•லண்டனில் நடைபெற்ற குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவு நிகழ்வு!
இன்று 09.01.16 யன்று மாலை 6 மணிக்கு ஈஸ்ட்காமில் மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்; அவர்களின் நினைவு நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் சிறையில் உள்ளவர்களின் விடுதலை வேண்டியும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
தமிழின செயற்பாட்டாளர் முருகானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு குறித்து பரவலான விளம்பரம் செய்யப்பட்டிருந்தும் நிகழ்விற்கு தமிழ் மக்கள் மிகக் குறைந்தளவே வருகை தந்திருந்தனர்.
குட்டி யாழ்ப்பாணம் என வர்ணிக்கப்படும் ஈஸ்ட்காமில் ஒரு பத்துபேர்கூட குமார் பொன்னம்பலத்தை நினைவு கூரவோ அல்லது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காகவோ வந்து கலந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது.
குமார் பொன்னம்பலம் அவர்கள் சிறையில் இருந்து பல இளைஞர்கள் விடுதலை பெற உதவிகள் வழங்கியிருந்தார் என்று நிகழ்வை முன்னின்று நடத்திய முருகானந்தம் அவர்கள் குறிப்பிட்டார். அவரால் பயனடைந்தவர்கள் பலர் லண்டனில் இருக்கின்றபோதும் அவர்கள்கூட அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வரவில்லையே என அவர் கவலையுடன் தெரிவித்தார்.
தற்போது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கவேண்டும் என்று முருகானந்தம் அவர்கள் தனது பேச்சின்போது கேட்டுக்கொண்டார்.
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டலோ சிறை வைக்கப்பட்போது அவரை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து 26 வருடங்கள் ஒவ்வொரு நாளும் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை சுட்டிக்காட்டிய முருகானந்தம் , அதுபோல் இல்லாவிடினும் ஒருநாளாவது எமது உணர்வுகளை வெளிப்படுத்தி சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
லண்டன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளர் போஸ் அவர்கள் உரையாற்றும்போது குமார் பொன்னம்பலம் அவர்கள் எந்தளவு தியாகம் செய்தார் என்று பார்க்காமல் அவரது தியாகத்தை மதித்து நினைவு கூரப்படல் வேண்டும் என்றார். அதேவேளை சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து தமது தமிழ்தேசியகூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து அவர் எதுவும் கூறாதது ஏமாற்றமாக இருந்தது.
அவதானிப்பு- பிறந்தநாள் விழாக்கள், சாமத்திய சடங்கு கொண்டாட்டங்களுக்கு பெருவாரியாக குவியும் எமது மக்கள் இதுபோன்ற மாமனிதர் நினைவு நிகழ்வு, சிறையில் உள்ளவர்களின் விடுதலை நிகழ்வுகளுக்கு கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து கவலையை தோற்றுவிக்கின்றது.
No comments:
Post a Comment