ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
டென்மார்க்கில் வசித்துவரும் திருமதி வாணி தனேஸ்அவர்கள் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
திருமதி வாணி தனேஸ் அவர்கள் ஒரு சிறந்த உணர்வாளர். அவர் “அரும்புகள்” மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள திருமதி வாணி தனேஸ் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
அனைவருக்கும் வணக்கம் மீண்டும் தோழர் பாலன் அவர்களின் சிறந்த ஒரு படைப்பாக சமூக நலன் சார்ந்த நூலினை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் என்ற இந்த நூல் ஒரு சிறந்த புரட்சியாளனாக தமிழகத்தில் வாழ்ந்த போராளி தமிழரசன் என்பவர் பற்றியது.
இந்தியாவில் தனித் தமிழ்நாடு கோரி மக்களுக்காக தனது வாழ்வை அற்ப்பணித்தவரும் ஈழதமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் அதனை ஆதரிக்கும் படியும் இந்திய அரசை எதிர்த்து இறுதி வரை உறுதியோடு மார்க்சிச லெனினிய மாவோசிய சிந்தனையை அடிப்படையாக கொண்டு போராடிய தமிழரசன் அவர்களின் வரலாறு இது.
தோழர் தமிழரசனனுடன் ஆசிரியர் பாலன் அவர்கள் பயணித்த காலங்களையும் தாங்கி சிறந்த நூலாகவும், தமிழர்களின் போராட்ட வரலாற்றில் எதற்காக புரட்சியாளர் தமிழரசன் போன்றோரை வரலாற்றில் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
மக்களுக்காய் தோழர் தமிழரசன் செய்த தியாகங்களும் நூலில் இடம் பிடித்துள்ளது
புரட்சியாளர் தமிழரசன் உடன் சேர்ந்து பயனித்த தோழர்களின் தமிழரசன் பற்றிய கருத்து மற்றும் அவருடனான அனுபவங்களோடும் மிக முக்கியமாக இன்றுவரை தொடரும் இலங்கை மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சாதீயம், தீண்டாமை, பிரதேசவாதம் என்ற முகத்திரை அணிந்து நடந்தேறி வரும் மனித வதைகளும் அத்துமீறல்களும் இன்றும் தொடரும் சூழலில் நமது சமுகம் நாம் அனைவரும் தமிழ் மக்கள் என்ற கோட்பாட்டின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.
அப்படி ஒரு மக்கள் சக்தியாக நாம் ஒன்றுபட்டு நிற்கும் போதே எமது இலக்கை அடைய முடியும் என்ற புரட்சியாளர் தமிழரசன் அவர்களின் சரியான கணிப்பும் இந்த நூலில் முக்கிய இடம் வகித்துள்ளது
இந்திய அரசை நம்பாதே என்று புரட்சியாளர் தமிழரசன் சொல்லியதை ஈழ போராளிகளும் ஈழ அதாரவளர்களும் ஏற்காமையால் நாம் இன்றுவரை இந்திய அரசின் துரோகத்திற்கும் ஆக்கிரமிற்புக்கும் ஆளாகி வருகின்றோம் என்ற அறியாமையோடு நமது தற்போதைய அரசியல் தலைவர்கள் இருப்பதும் வருந்த வேண்டிய விடயம்.
அனைவரும் நமது விடுதலை வரலாற்றுக்காய் உழைத்தவர்கள்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அறிந்து கொள்வதோடு பாரபட்சமின்றி நம் நலனுக்காய் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த யாவருக்கும் வரலாறில் சரியான அங்கீகாரத்தை நாம் வழங்க வேண்டும் என்பதே இந்த நூல் ஆசிரியரின் ஆதங்கமும் ஆகும்.
உலகில் எந்த போராட்டமாக இருந்தாலும் நாம் விரும்பியும் விரும்பாமாலும் சில துன்பியல் சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க முடியாமல் போகின்றது.
காரணம் போராட்டத்தின் இலக்;கை நோக்கிய பயணத்தை முன்னிறுத்த வேண்டிய கட்டாயதிற்கு போராளிகள் தள்ளப்படுகிறார்கள் அப்படியான சம்பவங்களும் ஒளிவு மறைவின்றி இந்த நூலில் சொல்லப்படுகின்றது
கல்வியாலும் பண பலத்திலும் உலகத் தமிழர்களால் இந்தியா அரசு ஈழ தமிழர்களுக்கு வழங்கிய உதவியை விட அதிகமாகவே கொடுக்கும் நிலை உள்ளது.
இருந்தும் நமது ஒற்றுமை இன்மையாலும் அறியாமையாலும் மிக அதிகளவிலான பணங்கள் புலத்திலும் நாட்டிலும் கோவில்களில் முதலீடு செய்யப்படுகின்றமையும் நமது தாய் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகவும் அன்னிய நாடுகளின் முதலீடுகளுக்கும் சுரண்டல்களுக்கும் நாம் இடம் கொடுகின்றோம் என்பது பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இருகின்றதா என்ற கேள்வி இந்த நூலினை படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுத்தும் என நம்புகின்றேன்
முள்ளிவாய்காலில் நமது போராட்டம் முடிவு பெறவில்லை. அதன் வடிவமே மாறி உள்ளது. தொடர்ந்து அன்னிய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து எம்மை நாமே மீட்டெடுக்க உழைப்போம்.
எனது கருத்தை பகிர்ந்து கொள்ள இடமளித்த ஆசியர் அவர்களுக்கு எனது நன்றியும் மேலும் அவர் இது போன்ற சமூக நலன் சரர்ந்த படைப்புகளை படைக்க எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment