•அந்த கையில் கட்டப்பட்டிருக்கும் மணிக்கூடு
இப்பவும் டிக் டிக் என அடித்துக்கொண்டே இருக்கிறது!
இப்பவும் டிக் டிக் என அடித்துக்கொண்டே இருக்கிறது!
17.04.2000 யன்று பாதர் இமானுவேல் அடிகளார் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களுக்கு எழுதினார் “தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க துணிச்சலுடனும் முதுகெலும்புடனும் நீங்கள் செயற்பட வேண்டும் இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள்”. இக் கடிதத்தை பாதர் முதுகெலும்புடன் எழுதும்போது அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டிருந்தது.
01.11.2003 யன்று பாதர் இமானுவேல் அடிகளார் அமெரிக்காவில் பேசும்போது “அநீதியான முறையில் நான் அடக்கப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டால் எந்த ஆயுதத்தையும் பாவித்து சண்டையிடும் உரிமை எனக்கு உண்டு” என்று கூறினார். அப்போது அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக் கொண்டிருந்தது.
31.07.2004 யன்று பாதர் இமானுவேல் அடிகளார் தான் எழுதிய நூல் ஒன்றை புலிகள் இயக்கத்திற்கு அனுப்பிவைத்தார். அதில் அவர் “ உண்மை எங்கள் விடுதலைக்கு வழி வகுக்கும்” என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார். அப்போதும் அவர் கையில் உள்ள மணிக்கூடு டிக் டிக் என்று அடித்துக் கொண்டிருந்தது.
அவருடைய கையில் உள்ள மணிக்கூடு டிக் டிக் என அடித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் இது பிரபாகரன் எனக்கு தந்த மணிக்கூடு என்று பெருமையுடன் கூறி வந்தார் பாதர் இமானுவேல் அடிகளார்.
அதே பாதர் இமானுவேல் அடிகளார் இப்போது இலங்கை சென்றுள்ளார். உலகின் வல்லாதிக்க சக்திகளுக்கு அடி பணிய தேவையில்லை என்று பேசிய பாதர் இலங்கை சென்று முதலில் கைகுலுக்கியது அமெரிக்க தூதுவருடனே. அப்போதும் அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டிருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் என கூறிய பாதர் இமானுவேல் அடிகளார் முதுகு குனிந்து அடுத்து கைகுலுக்கியது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு. அப்போதும் அவருடைய கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டிருந்தது.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ முன்வரவேண்டும் என்று ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார் பாதர் இமானுவேல் அடிகளார். அப்போதும் அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டு இருந்தது.
அவர் கையில் உள்ள மணிக்கூடு எப்போதும் போல் டிக் டிக் என்று அடித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் பாதர் இமானுவேல் அடிகளார் இப்போதெல்லாம் இது பிரபாகரன் தந்த மணிக்கூடு என்று சொல்வதில்லை.
No comments:
Post a Comment