ்வாறு தமிழர் நலனைவிட இந்திய நலனை கொண்ட ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்கள் எதிர்த்தது தவறு என்று கூறுகின்றனர்.
•அடுத்து இந்திய ராணுவம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்
பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள்.
ஆனால் 1971இலும் இந்திய ராணுவம் இலங்கை வந்தது என்பதை இவர்கள் அறியவில்லை.
1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர்.
ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள்.
அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள்.
அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார்.
வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை.
அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார்.
அதுமட்டுமல்ல, இந்திய ராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது.
1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது.
ஆனால் 1987ல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது.
அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது.
இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது.
இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000 மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
800 அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்.
பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.
இந்திய ராணுவம் தமிழ் மக்களின் நலனுக்காக இந்த போரை செய்யவில்லை.
மாறாக தென்கிழக்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் மத்தியஸ்தன் என்கிற அரசியல் பாத்திரத்தையும் இப் பிராந்திய வல்லரசு என்கிற இராணுவ பாத்திரத்தையும் அது நிலை நிறுத்திக் கொண்டது.
இலங்கைக்கு வந்தது அமைதிப்படை அல்ல. அது இந்திய ஆக்கிரப்புபடை.
அதனை ஈழத் தமிழர்கள் எதிர்த்து போரிட்டது சரியே.
ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது என்பதையே ஈழத்தில் தமிழ்மக்கள் செய்து காட்டினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment